கடலூர் சிப்காட், இன்னொரு போபால்?

கடலூர் ரசாயன மாசு பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம்.இங்கே உள்ள வேதியியல் தொழிற்சாலைகளால் இந்த இடம் “மிக அதிகமாக பாதிக்க பட்ட இடம்” என்று மதிய அரசால் அறிவிக்க பட்டது. இந்த இடத்தில வாழும் மக்களின் நிலைமைகளை விவரிக்கிறது ஹிந்துவில் வந்துள்ள இந்த கட்டுரை ….

இந்திய வரைபடத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் தென்படுகிறது. ஆனால், அந்த வரைபடத்தில் தென்படாத இன்னொரு போபால் தமிழகத்தில் இருக்கிறது. அது கடலூர் சிப்காட்!

‘கெமிக்கல் தீபகற்பம்’ – இப்படித்தான் சிப்காட் பகுதியை இந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள் என்கிறார் விவசாயி அமிர்தலிங்கம். சிப்காட் பகுதியில் இருக்கும் சுமார் 20 கிராமங்களில் ஒன்றான ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். இந்தக் கிராமத்தில் விவசாயம் நிர்மூலமானதில் பெரும்பங்கு நிலத்தடி நீருக்கு உண்டு.

“மூன்று பக்கமும் தொழிற்சாலைகள், ஒரு பக்கம் உப்பனாறு. அந்த ஆற்றையொட்டிப் பல காலம் ஆற்றுப் பாசனம் நடந்திருக்கிறது. ஆனால், தொழிற்சாலைக் கழிவுகள் பல வருடங்களாகத் தொடர்ந்து ஆற்றில் விடப்பட்டதால் இப்போது அது சீர்கெட்டுக் கிடக்கிறது. அது நிலத்தடி நீரையும் பாதித்துள்ளது” என்று விவசாயம் பொய்த்ததற்குக் காரணத்தை விளக்குகிறார் அமிர்தலிங்கம்.

மிகப் பெரிய சாதனை

இந்த ஆற்றையொட்டி ஈச்சங்காடு வாய்க்கால் என்ற ஓடை ஓடுகிறது. இதன் மூலம் ஓடைப் பாசனமும் நிகழ்ந்துள்ளது. ஆனால், சிப்காட் தொழிற்சாலைகள் இந்த ஓடையையும் விட்டுவைக்கவில்லை. அந்த ஓடையைக் கழிவு நீர் எடுத்துச் செல்லும் பாதையாகப் பயன்படுத்திவந்திருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக அந்த ஓடையை மீட்டெடுக்கப் போராடிவருகிறார் ஈச்சங்காடு கிராமத் தலைவர் செந்தாமரைக்கண்ணன்.

“நெல், கடலை, வெள்ளரி போன்ற பயிர்கள்தான் இங்கே பயிரிடப்பட்டுவந்தன. ஆனால், நிலத்தடி நீர் கெட்டுப் போனதற்குப் பிறகு இங்கு எல்லோரும் கம்பெனிகளுக்கு வெறும் ரூ.120-க்கு செக்யூரிட்டி வேலைக்குப் போகிறார்கள். எங்களை நிலத்தில் இருந்து வெளியேற்றியதுதான் சிப்காட்டின் மிகப் பெரிய சாதனை” என்றார் செந்தாமரைக் கண்ணன்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

மீனும் போனது

விவசாயிகளின் நிலை இப்படி என்றால், மீனவர்களின் நிலையோ இன்னும் மோசம். “உப்பனாற்றில் முன்பெல்லாம் கெளுத்தி உட்பட 50 வகையான மீன் இனங்கள் இருந்தன. ஆனால், இப்போது வெறும் 5 இனங்கள்தான் இருக்கின்றன” என்கிறார் பாரம்பரிய மீன்பிடித் தொழிலாளரான புகழேந்தி.

“தைக்கால் முகத்துவாரத்தில் இருந்து ஆலப்பாக்கம்வரை நீண்டிருக்கிறது இந்த உப்பனாறு. இடைப்பட்ட தொலைவில் 10 மீனவக் கிராமங்கள் இருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் குச்சி வலை என்கிற பாரம்பரிய முறையில்தான் மீன்பிடித்துவருகிறார்கள். சுமார் 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்னால் 4 மணி முதல் 5 மணி நேரம் ஆற்றில் இருந்தால் 300 முதல் 400 மீன்கள் வரை கிடைக்கும். இப்போது அதே அளவு நேரம் மீன்பிடித்தால் 100 முதல் 150 மீன்கள் வரை கிடைத்தால் பெரிய விஷயம்” என்கிறார் புகழேந்தி.

முதிர்கன்னிகள்

கடலூர் தொழிற்சாலைகள் ஏற்படுத்திய பாதிப்பு விவசாயிகள், மீனவர்களுடன் நின்றுவிடவில்லை. போபால் விஷ வாயுக் கசிவுக்குப் பிறகு அந்த ஊரில் திருமணமாகாத பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துவருகிறது. அதற்குக் காரணம், ஒரு வேளை அந்தப் பெண்களும் விபத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவர்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் பிறவிக் குறைபாடுகள், மற்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம் என்று பலரும் நம்புவதுதான்! அவர்களில் பலர் இன்றைக்கு முதிர்கன்னிகளாக தங்கள் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த நிலைமை இன்னும் சில ஆண்டுகளில் கடலூர் சிப்காட் பகுதியிலும் ஏற்படலாம். என்ன ஒரே வித்தியாசம்… முதிர்கன்னிகளோடு சேர்த்து முதிர்கண்ணன்களும் இங்கே இருப்பார்கள் என்பதுதான்!

“கடலூரில் பெண் கொடுப்பதற்கும், பெண் எடுப்பதற்கும் யாரும் முன்வருவதில்லை. மூச்சு திணறல், கண், தோல் எரிச்சல், குழந்தையின்மை, கருக்கலைதல், புற்றுநோய் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இங்கே பலருக்கு இருக்கின்றன. அதை அடிப்படையாக வைத்துத்தான் இங்குப் பலருக்கும் திருமணம் தடை பட்டிருக்கிறது. ஆரோக்கியமாக இருப்பவர்களும்கூட இந்தப் பகுதியில் வாழ்ந்துவருகிறோம் என்று சொல்லிவிட்டால் அவர்களுக்கும்கூட வரன் கிடைப்பதில்லை” என்கிறார் அமிர்தலிங்கம்.

என்ன காரணம்?

இந்த நிலையை மாற்றுவதற் காகத்தான் இங்கே நோய் தொற்று காரணவியல் ஆய்வு (epidemiology study) வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கைவிடுத்துவருகின்றனர்.

அப்படி ஆய்வு நடத்தப்பட்டால் எத்தனை பேர் எந்தெந்த விதமான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். அது தெரிந்துவிட்டால், அந்த நோய்கள் ஏற்படக் காரணம் என்ன என்பதும் தெரிந்துவிடும். அதன் மூலம், அந்தக் காரணங்களைக் கட்டுப்படுத்த வழி பிறக்கும்.

கடலூர் சிப்காட் பகுதியில் வசித்துவரும் மக்கள் மீது இப்படிச் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பல்முனைத் தாக்குதல் தொடுப்பதற்கு என்ன காரணம்? அங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களை நோக்கிக் கைகள் நீள்கின்றன. இதற்குச் சாட்சியமாக ‘தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம்’ (Neeri) மேற்கொண்ட ஆய்வு சுட்டிக்காட்டப்படுகிறது.

கரிம மாசு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 2007-ம் ஆண்டு கடலூர் சிப்காட் பகுதியில் நீரி ஆய்வு மேற்கொண்டது. அதில் ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் (volatile organic compounds) குறித்து ஆராயப்பட்டது.

ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் என்பது இயல்புநிலையிலேயே அதிக ஆவி அழுத்தம் கொண்டவை. அதனால், சில வேதி பொருட்கள் குறிப்பிடத்தக்க அளவு ஆவியாகி வளி மண்டலத்தில் கலந்துவிடும் வேதியியல் சேர்மங்களாகும். இப்படி வளிமண்டலத்தில் கலக்கும் வேதி சேர்மங்களால் காற்று மாசுபடுகிறது. அந்தக் காற்றைச் சுவாசிக்கும் மக்களும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இந்த ஆய்வில் சிப்காட் பகுதியில் 14 வகையான ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது (பார்க்க: பெட்டிச் செய்தி).

நடைப்பிணம்

இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்ட காலத்தில் சிப்காட் பகுதியில் மொத்தம் இருந்த 51 தொழிற்சாலைகளில் 25 தொழிற் சாலைகள் மூடப்பட்டிருந்தன. மீதி 26 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கின. மூடப்பட்ட அந்தத் தொழிற்சாலைகளும் முழு அளவில் இயங்க ஆரம்பித்தால், மேற்கண்ட வேதி பொருட்களின் அளவு மூன்று மடங்கு கூடுதலாக இருக்கலாம். அப்படியென்றால் ஏற்கெனவே பாதிப்புகளால் திணறிக்கொண்டிருக்கும் மக்கள், இன்னும் மோசமான பாதிப்புகளால் அவதிப்பட நேரிடலாம் என்பதுதான் நிதர்சனம்.

ஆகவே, எந்தெந்தத் தொழிற்சாலைகள் எந்தெந்த விதமான வேதி பொருட்களை வெளியேற்றுகின்றன என்பதை அடையாளம் கண்டு, அவற்றைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அதற்கு நோய் தொற்று காரணவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். ஆனால், தீர்வு கண்ணில் தெரியும் நாள் மட்டும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

அதுவரையில், வேதனையோடு உடலில் நச்சு வேதி பொருட்களையும் சுமந்துகொண்டு நடைப்பிணம் போல வாழ்ந்துவருகிறார்கள் கடலூர் மக்கள்.

(ந. வினோத் குமார் – கட்டுரையாளர், தொழிற்சாலை மாசுபாடு குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் 19-வது ஊடக நல்கை (Centre for Science & Environment, CSE – 19th Media Fellowship) பெற்றவர்.)

 நன்றி: ஹிந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *