நீர் ஏன் குறைந்து போகிறது – “மறை நீரை” தெரிந்து கொள்வோம்!

ந்தியா 130 கோடி பேர் கொண்ட நாடு. இங்கு வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. சாக்லேட் முதல் அணு உலை வரை பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு நமக்கு பல வசதிகளைக் கொடுத்துள்ளன. அவர்களால்தான் நாம் வளர்ந்தோம்.

உண்மைதான். உள்ளங்கையில் உலகம், வீடு முழுக்க ஆடம்பரம் என நாம் கண்டுள்ள வளர்ச்சி, கடந்த 30 வருடங்களில் அபரிமிதமானது.

ஆனால் கூர்ந்து பார்த்தால் இந்த மாபெரும் வளர்ச்சிக்குப் பின்னால், நாம் தொலைத்த வளங்கள் ஏராளம். அதில் ஒன்று தண்ணீர்.  பூமியில் 71% தண்ணீர் உள்ளது. அதில் 99.7% தண்ணீர் மனிதர்களால் பயன்படுத்தமுடியாது.

மீதமுள்ள 0.3% தண்ணீர் மட்டுமே மனிதன் பயன்படுத்த தக்கதாக உள்ளன. அந்தத் தண்ணீரைத்தான் நாம் விவசாயத்திலிருந்து, ராக்கெட் உற்பத்தி வரைக்கும் பயன்படுத்துகிறோம்.

உதாரணத்திற்கு….

ஒரு ஏ4 அளவு பேப்பர் – 11 லிட்டர் தண்ணீர்
ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீர் – 5 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் பீர் – 74 லிட்டர் தண்ணீர்
ஒரு பர்கர் – 2500 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் பால் – 208 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் ஒயின் – 118 லிட்டர் தண்ணீர்
ஒரு ஜோடி காலணி –  7770 லிட்டர் தண்ணீர்
ஒரு டி ஷர்ட் – 1960 லிட்டர் தண்ணீர்
ஒரு ஜீன்ஸ் – 6660 லிட்டர் தண்ணீர்
ஒரு பார் சாக்லேட் – 2500 லிட்டர் தண்ணீர்
1.1 டன் எடையுள்ள கார் – 4 லட்சம் லிட்டர் தண்ணீர்
அதிர்ச்சியடையாதீர்கள். இதுதான் உண்மை.  அடுத்த உலகப் போர் ஒன்று நடந்தால் அது தண்ணீருக்காகத் தான் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதற்கான நீர் அரசியல் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு,  நடந்துகொண்டிருக்கின்றன. எப்படி என்கிறீர்களா? அந்த காரணத்தை,  நாம் இழந்துவிட்ட இரண்டு வளமான ஆறுகள் சொல்லும்.
நொய்யல் ஆறு
 
திருப்பூர்,  துணிகளுக்குப் பேர் போன நகரம். ஆனால் அங்கு உற்பத்தி செய்யப்படும் துணி வகைகள் பெரும் பாலும் ஏற்றுமதியே செய்யப்படுகின்றன. ஒரு ஜீன்ஸ் தயாரிக்க 6000 லிட்டர் தண்ணீரும், ஒரு டி ஷர்ட் தயாரிக்க 1900 லிட்டர் தண்ணீரும் என ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இதற்கான தண்ணீரை நம் நீராதாரங்களிலிருந்து எடுப்பதோடு மட்டுமல்லாமல், துணிகளுக்குச் சாயமிட்டப் பிறகு அந்த சாயக் கழிவுகளும் நீர்நிலைகளில்தான் கொட்டப்படுகிறது. இந்தச் சாயக் கழிவுகளால் அழிந்ததுதான் நொய்யல் ஆறு.
பாலாறு
உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு தோல் பொருட்களைத் தயாரிப்பதற்கான பதப்படுத்தப்பட்ட தோல்களை ஏற்றுமதி செய்யும் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை போன்ற ஊர்களில் இருந்த தோல் பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீரால் பாலாறு நாசமானது.
தண்ணீரை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம்!
ஏன் உலக நாடுகள் இங்கிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அங்கு இல்லாத தொழில் நுட்பமா, அங்கு இல்லாத வளங்களா, அங்கு இல்லாத எந்திரங்களா? பிறகு ஏன் உலக நாடுகள் இந்தியாவில் கடை போடுகின்றன. காரணம் தங்கள் வளங்களின் மீது அவர்களுக்குள்ள அக்கறை. அவற்றை பாதுகாக்க ஆரம்பித்து விட்டார்கள். மனித வளச் சுரண்டலையும், இயற்கை வளச் சுரண்டலையும் செய்ய அவர்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்துவிட்டனர். நாம்தான் வளங்களை வாரிக் கொடுப்பதில் வள்ளல்கள் ஆயிற்றே.
நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களால் இந்தியாவிற்கு கணிசமான பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் கூட, நாம் பொருட்களை ஏற்றுமதி செய்யவில்லை. மாறாக பொருட்களின் வழியே பல கோடி லிட்டர் தண்ணீரையே ஏற்றுமதி செய்கிறோம்.
நம் கண்ணுக்குத் தெரியாமலேயே நாமே நம் நீர் ஆதாரங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பெரும்பாலான பொருட்களை உலக நாடுகள் நம் நாட்டிலிருந்துதான் உற்பத்தி செய்து இறக்குமதி செய்துகொள்கின்றன.
மேலும் அந்தப் பொருட்கள் இங்குள்ள எல்லோருக்குமானவையாகவும் இல்லை என்பது மற்றொரு சோகம். பணம் படைத்தவர்கள்தான் ஆடம்பரப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். தண்ணீர் திருடு போவதோ, தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதோ பெரும்பாலானோருக்கு ஒரு விஷயமாகவே தெரியவில்லை. அந்த வகையில் எளிய மக்கள் முட்டாளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது சோகம். இது மட்டுமா?
இங்கு 10 ல் 9 பேர் ஷவரில் குளிக்க விரும்புகிறார்கள். நம் அன்றாட தண்ணீர் செலவில் ஷவரில் குளிக்க மட்டுமே 27 சதவிகிதத்தை வீணாக்குகிறோம். ஒருவர் ஷவர் மூலம் ஒருமுறை குளிக்கும் தண்ணீரில், குடிசைப் பகுதியினர் ஒரு முழு நாளுக்குப் பயன்படுத்தலாம். வெஸ்டர்ன் டாய்லெட்டில் நாம் செய்யும் ஒரு சிங்கிள் ஃப்ளஷில் 12 லிட்டர் தண்ணீர் போகிறது. நகரங்களில் குழாய்களில் உள்ள விரிசல்கள் வழியே 50% நீர் வீணாகிறது.
உலகில் நான்கில் ஒருவருக்கு சுத்தமான நீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு 20 விநாடிக்கும் சுத்தமில்லாத தண்ணீரால் ஒரு குழந்தை இறக்கிறது. ஒரு நாளைக்கு 20 லட்சம் டன் குப்பையைத் தண்ணீரில் கொட்டுகிறோம். உலக அளவில் ஆண்டுக்கு 35 லட்சம் பேர் தண்ணீர் தொடர்பான நோய்களால் இறக்கிறார்கள்.
நாம் இதுவரை தொலைத்த தண்ணீரை இனி நம்மால் மீட்டெடுக்க முடியாது. ஆனால் இப்போது மிச்சமுள்ள நீர் ஆதாரங்களை நாம் காப்பாற்றிக் கொள்ளமுடியும். இதற்கு இந்த நிமிடத்தில் இருந்து நமது பணியை துவக்கவேண்டியது அவசியம். இனிவரும் தலைமுறையினருக்கு நாம் விட்டுச்செல்லும் சொத்து தண்ணீராக இருக்க வேண்டும்.
ஜெ.சரவணன்  
நன்றி: விகடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *