ஆர்டிக் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் ஏற்பட்டுள்ள தட்ப, வெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் அதிகமாக உருகி, ஏராளமான அளவில் நீர் வெளியேறி வருகிறது. இதே நிலை நீடித்தால், வரும் 2100ம் ஆண்டுக்குள் வங்கதேசம் முதல் புளோரிடா வரையிலும், பசிபிக் பெருங்கடலின் தாழ்வான பகுதிகளிலும், லண்டன் முதல் ஷங்காய் வரையிலான நகரங்களிலும் கடல் மட்டம் 1.6 மீட்டர் அளவிற்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சுனாமி தாக்கும் ஆபத்தும் அதிகரிக்கும் என்று கடல் நீர் மட்டம் குறித்த சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த ஆறு ஆண்டுகளாக பூமி உருண்டையின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
குறிப்பாக, ஆர்டிக் பகுதியில் வெப்ப நிலை உயர்ந்துள்ளது என எட்டு நாடுகள் கொண்ட ஆர்டிக் மானிடரிங், அசெஸ்மென்ட் திட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி, ஏராளமான அளவில் நீர் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் நீர் கடலில் கலப்பதால் கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில், 0.9 மீட்டர் முதல் 1.6 மீட்டர் வரை அதாவது 5 அடி, 3 அங்குலம் வரை கடல் மட்டம் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலக தட்ப, வெப்ப நிலை குறித்து ஆய்வு செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, கடந்த 2007ம் ஆண்டில் நடத்திய ஆய்வில், வரும் 2100ம் ஆண்டில் கடல் மட்டம் 18 முதல் 59 செ.மீ., அளவுக்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடல் மட்டம் அதிகரிக்கும் போது மாலத்தீவு உள்ளிட்ட உலகின் சில நாடுகள் மூழ்கிவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2100ம் ஆண்டில் 1.6 மீட்டர் அளவிற்கு கடல் மட்டம் அதிகரிக்கப் போகிறது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடல் மட்டம் அதிகரிப்பால் சுனாமி தாக்குதலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.இதற்கு, சமீபத்திய ஜப்பான் சுனாமியை உதாரணமாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சுற்றுச்சூழலை பாதுகாத்து, வெப்ப நிலை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சர்வதேச அளவிலான இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்கும்.
நன்றி: தினமலர்