நீர் வளத்தின் முக்கியத்துவம்

இயற்கை என்பது நுட்பமான சங்கிலி, எங்கே அறுபட்டாலும் பெரும் பிரச்சினைதான்.

தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவும் எதிர்கால மாகவும் அமைபவை திணை நிலமும் மொழியும்தாம். திணை நிலம் அதன் நீர் பெறுமதியால் அமைவது. தமிழகத்தின் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளின் வடிநிலங்கள் நெய்தல் நன்னீராதாரங்களில் சங்கமிக்கின்றன. வடக்கே பாலாறு தொடங்கி தெற்கே குழித்துறையாறு வரை அத்தனை ஆறுகளும் கடலோடு கலந்து, கரைக்கடலில் மீன்வள உற்பத்திக்குப் பங்களிக்கின்றன. கடலில் கலப்பதற்கு முன்பாக, இந்த ஆறுகள் நெய்தல் நீராதாரங்களைச் செழுமைப்படுத்துகின்றன. முன்பு, இந்த நிலப்பரப்புகளில் காயல்கள், கழிமுகங்கள், கண்மாய்கள் இயல்பாக இணைக்கப்பட்டிருந்தன. நம்முடைய முன்னோர்கள் பயிரிடுவதற்காக அணை களை நம்பியிருக்கவில்லை. கண்மாய் சார்ந்த விவசாயம்தான் அன்று தமிழ் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்துவந்தது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் நெல்லூருக்கு வடக்கே துவங்கி, பழவேற்காடு ஏரியை இணைத்தவாறு புதுச்சேரிக்கு வடக்கே ஒஸ்த்தேரி வரை கடலுக்கு இணையாகக் கடற்கரையில் ஓடுகிறது பக்கிங்ஹாம் கால்வாய். வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்தக் கால்வாய் வணிகத்துக்கும் விவசாயத்துக்கும் துணைநிற்பதுடன், வடதமிழகக் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. தென்தமிழக விளிம்பில் தென் கேரளத்திலிருந்து நீளும் அனந்த விக்டோரியா மார்த் தாண்ட வர்மா கால்வாயைக் கன்னியாகுமரி வரை அமைக்கும் திட்டம் மண்டைக்காட்டுடன் நின்றுவிட்டது.

1860-ல் வேம்பனாடு ஏரி, அஷ்டமுடி காயல் போன்ற கடலோர நீர்நிலைகளை இணைத்து பரவூர் தொடங்கி மண்டைக்காடு வரை வெட்டப்பட்ட இக்கால்வாய், திருவிதாங்கூர் மன்னருக்கும் வேலுத்தம்பி தளவாய்க்கும் இடையிலான கருத்து வேறுபாட்டால் முழுமை பெறாமல் போய்விட்டது. கி.பி. 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பின்போது, தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைக்கப்பட்ட பிறகு, குளச்சல் – தேங்காய்ப்பட்டினம் பகுதியில் இந்தக் கால்வாய் தூர்ந்துபோனது.

அலையாத்திக் காடுகளின் அழிவு

தமிழ் இலக்கியத்தில் கடலோர வாழ்வின் குறியீடு களாக எக்கர், அத்தம், கானல் என்பதான மூன்று கூறுகள் புலப்படுகின்றன. குறிஞ்சிக்கு நீர்வீழ்ச்சிபோல நெய்தலுக்கு எக்கர் என்னும் மணல் மேடுகள் அடையாளமாய் நின்று, நில விளிம்பை அரண் செய்திருந்தன. அன்றைய நெய்தல் குடியிருப்புகள் அத்தம் என்கிற கடலோர நன்னீர் நிலைகளை நோக்கியவாறு அமைந்திருந்தன. அத்தங்களைச் சார்ந்து கானல்கள் என்னும் பசுஞ் சோலைகள் அணிசெய்தன. ஆம், தமிழகக் கடலோர நிலங்கள் முழுவதும் ஒரு காலத்தில் வனங்களால் நிறைந்திருந்தன. புலிகளும் மான்களும் இவ்வனங்களில் உலவின. கடலோடு இணைந்திருந்த உவர்நீர்ப் பரப்பு களில் உப்புநீர் முதலைகள் காணப்பட்டன. புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் கப்பலில் ஏற்றுவதற்கெனக் குவிக்கப்பட்டிருக்கும் சரக்குகளின் மீது வரையாடுகள் நின்றுகொண்டிருந்ததான ஒரு பதிவு பட்டினப்பாலையில் வருகிறது. வரையாடுகள் வனங்களில் வாழ்பவை. துறைமுகத்தைச் சூழ்ந்து வனங்கள் இருந்ததை இந்தக் குறிப்பு உறுதிசெய்கிறது. இன்று தமிழகக் கடலோர வனங்களின் எச்சங்களாக கிண்டி, வேதாரண்யம் காடுகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. கிள்ளை, பிச்சாவரம், ராமநாதபுரம் கடலோரங்களிலுள்ள அலையாத்திக் காடுகள் மட்டுமே உவர்நீர்ப் பசுமைப் பரப்பாக எஞ்சியுள்ளன. நம் கடலோர வனங்களெல்லாம் எங்கே போய்விட்டன?

மணல் கொள்ளை

வடுகர்களும் காலனியர்களும் இவ்வனங்களின் பெரும் பகுதியைச் சூறையாடிவிட்டார்கள். மீந்து நின்ற வனங்கள் நமது கடலோர நன்னீராதாரங்களின் சிதைவால் அழிந்துபோயின. ஒருமுறை கல்லணையைப் பார்க்கச் சென்றபோது அணையின் தொன்மை ஊட்டிய பிரமிப்பைவிட, மறுபுறம் தெரிந்த காட்சிகள் என்னைக் கலங்கச் செய்தன. சரக்கு ரயில் பெட்டிகள்போல, நூற்றுக் கணக்கில் லாரிகள் மணல் அள்ளுவதற்காக வரிசைகட்டி நின்றன. வடிநிலங்களிலும் நெய்தல் நிலங் களிலும் நன்னீராதாரங்கள் சிதைவுற்றுப்போவதற்கு மணல் கொள்ளையே முக்கியக் காரணம்.

அன்றைய நாளில் தமிழகத்தில் கண்மாய்களும் ஏரிகளும் பருவமழைக் காலத்தில் மறுகால் பாய்ந்து அண்டை நீர்நிலைகளில் நிரம்புவதற்கான வழித்தடங்கள் ஏராளமாக இருந்தன. நில ஆக்கிரமிப்புகளாலும் கண்மூடித் தனமான கட்டுமானங்களாலும் இந்த இயற்கையான தடங்களெல்லாம் ஊடறுக்கப்பட்டுவிட்டதன் விளைவாக மழைவெள்ளம் தங்கிச் செல்ல வழியின்றிப்போய்விட்டது. பெருமழைக் காலங்களில் சென்னை நகரம் தத்தளிக் கிறது. தமிழ்நாடெங்கும் குளங்களும் ஏரிகளும் குடியிருப்புகளாக, பேருந்து நிலையங்களாக, விளை யாட்டரங்குகளாக மாற்றப்பட்டுவிட்டன. மழைநீர் மண்ணில் வடிந்திறங்க வழியின்றி நிலம் கான்கிரீட் காடுகளாகிவிட்டது.

உரிமையும் கடமையும்

குறிப்பிட்ட திணை நிலத்தின் நீர் பெறுமதியை மீறிய நன்செய் விவசாயம் நன்னீர்ப் பற்றாக்குறைக்கு மற்றுமொரு காரணமானது. இயற்கை வளங்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கான மக்களின் உரிமை, அவ்வளங்களை மேலாண்மை செய்யும் கடமையோடு இணைந்த ஒன்று. மாலத்தீவுகளில் புனல் மின்சார உற்பத்தி இல்லை. மின்சாரத்தை அவர்கள் பொறுப் புடன் நுகர்கின்றனர். மீன்வளத்தைச் சார்ந்து இயங்கும் அந்நாட்டுப் பொருளாதாரம் நுட்பமானது. இழுவை மடிகள் மட்டுமல்ல, வலைகள்கூட அங்கு தடைசெய்யப்பட்டுள்ளன. தூண்டில்களை மட்டுமே அங்கு மீன்பிடிக்கப் பயன்படுத்தலாம். கடுமையான நன்னீர்ப் பற்றாக்குறையைச் சந்திக்கும் இஸ்ரேல் நாட்டில் நீர்வள மேலாண்மையில் ஒவ்வொரு வீடும் பங்கேற்றாக வேண்டும். பூஜையறைபோல அங்கு ஒவ்வொரு வீட்டிலும் நிலத்தடி நீர்த் தேக்க அறை உண்டு. அந்த அறையின்றி வீட்டின் திட்ட வரைபடத்துக்கு அனுமதிபெற முடியாது. மொட்டை மாடியில் விழும் மழைநீர் மொத்தமும் நீர்சேமிப்பு அறைக்குள் செலுத்தப்பட்டு, பல மாதத் தேவையைப் பூர்த்திசெய்கிறது. நகரின் நடுவில் தாழ்ந்த பகுதியில் இருக்கும் பெரிய ஏரியில் மீதி மழைத் தண்ணீர் மொத்தமும் சேகரிக்கப்பட்டுப் பொதுப் பயன்பாடுகளுக்கு உதவுகிறது. 1990-களில் சென்னை வேளச்சேரி பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பானபோது, பருவ மழை வெள்ளத்தைக் கிணறுகளில் செலுத்தி ஓரிரு வருடங்களில் நன்னீர் மட்டத்தை மேம்படுத்திய அனுபவத்தையும் இங்கு குறிப்பிடலாம்.

மக்கள் பங்கேற்பு

மக்களின் பங்கேற்பு இல்லாமல் பொதுச்சொத்து வளங்களைப் பராமரிப்பது சாத்தியமல்ல. கண்மாய், ஏரி, குளங்களைப் போர்க்கால அடிப்படையில் மீட்டெடுத்து, மீட்டுருவாக்கம் செய்வதுடன் நமது நன்னீர் சிக்கல்கள் தீர்ந்துவிடாது. அறுபட்ட இணைப்புகளைச் சரிசெய்ய வேண்டும். பருவ மழை வெள்ளம் பயணித்துவந்த மரபான தடங்களை மீட்டெடுத்தால் நமது நீர்வள நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு கிடைக்கலாம்.

அதேபோல், கடற்கரை நெடுக, கடலுக்கு இணையாக ஒரு நன்னீர்க் கால்வாய் உருவானால், நெய்தல் நிலத்தில் ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை சாத்தியமாகும். கோவா மாநிலத்தின் மண்டோவி – ஜுவாரி நதிகளை இணைத்தவாறு கடலுக்கு இணையாக அமைக்கப்பட்ட கும்பர்ஜுவா கால்வாய்தான் பருவமழைக் காலத்தில் தாழ்ந்த பகுதிகள் வெள்ளப்பெருக்கில் மூழ்கிவிடாதவாறு பாதுகாக்கிறது. இரண்டாவதாக, தமிழகத்தின் அனைத்து ஆற்றுப் படுகைகளிலும் – 1,076 கிலோமீட்டர் கடற்கரைப் பகுதிகளிலும் – மணல் அகழ்தலை உடனடியாக நிறுத்தி யாக வேண்டும்.

உலக மக்கள்தொகையில் 60% நெய்தல் நிலப் பகுதியில் வாழ்கிறது. உழவுக்கும் தொழிலுக்கும் வாழ்க்கைக்குமான நன்னீர்த் தேவை இப்பகுதியில் மிகமிக அதிகம். அதே வேளையில், கடலோரம் நிலவிளிம்புப் பகுதியாக இருப்பதால், பிற திணை நிலங்களின் கழிவுகளெல்லாம் நெய்தல் நிலங்களிலும் கரைக்கடலிலும் வந்து சேர்கின்றன. இதனால் கடலோர நீர்நிலைகளான கழிமுகங்கள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகளின் சூழலியல் பாதிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கிடைக்கும் கடல்மீன் வளத்தில் 90% கரைக்கடலிலிருந்து கிடைப்பதுதான். ஆறுகள் வீணாகக் கடலில் கலப்பதில்லை. மீன்வளம் சிறக்கத் தேவையான உயிர்ச்சத்துகளைக் கடலுக்குக் கொணர்வது ஆறுகள்தாம். இறால் போன்ற ஏராளமான கடல் உயிரினங்கள் குஞ்சு பொரித்து, அவற்றை வளர்க்குமிடம் கழிமுகங்கள்தான். கடற்பரப்பிலிருந்து உருவாகும் மேகங்கள் மலைகளில் மழையாய் பொழிந்து, நிலங்களை நனைத்து, கடலை அடைந்தால்தான் நீர்ச் சுழற்சி முழுமை பெறும். தமிழ்ச் சமூகத்தின் மருதம், நெய்தல், திணை சார்ந்த வாழ்வை மீட்டெடுக்க அவசரமான, முதன்மையான செயல்பாடு நீர்வள மேலாண்மைதான். அரசு என்ன செய்யப்போகிறது? நாம் என்ன செய்யப்போகிறோம்?

– வறீதையா கான்ஸ்தந்தின், பேராசிரியர், கடல் ஆய்வாளர், தொடர்புக்கு: neidhalveli2010@gmail.com

நன்றி: ஹிந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *