டெல்லி காற்று மோசம், சென்னையின் கதை என்ன?

இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிப்பதற்குச் சற்று முன்பு, இந்த மாத இறுதியில் நான் மேற்கொள்ளவிருந்த புதுடெல்லி பயணத்தை ரத்து செய்தேன். டெல்லியின் மாசுபட்ட காற்றால் எனது ஒவ்வாமை (Allergy) அதிகரித்துவிடக் கூடாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன். ஒரு இடம் ரொம்பவும் மாசுபட்டுள்ளது என்பதற்காக, ஒரு பயணத்தை நான் ரத்துசெய்திருப்பது இதுவே முதல்முறை. சூழலியல் இதழாளராகவும் செயல்பாட்டாளராகவும் என் வாழ்க்கை முழுவதும் இதற்கு நேரெதிரான விஷயத்தையே செய்திருக்கிறேன். ஆசியாவிலேயே மிகவும் மாசடைந்த இடங்களுக்குத்தான் நான் அதிகம் பயணம் செய்திருக்கிறேன்.

ஆனால், இந்தக் குளிர்காலத்தில் டெல்லி ரொம்பவும் பயங்கரமாகிவிட்டது, எனக்கும்கூட. நவம்பர் 9-ம் தேதி காலை 9 மணிக்குப் பி.எம். (நுண்தூசி) 2.5-ன் அளவு கனாட் பிளேஸில் 982.6 மைக்ரோகிராம்/கனமீட்டர் என்ற அளவில் இருந்தது. பாதுகாப்பு அளவு என்று இந்தியா நிர்ணயித்திருக்கும் அளவைவிட இது 16 மடங்கு அதிகம்; உலகச் சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளபடி இது 100 மடங்குக்கும் அதிகம்.

நுரையீரலுக்குள் ஊடுருவல்

பி.எம். 2.5 என்பவை, நம் மூச்சுக் காற்றோடு கலக்கக்கூடியதும் 2.5 மைக்ரோ மீட்டர் அளவைவிட குறைவாக இருப்பதுமான நுண்ணிய தூசித்துகள்கள். இவ்வளவு நுண்மையாக இருக்கும் துகள்கள், நம் நுரையீரல்வரைக்கும் ஊடுருவக்கூடியவை. கூடவே, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கனஉலோகத் துகள்கள் போன்ற நச்சுப் பொருட்களையும் நுரையீரலுக்குள் இவை கொண்டுசெல்கின்றன. இந்த நச்சுப் பொருட்களால் நுரையீரல் நோய்கள், ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு போன்றவை ஏற்படுவதற்குச் சாத்தியமுள்ளது.

டெல்லிக்கும் சென்னைக்கும் இடையிலான வேறுபாடு மிகவும் குறைவு. டெல்லி உடனடி மரணம் என்றால், சென்னையோ கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் விஷம் அவ்வளவுதான் வேறுபாடு.

சென்னை ‘மோசம்‘

சென்னையில் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் நிலையங்கள் ஐந்து இருக்கின்றன. இவற்றில் அரசுக்குச் சொந்தமானவை மூன்று; தனியார் நடத்துபவை இரண்டு. நவம்பர் 9-ம் தேதி காலை 8 மணி அளவில் சென்னையின் காற்றின் தரத்தை அளவிட்டால் ‘மிதமான மாசு’ என்பதிலிருந்து ‘மிக மோசம்’ என்பதுவரையிலான முடிவுகள் கிடைக்கின்றன. ஐந்தில் மூன்று நிலையங்கள் சென்னையின் காற்றுத் தரத்தை ‘மிக மோசம்’ என்று பதிவுசெய்திருக்கின்றன.

மணலியில் பி.எம். 2.5 அளவு 139.72 மைக்ரோகிராம்/கன மீட்டர் ஜெமினி பாலத்துக்கு அருகே 145.3 மை.கி./க.மீ. கிண்டி தொழிற்பேட்டையில் 190.2 மை.கி./க.மீ. சென்னை ஐஐடி கண்காணிப்பு நிலையம் ‘மோசம்’ என்று பதிவுசெய்திருக்கிறது. ஆலந்தூரில்தான் ‘மிதமான மாசு’ என்று பதிவாகியிருக்கிறது. அரசு சார்பான கண்காணிப்பு நிலையங்களில் பதிவான தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் 2015-ம் ஆண்டின் சராசரி அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட இப்போது 2-லிருந்து 2.5 மடங்கு அதிகமாக இருந்தது.

கட்டுமான தூசி, வாகனப் புகை, நிலக்கரியைப் பயன்படுத்தும் மின்னுற்பத்தி நிலையங்கள், மின்னியற்றிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியாகும் புகை போன்றவற்றால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. 2010-ம் ஆண்டின் ஆய்வைப் பொறுத்தவரை சென்னையின் காற்று மாசுபாட்டுக்கு வாகனப் புகை 17 சதவீதமும், மின்னுற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள் போன்றவை 17 சதவீதமும், கழிவையும் குப்பையையும் எரிப்பது 8 சதவீதமும் காரணமாக இருக்கின்றன.

இதனால் ஏற்படும் பாதிப்பை எல்லோரும் சமமாக உணர மாட்டார்கள்தான். பணக்காரர்களைப் பொறுத்தவரை வீட்டிலும் அலுவலகத்திலும் குளிர்சாதன வசதி சகிதம் ஓரளவு பாதுகாப்பாக இருப்பார்கள். ஏழை மக்கள், வீதிகளில் அதிக நேரம் செலவிடும் போக்குவரத்துக் காவலர், வீதிவீதியாகப் பொருட்களை விற்பவர்கள், கடைக்காரர்கள் போன்றோர்தான் மிக மிக அதிக அளவில் மாசுபாட்டை எதிர்கொள்கிறாரக்ள். குறிப்பாக, குழந்தைகள் இதனால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.

எங்கெங்கும் மாசுபடுத்திகள்

இந்தியாவிலேயே அதிக வாகன எண்ணிக்கையில் சென்னைக்கு மூன்றாம் இடம். ஒரு கிலோமீட்டர் சாலைக்கு இவ்வளவு என்ற விகிதத்தை வைத்துப் பார்க்கும்போது நாட்டிலேயே சென்னையில்தான் வாகன அடர்த்தி அதிகம். தொழிலாளர் வர்க்கத்தினர் மிக அதிக அளவில் குடியிருக்கும் வட சென்னைதான், சென்னையிலேயே மிக மோசமாக மாசடைந்திருக்கும் பகுதி.

எண்ணூரில் மட்டும் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட நான்கு மின்னுற்பத்தி நிலையங்கள் இயங்குகின்றன. இவை அனைத்தும் சேர்ந்து மொத்தம் 3,780 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. அருகிலுள்ள மணலியில் மிகப் பெரிய பெட்ரோகெமிக்கல் தொழிற்பேட்டை அமைந்திருக்கிறது. எப்போதும் புகைந்துகொண்டிருக்கும் கொடுங்கையூர் குப்பைமேடும் வட சென்னையில்தான் இருக்கிறது.

எண்ணூரின் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு 4 கி.மீ. பரப்பளவுக்கு உட்பட்ட மூன்று பகுதிகளின் காற்றுத் தரத்தை ஆய்வு செய்த சென்னையைச் சார்ந்த ‘கடற்கரை வள மையம்’ என்ற தொண்டு நிறுவனம், தனது பிப்.2016 ஆய்வு முடிவுகளை ஏப்ரலில் வெளியிட்டது. இந்தப் பகுதிகளில், தேசிய அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாகப் பி.எம். 2.5 அளவு காணப்பட்டதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அங்குக் காணப்படும் நுண்தூசியில் காரீயம் (Lead), ஆர்செனிக், மாங்கனீசு போன்ற கனஉலோகங்களின் நுண்துகள்கள் ஏராளமாகக் கலந்திருந்தன. காரீயத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகம்; அவர்களின் அறிவுத்திறன், கற்றல்திறன், நினைவுத்திறன், குணாதிசயம் போன்றவற்றில் காரீயம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காரீயத்தைப் பொறுத்தவரை உடலுக்கு ஆபத்து விளைவிக்காத அளவு என்று ஏதும் இல்லை.

ரூ. 2000 கோடி இழப்பு

நிலக்கரிச் சாம்பல், நிலக்கரித் தூசி போன்றவைதான் இந்தப் பகுதிகளின் மாசுபாட்டுக்கு முதன்மையான காரணங்கள். மாசுபாட்டைக் குறைப்பதற்குப் பதிலாக, மேலும் மூன்று மின்னுற்பத்தி நிலையங்களை அங்கே கொண்டுவருவது தொடர்பாக அரசு பரிசீலித்துக்கொண்டிருக்கிறது. கடலிலிருந்து தென் திசை நோக்கிக் காற்று வீசும்போது, எண்ணூரின் மாசு மத்தியச் சென்னையை நோக்கியும் தென்சென்னையை நோக்கியும் செல்கிறது. ஏற்கெனவே வாகனப் புகையால் பெரிதும் மாசுபட்டிருக்கும் அந்தப் பகுதிகளை மேலும் மாசுபடுத்துகிறது.

delhiair3

2010-ல் சென்னையில் மட்டும் 3,950 மரணங்களுக்கும், 86,800 சென்னைக் குழந்தைகளுக்கு க்ரானிக் பிரான்கைட்டிஸ் Chronic Bronchitis (மூச்சுக்கிளைக்குழல் அழற்சி) ஏற்படுவதற்கும் காற்று மாசுபாடு காரணமாக இருந்திருக்கிறது என்று கோவாவை மையமாகக் கொண்டு இயங்கும் ‘அர்பன் எமிஷன்ஸ்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மதிப்பீடு செய்திருக்கிறது. அந்த ஆண்டில் மட்டும் காற்று மாசுபாட்டால் சென்னைக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவு சுமார் ரூ. 1,960 கோடி என்கிறது அந்த நிறுவனம்.

Courtesy: IE
Courtesy: IE

என்ன திட்டம் இருக்கிறது?

காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான வழிமுறைகள் நம் எல்லோருக்கும் தெரிந்தவைதான். பொதுப் போக்குவரத்துக்கு அதிக முன்னுரிமை கொடுப்பது, மேம்பட்ட குப்பை மேலாண்மை, கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்தாமல் மின்சாரத்தை உற்பத்தி செய்வது போன்றவைதான் அந்த வழிமுறைகள். ஆனால் மின்னுற்பத்தி நிலையங்கள், கார் உற்பத்தியில் மட்டும்தான் அரசாங்கத்துக்கு அதிக அக்கறை இருப்பதுபோலத் தெரிகிறது.

டெல்லியில் உண்மையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருகிறது. வசதிப்பட்டவர்கள் முகமூடிகளையும் காற்றுவடிகட்டிகளையும் வாங்கிக்கொள்ளலாம். பாவப்பட்ட ஏழை மக்களோ அந்த நகரத்தின் காற்றைச் சுவாசித்து மூச்சு முட்டிக்கொண்டு கிடப்பதுதான் இன்றைய நிலைமை.

நீரைப் போலவே காற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் அத்தியாவசியமானது. சென்னையில் நீரைத் தூய்மைப்படுத்துவதற்கு மாறாக, மெட்ரோ வாட்டர் மையத்தை உருவாக்கி அரசாங்கமே நீர் விநியோகம் செய்துவருகிறது. சுவாசிக்கவே முடியாத அளவுக்குச் சென்னையின் காற்று மாறிக்கொண்டிருப்பதால், காற்றைச் சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் அதேபோல எடுக்குமா? அல்லது ‘சென்னை மெட்ரோ காற்று விநியோக மையம்’ என்று ஏதாவது அமைப்பை உருவாக்கிச் சென்னைவாசிகளுக்குக் காற்று விநியோகத்தையும் அரசு ஆரம்பிக்கப்போகிறதா?

தமிழில்: ஆசை கட்டுரையாளர்,சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் – தொடர்புக்கு: nity682@gmail.com

நன்றி: ஹிந்து

[embedit snippet=”whatsapp”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *