பிளாஸ்டிக் பைக்கு மாற்று!

பிளாஸ்டிக்… இன்று உலகின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தும் வார்த்தைகளில் முதன்மையான வார்த்தை. பிளாஸ்டிகோஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘எந்த வடிவத்திலும் வார்க்கக்கூடிய தன்மையுடைய’ எனப் பொருள். இதிலிருந்து தான் பிளாஸ்டிக் என்ற வார்த்தை உருவானது. முதலாம் உலகப்போரில் தொடங்கி இன்றுவரை மனிதனால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக பிளாஸ்டிக் உருவெடுத்துள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுவதாக சுற்றுப்புற ஆய்வாளர்கள் அதிர்ச்சி தருகிறார்கள்.

பிளாஸ்டிக்

இந்தியாவில் மட்டும் சராசரியாக ஒவ்வொரு நாளும் 15 ஆயிரம் டன்கள் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அவற்றில் 6 ஆயிரம் டன்களுக்கும் மேல் குப்பைக் கிடங்குகளில் முறையாக ப்ராசஸ் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை போன்ற ஐந்து வகையான நிலங்கள் மட்டுமின்றி, ஆழ்கடல்களையும் பிளாஸ்டிக் குப்பைகள் இன்று ஆக்கிரமித்துள்ளன. எளிதில் மட்காது என்பதால் இது சுற்றுப்புறச் சூழலுக்கு பெரும் கேடாகவும் இருக்கிறது. சாதாரண பிளாஸ்டிக் துண்டு ஒன்று 500 ஆண்டுகள் வரை மட்காமல் பூமியில் இருக்கும் தன்மை கொண்டது.  வனத்தில் வாழும் விலங்குகள் தொடங்கி கடல் உயிரினங்கள் வரை பிளாஸ்டிக்கை விழுங்கி ஜீரணக் கோளாறு காரணமாக பெருமளவு உயிரிழக்கின்றன. நாளொன்றுக்குக் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவைக் கணக்கிட்டால், எதிர்காலத்தில் இந்தியா பெரும் சுகாதாரக்கேடை சந்திக்க வேண்டியிருக்கும்.

பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்கு மாற்றாக துணிப்பைகளைப் பயன்படுத்தினால் பெருமளவில் சுகாதாரக்கேடைக் குறைக்கலாம் என்றாலும், அவற்றின் விலை பல மடங்கு அதிகம். எனவே, துணிப்பைகள் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. பிளாஸ்டிக் கேரி பேக்குகளைப் போல வலிமையாகவும், அதே நேரத்தில் சுகாதாரக் கேடற்ற விலைக்குறைவான பைகளை இந்தியர் ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார்.

அஸ்வத் ஹெக்டே

கத்தாரைச் சேர்ந்த 24 வயதாகும் இந்திய வம்சாவளி இளைஞரான அஸ்வத் ஹெக்டே தலைமையிலான நிறுவனம், மரவள்ளிக்கிழங்கின் ஸ்டார்ச், தாவர எண்ணெய் மற்றும் தாவரக் கழிவுகள் போன்ற இயற்கை சார்ந்த பொருள்களைக் கொண்டு இந்த பைகளை உருவாக்கியுள்ளது.

2012-ம் ஆண்டில் தொடங்கி இத்துறை சார்ந்த விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முயற்சியால் இந்த பைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மட்கும் தன்மை கொண்ட இந்த ‘என்வி கிரீன்’ பைகள் பிளாஸ்டிக் கேரி பேக்குகளைப் போல வலிமையாக இருக்கின்றன.

அதே நேரத்தில் மட்கும் தன்மையோடும் இவை இருக்கின்றன. மேலும், ஸ்டார்ச்சை மூலப்பொருளாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளதால் விலங்குகள் இதை உட்கொண்டாலும் எந்தப் பிரச்னையும் இன்றி இது ஜீரணமாகி விடுகிறது. இயற்கையான மூலப்பொருள்களால் உருவாக்கப்பட்டுள்ளதால், விவசாயம் சார்ந்த தொழில்களும் மேம்படும்.

கேரி பேக்குகள் மட்டுமின்றி எதிர்காலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலுமான மாற்றாக இவ்வகைப் பைகள் இருக்கும் என அஸ்வத் ஹெக்டே நம்பிக்கை தெரிவிக்கிறார். கர்நாடக அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியம்,  மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் போன்றவை இந்த பைகளில் பிளாஸ்டிக் வேதிப்பொருள் எதுவும் இல்லை எனவும், சுகாதாரக் கேடு ஏற்படுத்தாதவை எனவும் சான்று வழங்கியுள்ளன. இந்த ஆண்டிலிருந்து உற்பத்தியைப் பெருக்கி ‘என்வி கிரீன்’ பைகள் சந்தையில் கிடைக்க அஸ்வத் ஹெக்டே முயற்சித்து வருகிறார்.

சுற்றுச்சூழலுக்குப் பெரிய அச்சுறுத்தலாக பிளாஸ்டிக் பொருள்கள் விளங்கும் இந்நேரத்தில், இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இவ்வகைப் பைகள் நிச்சயம் ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

மேலும் தெரிந்து -கொள்ள  என்விரோக்ரீன் இணையத்தளம்

https://www.facebook.com/thebetterindia/videos/10155173981034594/

நன்றி: ஆனந்த விகடன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *