வெப்பத்தை குறைக்க புங்கன் மரங்கள்

சென்னை நகரில், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் வெப்பத்தை குறைக்க, ஏராளமான புங்கன் மரங்களை நட வேண்டுமென்று சமீபத்திய ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.

இதன் மூலம், தற்போதுள்ள வெப்ப நிலையில் 3 முதல் 5 டிகிரி வெயிலை குறைக்க முடியுமென்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பூமி வெப்பமாதலை தடுப்பதில் மரங்களின் பங்கு என்பது குறித்து வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் மாநில வன ஆராய்ச்சி மையத்தின் ஓய்வு பெற்ற துணை வன பாதுகாவலர் ஜெயினலாவுதீன் கடந்த ஒரு வருடமாக ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் முடிவில், பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆய்வு குறித்து ஜெயினலாவுதீன் கூறியதாவது:

Courtesy:Dinamalar
  • பூமி வெப்பமாதலை தடுப்பதில் மரங்கள் அதிகமாக பங்காற்றுகின்றன. வாயு மண்டலத்திலிருந்து பூமிக்கு வரும் வெப்பத்தை, பூமி மீது படவிடாமல் வாயு மண்டலத்திற்கே திருப்பி அனுப்பும் திறன் கொண்டவை மரங்கள்.
  • இந்த வகையில், வெவ்வேறு வகையான மரங்கள், வெவ்வேறு அளவில் வெப்பத்தை பிரதிபலித்து வாயு மண்டலத்திற்கு திருப்பி அனுப்புகின்றன.
  • இது குறித்து, புங்கன், வேம்பு, சொர்க்கம், வாகை, கடம்ப மரங்களை கொண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
  • இதில், புங்கன் மரங்கள் அதிகமான வெப்பத்தை வாயு மண்டலத்திற்கு திருப்பி அனுப்பி, நிலத்தை குளிர்ச்சியாக வைத்து கொள்கின்றன என்று தெரியவந்துள்ளது.
  • சென்னையில் ஆண்டுதோறும் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. குடியிருப்புகளின் பெருக்கத்தால் மரங்கள் வெட்டப்படுவதே இதற்கு காரணம்.
  • சென்னை நகர் முழுவதும் புங்கன் மரங்களை நட்டு வளர்த்தால், சென்னை நகரில் மட்டும் 3 முதல் 5 டிகிரி வெயிலை கண்டிப்பாக குறைக்க முடியுமென்று ஆய்வில் தெளிவாகியுள்ளது
    ஒரு வீட்டை சுற்றி புங்கன் மரம் வளர்த்தால் கோடைகாலங்களில் அந்த வீட்டை வெப்பம் தாக்குவதற்கு வாய்ப்பு இல்லை.
  • வெப்பத்தை குறைப்பதால், புங்கன் மரங்கள் வளர்ப்பதன் மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும். மின்சாரத்தை எந்தளவு சேமிக்கிறமோ, அந்தளவிற்கு மின்சார தயாரிப்பின் போது வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு வாயுவால் சென்னை நகரம் வெப்பமாவதும் குறையும்.
  • வாயு மண்டலத்திலிருந்து வெப்பத்தை மரங்கள் எந்த அளவிற்கு திருப்பி அனுப்புகிறது என்பதை “அல்பிடோ’ அளவின் மூலம் அறியலாம். இந்த வகையில் புங்கன் மரங்கள் தான் அதிகபட்சமாக 0.072 அளவு வெப்பத்தை திருப்பி அனுப்புகிறது.
  • தொழிற்சாலை மற்றும் வாகன புகை, அனல் மின்சாரம் தயாரிக்கும் போது வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு வாயுவாலும் புவி வெப்பமாதல் அதிகரிக்கிறது.
  • இதை கருத்தில் கொண்டு ஒரு வருடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், புங்கன் மரம் 0.072 அல்பிடோ, வேம்பு மரம் 0.035, கடம்பா மரம் 0.039, சொர்க்கமரம் 0.057, வாகை மரம் 0.051 அல்பிடோ என்ற அளவில் கார்பன் டை ஆக்சைடு மூலமான வெப்பத்தை குறைக்கின்றன.
  • புங்கன் மரம் தான் அதிகபட்ச வெப்பத்தை திருப்பி அனுப்புகிறது. இதனால், சென்னை மாநகரத்தில் புங்கன் மரங்களை அதிக அளவில் நட்டு வளர்த்தால் வரும் காலத்தில் வெயிலின் தாக்கத்திலிந்து சென்னையை காக்கலாம். இவ்வாறு ஜெயினலாவுதீன் கூறினார்.

நன்றி: தினமலர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *