தாமிரபரணி: மண் மேடாகிப்போன ஸ்ரீவைகுண்டம் அணை

தாமிரபரணி ஆற்றின் கடைசி அணை ஸ்ரீவைகுண்டம் அணை. இங்கே ஆற்றின் நீரோட்டம் ஓடையாக சுருங்கிக்கிடப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தின் விவசாயத்துக்கு உயிர் நாடியாக திகழ்வது ஸ்ரீவைகுண்டம் அணை. இந்த அணை 1873-ல் பக்கிள் என்கிற ஆங்கிலேயே அதிகாரியின் முயற்சியால் கட்டப்பட்டது. ஒரு கி.மீ. சுற்றளவுடன் 8 அடி தண் ணீரை தேக்கும் அளவுக்கு இந்த அணை கட்டப்பட்டது. ஆனால், பெயருக்குத் தான் 8 அடி. இதுவரை அணை தூர் வாரப்படாததால் இப்போது அணையில் ஒரு அடி கூட தண்ணீரைத் தேக்க முடியாது. அணையில் சுமார் 6 அடிக்கு மேல் மணலும், சகதியும் சேர்ந்துள்ளன. அணைப் பகுதி மேடானதுடன் அமலைச் செடிகளும், சீமைகருவேல மரங்களும் வளர்ந்துள்ளன. இதனால், மழைக் காலங் களில் ஆற்றில் வரும் தண்ணீர் அணை யைத் தாண்டி பெருமளவு வெளியேறி கடலில் கலக்கிறது. ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து பிரியும் தென்கால் மூலம் 12,760 ஏக்கரும், வடகால்மூலம் 12,800 ஏக்கரும் பாசன வசதி பெறும் வகையில் பாசன கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

Courtesy: Hindu
Courtesy: Hindu

பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார பல முறை திட்ட மதிப்பீடுகள் தயாரித்தும், பணிகள் நடக்கவில்லை. இந்நிலையில்தான் தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் எஸ். ஜோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அணையை தூர்வாரக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த ஜூன் 10-ம் தேதி அணையை தூர் வார அனுமதி அளித்தது. ஆனாலும் தூர் வாரும் பணிகள் சரிவர நடக்கவில்லை என்று கடந்த ஜூலை 6-ம் தேதி ம.தி.மு.க., அணையை தூர் வாரும் போராட்டத்தை நடத்தியது. தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை அறிவித்ததால் அணையை தூர் வாரும் பணிகளை பொதுப்பணித்துறையினர் தொடங்கினர். ஆனால், பணிகளில் தொய்வு நிலவுகிறது.

மழைக்கு முன் முடியுமா பணிகள்?

வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பணிகளை முடிக்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள். ஏனெனில் மழைக் காலத்தில் தூர் வார முடியாது. தூர் வாரினாலும் பயன் இல்லை. இன்னொரு பக்கம் அணைப்பகுதியில் தூர் வார்கிறோம் என்ற பெயரில் மணல் கொள்ளை நடைபெற வாய்ப்பிருப்பதையும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஸ்ரீவைகுண்டம் அணையில் 70%வண்டல் மற்றும் கழிவுகளும் 30 சதவீதம் மணலும் உள்ளதாக ஆய்வறிக்கை, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள  நிலையில், கழிவுகளை அகற்றாமல் 11 நாட்களில் சுமார் 2,500 யூனிட் மணல் அள்ளப்பட்டு கங்கைகொண்டான் மற்றும் சாத்தூர் பகுதிகளில் குவித்து  வைக்கப்பட்டுள்ளது. தூர்வாரும் பணி என்ற பெயரில் மணல் குவாரி பணி மட்டுமே நடக்கிறது!!

Courtesy: Dinakaran
Courtesy: Dinakaran

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவது என்பது தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பெரும் கனவு. நீண்ட காலத்துக்குப் பின் இப்போது தூர் வாருவதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ள நிலையில் பணிகளை அக்கறையுடன் விரைந்து முடிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.

நன்றி: ஹிந்து

எந்த காலத்திலோ எந்த ராஜாவோ கட்டிய ஏரிகளையும் நம்மை ஆண்ட வெள்ளைகாரர்கள் கட்டி விட்டு சென்ற கால்வாய்களையும் மராமத்து செய்யாமல் இப்படி அழிய செய்த நம்முடைய ஆட்சியாளர்களை என்ன சொல்வது? நம்மால் தான் இப்போது வீராணம் போன்ற எரியையோ கல்லணை போன்ற ஒரு அணையையோ கட்ட முடியாவிட்டாலும் நம் முன்னோர்கள் விட்டு சென்ற  சொத்துகளை சரியாக வைத்து கொள்வது நம் கடமை அன்றோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *