ஆற்று மண்ணுக்கு மாறாக எம்-சாண்ட்!

ஆற்று மணல் சூறையாடப்படுவது தொடர்பில் தொடர்ந்து பேசுகிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த அப்பாவு ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். “தமிழகம் முழுக்க நடக்கும் கட்டுமானங்களில் ஆற்று மணலுக்கு மாற்றான எம் சாண்ட்டை (manufactured sand) பயன்படுத்தச் சொல்லி உத்தரவு போடவேண்டும்” என்பது அந்த வழக்கின் சாரம். மிக முக்கியமான முன்னெடுப்பு இது.

ஆனால், இது ஏதோ இன்றைக்குப் புதிதாகப் பேசப்படுவதுபோலச் சிலர் பேசுகிறார்கள். உண்மையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இதுகுறித்த விவாதங்கள் கட்டுமானத் துறையில் நடந்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக ஒரு லோடு மணல் ரூ.25000 அளவில் 2012-ல் விற்கப்பட்டபோது இந்தத் துறையில் இருப்பவர்கள் எம் சாண்ட் குறித்து தீவிரமான உரையாடலை முன்னெடுத்தார்கள். ஆனாலும், அதுகுறித்த தெளிவான உரையாடல்கள் அரசுத் தரப்பில் அப்போது நடக்கவே இல்லை. ஏனென்றால், ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை ஆற்று மணல் வியாபாரம் என்பது இங்கு அவர்களுக்குப் பணம் கொட்டும் சுரங்கம். ஆகையால், அவர்கள் காது கொடுக்கக்கூடத் தயாராக இல்லை. ஒரு பரிந்துரையை மட்டும் தந்துவிட்டு ஒதுங்கிவிட்டனர்.

சென்னையின் தேவை எவ்வளவு?

பொதுவாகவே நாள்தோறும் சென்னைக்கு மட்டுமே சுமார் பத்தாயிரம் ட்ரக் லோடு வரைக்கும் ஆற்றுமணலுக்கான தேவை இருப்பதாகச் சொல்கிறார்கள். தமிழகம் முழுக்க எடுத்துக்கொண்டால், 55000 மணல் லாரிகள் ஓடுகின்றன. நாளொன்றிற்கு ஒரு லோடாவது அவை அடித்துவிடுகின்றன. இரண்டு லோடு, மூன்று லோடு அடிப்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு லோடு மணல் என்பது குறைந்தது இரண்டு யூனிட். இந்தப் பின்னணியில் ஒரு நாளைக்கு எத்தனை லோடு மணல் தமிழகத்தில் மட்டும் அடிக்கப்படுகிறது என்பதைக் கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.

கர்நாடகம் மற்றும் கேரளத்திற்குச் சட்ட விரோதமாகக் கடத்தப்படும் மணல் இந்தக் கணக்கில் வராது.

தவிர சட்டப்பூர்வமாகவே கேரளத்திற்கு மட்டும் ஒருநாளைக்கு சுமார் 100 லோடு வரை மண் இங்கிருந்து போவதாகவும் சொல்கிறார்கள். இதுதான் தமிழகத்தைப் பொறுத்தவரையான தினசரி மணல் தேவை.

தனியார் கட்டுமானங்கள் மற்றும் பொதுப் பணித் துறையால் மேற்கொள்ளப்படும் அரசுக் கட்டுமானங்களும் இவற்றில் அடங்கும்.

மாற்றுமணலின் தேவை என்ன?

இந்தப் பின்னணியில்தான் நீண்ட காலமாகவே ஆற்று மணலுக்கு மாற்றாக கருங்கல் ஜல்லிகளை உடைத்துத் தயாரிக்கப்படும் மாற்று மணலான ‘எம்.சாண்டு’ பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன. இந்த மணலைப் பொறுத்தவரை கட்டுமானத் துறையின் தரக்கட்டுப்பாடான ‘ஐ.எஸ்.383’ தரத்தில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. தரத்தில் ஆற்று மணலைவிட இவை மிகச் சரியாக இருப்பதாகவே சொல்கிறார்கள். நிறத்தைப் பொறுத்தவரை அவை சிமெண்ட்டோடு சேரும்போது எந்த வித்தியாசங்களையும் கொண்டிருக்காது என்றும் விளக்குகிறார்கள். குறிப்பாக உலகின் மிக உயரமான கட்டடமான, துபாயில் இருக்கும் புர்ஜ் கலீஜா (Burj Khalija) இதைக் கொண்டு கட்டப்பட்டது என்றும் ஆதாரத்தைத் தருகின்றனர்.

விலை இதிலுள்ள இன்னொரு சகாயம். ஆற்று மணலைவிட 30% முதல் 40% வரை விலை குறைவு. தமிழகத்தின் ஒருநாள் தேவை தோராயமாக 30,000 யூனிட் அளவு. இந்தத் தேவையை மாற்று மணலைக் கொண்டு நிரப்பிவிட முடியுமா என்று கேட்டால் முடியும் என்றே சொல்கிறார்கள். உதாரணமாக தமிழகத்தில் மட்டும் சுமார் ஆயிரம் கிரஷர்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் ஐம்பது குவாரிகள் மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றில் இருந்து சுமார் ஐயாயிரம் யூனிட் வரை உற்பத்தி நடக்கிறது. ஒரு கிரஷரில் இந்தப் பணியைத் துவங்குவதற்கு ஒரு கோடியில் இருந்து ஐந்து கோடி ரூபாய் வரை முதலீடு தேவை. அரசு இந்த விசயத்தில் மானியங்களைக் கொடுத்தால் மீதமிருக்கும் கிரஷர்களையும் செயலுக்குக் கொண்டுவர முடியும். மிக எளிதாகவே தமிழகத்தின் தேவையைப் பூர்த்திசெய்துவிட முடியும்.

இப்படி ஒரு எளிதான தீர்வை வைத்துக்கொண்டு எதற்காகப் புலம்பி அலைகிறோம்? ஏன் மாற்று மணலை கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியவில்லை? பொதுமக்களான நமக்கும் இதில் பங்கிருக்கிறது!

மாற்று மணலால் கட்டப்பட்ட வீடுகள் வெயிலில் உருகிவிடும் என்கிற அளவுக்கு மூடத்தனமான அறியாமை நம்மவர்களிடம் இருக்கிறது. “ஆற்று வளத்தைச் சூறையாடுகிறோம்” என்று ஒருபுறம் போர் முழக்கம் எழுப்புபவர்கள்தான் மறுபுறம் அவர்கள் வீடு கட்டும்போது, “ஐயைய்யோ, ஆத்து மணல்லேயே கட்டுங்க; மாத்து மணல் எல்லாம் வேண்டாம்” என்று கூறுவதாகச் சொல்கிறார்கள் கட்டுமானப் பொறியாளர்கள்.

ஏற்கெனவே ஆட்சியாளர்கள், அரசியல் வாதிகளுக்கு மணல் வியாபாரத்திலிருந்து கொள்ளை கொள்ளையாகப் பணம் போகிறது. போதாக்குறைக்கு இந்தத் தொழிலுக்குப் பின் பெரிய மாஃபியாவே இருக்கிறது. மக்களும் இதற்கு எதிரான மனநிலையில் இருந்தால், அப்புறம் எப்படி மாற்று மணல் தலையெடுக்க முடியும்? ‘பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேண்டும்’ என்கிற நம்முடைய மனநிலையை மாற்றிக்கொள்ளாதவரை மாற்றத்தைப் பற்றிப் பேச முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் மாற்று மணல் குறித்த தெளிவான புரிதல்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும். ஆற்று மணலைச் சூறையாடுகிறவர்களின் கையை உடைக்க வேண்டும் எனக் குரல் எழுப்புபவர்களை நிறுத்தி, “உன்னோட வீட்டுல எம் சாண்ட் பயன்படுத்துவாயா?” என்று துணிந்து கேட்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் மாறப்போவதில்லை. நாமாவது மாறி ஆக வேண்டும். ஏனென்றால், இனியும் ஆற்றிலிருந்து மணல் எடுப்பது தொடர்ந்தால் தமிழ்நாட்டின் ஆறுகள் அற்றுப்போய்விடும். நம்முடைய சந்ததிகளே நாசமாகும். மாற்றைக் கண்டறியாமல், மாற்றைக் கையாளாமல் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள குறைமுறைகளை நாம் எதிர்கொள்ள முடியாது!

– சரவணன் சந்திரன், ஊடகவியலாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: saravanamcc@yahoo.com

நன்றி: ஹிந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *