அழிவின் விளிம்பில் 15 இந்தியப் பறவைகள்

இந்தியாவில் உள்ள 15 பறவை வகைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அழியும் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதுவரை அச்சுறுத்தல் இல்லாத பட்டியலில் இருந்த 3 பறவை வகைகள், முன்பைவிட அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் வெளியிட்டுள்ள புதிய சிவப்புப் பட்டியல் (International Union of Conservation of Nature’s (IUCN) red list) தெரிவிக்கிறது.

“இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இமாலயக் காடையும் பிங் ஹெடட் வாத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன (critically endangered) என்று கூறப்பட்டாலும், அவை பெருமளவு அற்றுப்போய்விட்டன” என்கிறார் நாட்டின் முதன்மை பறவை ஆராய்ச்சி நிறுவனமான பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் (BNHS) செய்தித் தொடர்பாளர் அதுல் சாதே.

இவ்வளவு காலம் அச்சுறுத்தல் இல்லாதவை என்று வகைப்படுத்தப்பட்டிருந்த ஆற்று ஆள்காட்டி, ஆற்று ஆலா பறவைகளின் நிலைமை புதிய சிவப்புப் பட்டியலில் மோசமடைந்து இருக்கிறது. தற்போது அவை, அச்சுறுத்தலை நெருங்கிய நிலைக்கு (near threatened) மாற்றப்பட்டுள்ளன. தமிழக ஆற்றுப் பகுதிகளில் பார்க்கக்கூடிய பறவை ஆற்று ஆலா. ஆற்று சூழல்மண்டலத்தில் மனிதர்கள் ஏற்படுத்தும் நெருக்கடிகளும், அணைகள் கட்டப்படுவதுமே ஆற்று ஆலாக்கள் அழிவதற்கு முக்கியக் காரணம். அடுத்த மூன்று தலைமுறைகளில் ஆற்று ஆலாவும், ஆற்று ஆள்காட்டியும் அழியலாம் என்று கூறப்படுகிறது.

“இந்த 2 பறவைகளுமே கோடை காலத்தில் நதிகளின் நடுவே உருவாகும் சிறு தீவு போன்ற பகுதிகளிலும் நதிக்கரைகளிலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை. ஆனால், ஆற்றங்கரைகளுக்கு மாடுகளை ஓட்டி வருதல், நாய்கள் வருதல் போன்ற நடவடிக்கைகள் இவற்றின் முட்டைகளை அழிக்கின்றன. தொடர்ச்சியாக இப்பறவைகளின் எண்ணிக்கை சரிகிறது,” என்கிறார் முக்கியப் பறவை பகுதிகள் (Important bird areas) தலைவர் ராஜு கஸாம்பே.

சதுப்புநிலங்கள், புல்வெளிகள், காடுகள் போன்றவையும் வளர்ச்சி நடவடிக்கைகளால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதே பறவைகள் அழிவை எதிர்நோக்குவதற்குக் காரணம் என்று தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளில் புல்வெளிகள் அழிந்ததால் கான மயில் (Great Indian Bustard), வங்க வரகுக் கோழி (Bengal Florican), ஜெர்டான் கோர்சர் (Jerdon’s Courser) போன்ற பறவைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள. கான மயில், தமிழகத்தில் முன்பு இருந்துள்ளது.

அதேபோல, பிணந்தின்னிக் கழுகுகளின் அழிவுக்கு டைகுளோபெனாக் Diclofenac என்ற வலிநிவாரணி மருந்தே காரணம். இறந்த வளர்ப்பு கால்நடைகளை உண்ணும்போது, பிணந்தின்னிக் கழுகுகளின் உடலில் இந்த மருந்து சென்று நரம்பு மண்டலத்தைப் பாதித்து இறப்பை ஏற்படுத்துகிறது.

உலக அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பறவை வகைகளின் எண்ணிக்கை, எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. தற்போது 200 பறவைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

“எஞ்சியுள்ள இயற்கை வாழிடங்கள், அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் குறித்து அறிவியல்பூர்வமான கள ஆய்வை நடத்தி, பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்” என்று பி.என்.எச்.எஸ். இயக்குநர் டாக்டர் ஆசாத் ரஹ்மானி தெரிவித்துள்ளார்.

நன்றி: தி ஹிந்து

Related Posts

வேடந்தாங்கலில் பறவைகளின் வருகையை அதிகரிக்க மரக்கன்... வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளின் இடவசதியை அ...
சக்கரவர்த்தி பெங்குயின்... பறக்க முடியாத பறவை இனம் பெங்குயின். அவை தங்கள் சிறகுகளைத் துடுப்புகளாகத் தகவமைத்...
விடுமுறையில் குழந்தைகளுக்கு கூந்தன்குளம் பறவைகள் ... கோடை விடுமுறையை குதூகலமாக கழிக்க நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தி...
தமிழகத்திற்கு தேவை மயில் சரணாலயங்கள்... முருக பெருமானுக்கு வாகனமும் தமிழகத்தில் பல மலைகளில் காணப்படும் தமிழக மக்களின் அன...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *