முப்பதாயிரம் விதைப்பந்துகள் வீசிய மக்கள் குழு!

டந்த 2016 டிசம்பர் 12-ம் தேதி, சென்னையை உலுக்கிய வர்தா புயலின் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. இதனால் வெள்ளச்சேதமோ அல்லது மழைப்பொழிவோ அதிகமாக இல்லை. ஆனால், சென்னையில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. இதனால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

மரங்கள் சாய்ந்ததற்கு காரணம், வெளிநாட்டு மரங்களை அதிக அளவில் நட்டதுதான் இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்களும், மரங்கள் வளர்ப்போரும் வலியுறுத்தினர். இதனை தடுக்க முடிந்த அளவுக்கு மரங்களை நட வேண்டும் என்று தமிழக அரசும், சுற்று சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து தாம்பரத்தைச் சேர்ந்த ‘தாம்பரம் மக்கள் குழு’ நேற்று காலை 30,000-க்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை (Seed balls) தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தூவினர். விதைப்பந்துகள் முளைத்து வளரும் சாத்தியக்கூறு  அதிகம்

இளைஞர்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று வயது வரம்பு இல்லாமல் அனைவரும் இந்த நிகழ்வில் அதிக அளவில் பங்கேற்றனர். இயற்கையை காக்கும் இந்த முயற்சிக்கு தாம்பரம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜனகன் கூடியிருக்கும் மக்களிடம் உரையாற்றி விதைபந்து எரிதல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.  “வர்தா புயலின் காரணமாக சென்னையில் அயல் நாட்டு மரங்கள் அதிகமாக சாய்ந்து விட்டன. அதற்கு பதிலாக நம் நாட்டு மரங்களை விதைக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது முழுமையான உண்மை இல்லை. புளிய மரம் கூட நம் நாட்டைச் சேர்ந்த மரம் இல்லை. எனவே, நம் நாட்டு மண்ணை பாழ்படுத்தக்கூடிய, தேவைக்கு மேல் நீர் உரிஞ்சக்கூடிய அயல்நாட்டு மரங்களை நடக்கூடாது.


எங்கள் குழு மேற்கு தாம்பரம் பகுதியில் ஏரியை சுத்தப்படுத்துவது, சீமைக் கருவேலை மரங்களை அகற்றுவது, ஏரியைச் சுற்றி பல விதைகளை விதைப்பது, பொது கழிப்பறைகள் கட்டுவது என்று பல சமூக சேவைகளை செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த நிகழ்வு. 3 ஏக்கர் அளவில் மாதிரி பண்ணை உருவாக்கி விவசாயத்தை ஊக்குவிக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 25,000 மாணவர்களை எங்கள் 6,000 கிலோமீட்டர் மிதிவண்டி பயணத்தில் சந்தித்து இயற்கை வளம் காத்தல் குறித்து பேசியிருக்கிறோம்.

இன்று மரக்கன்றுகளை நடாமல் விதைப் பந்துகளை வீச திட்டமிட்டதன் நோக்கம் மரங்கள் அதன் தன்மையில் இயற்கையாக வளரவேண்டும் என்பதுதான். ஒரு விதையை தூவினால் அது மண்ணிலேயே வளரத் தொடங்கும். அது மரமாகும் போது வேரின் வளர்ச்சிக்கு எல்லையே கிடையாது. மரம் நன்றாக ஊன்றி வளரும். ஐந்து பங்கு களிமண், மூன்று பங்கு இயற்கை உரங்கள் மற்றும் ஒரு பங்கு விதை (கன்றிமணி, மகிழம், பூவரசு, பொங்கன் விதைகள் ஆகியவை உகந்தது) ஆகியவற்றுடன் மருத்துவ குணம் வாய்ந்த துளசி, தும்பை விதைகள், சிறுதானிய விதைகள் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து தூவ வேண்டும். மரத்தினுடைய விதைகளை பந்துகளாக தூவினால் போதும். மழை பெய்யும் போது அவற்றுக்குள் தண்ணீர் சென்று விதைகளுக்கு ஈரமளித்து வளரச் செய்யும்” என்றார். அதற்கு பின்னர், கூடியிருந்த மக்கள் குழுவினர் மூன்று குழுக்களாக பிரிந்து விதைகளை தூவ ஆரம்பித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *