நஞ்சூரான கடலூர்

கடலூரில் உள்ள சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். அதை பற்றிய நிலைமையை விவரிக்கும் ஹிந்துவில் வந்த ஒரு செய்தி..

இதை படிக்கும் நீங்கள் கடலூரில் ரசாயன தொழிற்சாலை வட்டத்தில் வாழ்ந்தால் தயவு செய்து உங்கள் உயிரை புற்று நோயில் இருந்து காப்பாற்றிக்கொள்ள வேறு ஊருக்கு  செல்லவும். கடலூரில் இருந்து வரும் மீன்களை உண்ணாதீர்கள்!


கடலூர. இந்தப் பெயரே பல தருணங்களில் எனக்குக் கிளர்ச்சியைத் தந்திருக்கிறது. எத்தனையோ ஊர்களில் கடல் இருக்கிறது என்றாலும், பெயருக்கேற்றாற்போல, அற்புதமான கடல் ஊர் கடலூர். நீலக் கடல். கண்ணாடிபோல காலடியைத் தழுவும் தெள்ளத்தெளிந்த அலைகள். நீளமான கடற்கரை. கடற்கரையிலிருந்து கொஞ்சம் வெளியே வந்தால், நீளவாக்கில் குறுக்கே செல்லும், படகுகள் ஓடும் பரவனாறு. இன்னும் கொஞ்ச தூரம் கடந்தால், கெடிலம் ஆறு. கேரளத்தை நினைவூட்டக் கூடியவை கடலூரின் கடற்கரைக்கும் பரவனாறுக்கும் இடைப்பட்ட பகுதிகள். சில நிமிஷங்கள் உட்கார்ந்து லயித்தால், அப்படியே காலத்தோடு உறைந்துபோகலாம். அத்தனை ரம்மியம்!

ஒரு ஓடாவியின் கனவு

பரவனாறு தோணித் துறையில் வரிசையாகக் கட்டிக் கிடக்கின்றன சின்னதும் பெரியதுமான தோணிகள். கருப்பமுத்து அம்மன், ஆவணி அம்மன், ஒண்டிவீரன், சண்டக் கோழி… பெரும்பாலும் குலசாமி பெயர்கள் அல்லது சினிமா பெயர்கள். கால்கள் சங்கிலியில் பிணைக்கப்பட்ட கோயில் யானை அசைவதுபோல, தண்ணீரில் கயிற்றுக்குக் கட்டுப்பட்டு அசைந்துகொண்டிருக்கின்றன. சின்னப் பிள்ளைகளின் குறும்பைச் செல்லமாகப் பார்ப்பதுபோல, அவற்றைப் பார்த்தபடியே கரையில் கட்டப்படும் ஒரு பெரும் தோணியைப் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் ஓடாவி ஐயாதுரை. தமிழகத்தின் மூத்த ஓடாவிகளில் ஒருவர். 86 வயது

ஊரைப் பற்றிப் பேசும்போது பெருமிதமும் துக்கமும் ஒருசேர அவரைத் தாக்குகின்றன. “எம்மாம் மாரி ஊர் தெரியூமா இது, இன்னா அழகு என் ஊரு? எல்லா அழகையும் தொழிச்சாலைங்களைக் கொண்டாந்து நாசமாக்கிட்டாங்க…” – கண்கள் இடுங்கிப் போகின்றன. பேச முடியாமல் தலை குனிந்துகொள்கிறார்.

போர்களைவிடவும் கொடியவை

தொன்மையான ஊர் கடலூர். கெடிலமாறும் பரவனாறும் கடலும் கூடும் இடத்தில் இருந்ததால், கூடலூர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என்று பலருடைய ஆட்சியின் கீழும் இருந்த ஊர். எல்லோருக்குமே கடலூரின் மீது ஒரு கண் இருந்ததன் காரணத்தை ஊரின் வனப்பையும் புவியியல் அமைவிடத்தையும் பார்க்கும்போது ஊகிக்க முடிகிறது. எவ்வளவோ தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறது கடலூர். இயற்கைச் சீற்றங்களையும் அடிக்கடி எதிர்கொள்ளும் ஊர். ஆனால், இயற்கைச் சீற்றங்களும் போர்களும் உருவாக்காத பாதிப்பை கடலூரில் நவீன ஆலைகள் உருவாக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் ஊர் மக்கள்.

“காலங்காலமா எங்களுக்குப் பெருமழையும் புயலும் சகஜம். முன்னோருங்க நெறைய போர், சண்டைங்களைப் பார்த்திருக்காங்க. ஆனா, அதெல்லாம் உண்டாக்க முடியாத அழிவை வெறும் 30 வருஷத்துல கொண்டாந்துடுச்சுங்க இந்தத் தொழிற்சாலைங்க.

Courtesy: Hindu
கடலில் சேரும் ரசாயன கழிவுகள் Courtesy: Hindu

எங்க ஊர் ‘சிப்காட்’ தொழிப்பேட்ட ஒலக அளவுல பேசப்படுற நச்சு மையங்கள்ல ஒண்ணு. நிலத்தடித் தண்ணீ சுத்தமா நாசமாப்போய்டுச்சு. காத்து மூக்குல நெடி ஏறும். ஊருல இல்லாத சீக்கு இல்ல. எம்மா நாளு சும்மாவே பார்த்துக்கிட்டு இருக்கிறது? பத்து வருஷத்துக்கு முன்னாடி, சுத்துச்சூழல்ல அக்கறை உள்ளவங்க களத்துல எறங்கினாங்க. தொடர் போராட்டங்களோட விளைவா, இங்கெ நெறைய ஆய்வுங்களை நடத்தினாங்க. அப்புறம்தான் நம்ப எவ்வளோ பெரிய நச்சு மையத்துல வாழ்ந்துகினுருக்கோம்கிறது ஊர்க்காரங்களுக்குப் புரியவந்துச்சு” என்கிறார்கள்.

தமிழகத்தின் நச்சு மையம்

“இங்கருக்குற 18 பெரிய ஆலைங்களுமே சிவப்புப் பட்டியல்ல வர்ற ஆபத்தான ரசாயனங்களைக் கையாள்ற ஆலைங்க. இவங்க கையாள்ற பல ரசாயனங்க அபாயகரமானதுங்க. கண்ண, தோல, சுவாச உறுப்புங்கள, நரம்பு மண்டலத்த, சிறுநீரகத்த பாதிக்கக் கூடியதுங்க. நாங்க எம்மாம் போராடியும்கூட இங்க உள்ள அதிகாரிங்க அசர்ல. ஆறு வர்சத்துக்கு முன்னாடி நீரி அமைப்பு (NEERI-தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வுக் கழகம்) கடலூர்ல ஆய்வு நடத்துச்சு. ‘கடலூர் ரசாயன ஆலைகள்லேர்ந்து வெளியாவுற நச்சுப் பொகயால இந்தச் சுத்துவட்டாரத்துல இருக்குறவங்களுக்குப் புத்துநோய் வர்றதுக்கான வாய்ப்பு மத்த எடத்தைக் காட்டிலும் ரெண்டாயிரம் மடங்கு ஜாஸ்தியா இருக்கு’ன்னு அந்த ஆய்வறிக்கை சொல்லிச்சு. தேசிய அளவுல இது விவகாரமானதும்தான் கொஞ்சமாச்சும் நடவடிக்கைன்னு ஏதோ எடுக்க ஆரம்பிச்சாங்க” என்கிறார் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் அருள்செல்வம்.

ஆக்கிரமிப்புகளும் அத்துமீறல்களும்

ஊரின் நிலைமை உருவாக்கும் கவலை பலரையும் போராட்டக் களத்தில் இறக்கியிருக்கிறது. அவர்களில் மருதவாணனும் ஒருவர். பொதுத்துறை வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். “கடலூர்ல எங்க போனீங்கன்னாலும் அரசியல்வாதிங்களோட ஆக்கிரமிப்புங்களையும் ஆலைகளோட அத்துமீறல்களையும் நீங்க பாக்கலாம். ஆலைங்க ஊரை நாசமாக்கிட்டுங்கிறதுக்குப் பின்னாடி ஒரு வரலாறு இருக்கு. தமிழ்நாட்டுல மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்கிற அமைப்பை ஆரம்பிச்சதே 1982-லதான். கடலூர் சிப்காட் 1984-ல அமைக்கப்பட்டது. அந்தக் காலகட்டதுல இன்னிக்கு இருக்குற சுற்றுச்சூழல் விழிப்புணர்வெல்லாம் கிடையாது; அதனால, இந்த ஆலைங்களையெல்லாம் அனுமதிச்சுட்டாங்கங்கிறதை ஒப்புக்கலாம். ஆனா, தண்ணீ நஞ்சாயி, காத்து நஞ்சாயி எப்போ வேணும்னாலும் எது வேணும்னாலும் நடக்கலாம்கிற சூழல் உருவாயிருக்குற இந்த நாள்லேயும் நாம இதை அனுமதிக்கலாமா?

கொடுமை என்னான்னா, உள்ள ஆலைங்களை எதிர்த்து நாங்க போராடிக்கிட்டுருக்குற சூழல்ல, திருப்பூரை அழிச்ச சாயப்பட்டறைத் தொழிலுக்கும் இங்கே அனுமதிச்சு, புது ஆலைங்களுக்கு அனுமதி கொடுக்குது அரசாங்கம். மத்திய அரசாங்கம் தொடர்ந்து தனியார் துறைமுகங்களுக்கும் நிலக்கரி ஆலைங்களுக்கும் அனுமதி கொடுக்குது. நாங்கல்லாம் வாழல; வாழறதுக்காகச் செத்துக்கினுருக்கோம்” என்கிறார்.

ரசாயனக் கடல் (Chemical Cocktail)

கடலூர் தொழிற்சாலைகளையொட்டி நடந்தால் மனம் பதறுகிறது. பல ஆலைகளின் ரசாயனக் கழிவுகள் குழாய்கள் வழியே கடலுக்குள் கொண்டு விடப்பட்டிருக்கின்றன. கடல் நடுவே அவ்வப்போது கொப்பளித்து நிறம் மாறி அடங்குகிறது தண்ணீர். காலையிலிருந்து மெல்ல நெடியேறிக்கொண்டிருக்கும் காற்று சாயங்காலம் ஆனதும் கடுமையான நாற்றம் கொண்டதாக மாறுகிறது. கண்கள் எரிகின்றன. கண்ணெதிரே புகை ஒரு படலமாக உருவெடுப்பதைப் பார்க்க முடிகிறது. கடற்கரையிலிருந்து தூரத்தில் உருப்பெறும் புதிய துறைமுகங்களும் ஆலைகளும் தெரிகின்றன. கடலோடிகள் கடலை வயிற்றெரிச்சலோடு பார்த்துக்கொண்டிருக்கின்றனர். “தொயில் வுட்டுபோச்சு. காலங்காலமாக் கடலை நம்பியிருந்த குடும்பங்க இன்னைக்கு வேற எதாச்சும் கூலி வேலைக்குப் போயிடலாமான்னு யோசிச்சுக்கினு இருக்குங்க. போராடுறோம். ஒண்ணும் வேலைக்காவல” என்கிறார் சுப்புராயன்.

தலைமுறை தலைமுறையாகக் கடல் தொழிலில் இருந்த புகழேந்தி, தொழில் அற்றுப்போனதால், பிழைப்புக்குக் கறிக்கோழிக் கடைக்குச் செல்கிறார். “சின்ன வயசுல ஒரு வாட்டி கடலுக்குப் போனா, எர்நூரூபாக்கி அள்ளிகினு வருவம். நான் சொல்லுறது அம்பது வர்சத்துக்கு முன்னால. பத்துப் பதினைஞ்சு வர்சத்துக்கு முன்னாடிகூட கரையில ஓடியார்ற வண்ணாத்தி நண்டைப் புடிச்சாலே அன்னிக்குப் பொயப்ப ஓட்டிடலாம். இன்னிக்கு இந்த வயசில நாளெல்லாம் ஒயச்சு சலிச்சாலும் அம்பது ரூவா கிடைக்கலை. என்னா பண்றது? தலையெயித்து. கறிக்கோயி வெட்டுறன். தொறமுகம், நெலக்கரி ஆலையின்னு புச்சு புச்சா கடக்கரையை ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க கடலு அரிக்குது. போயிப் பாருங்க, எத்தன கட்டடம் அரிச்சு இடிஞ்சு வுயிந்து கெடக்குன்னு. மீனு வளம் சுத்தமா காலி.  யோசிக்கணும். கடலூரு நச்சுக்காத்தும் ரசாயனம் கலந்த கடத்தண்ணீயும் இங்கேக்குள்ளேயேதான் நின்னுக்குமா? உங்கக்கிட்ட வராதா? யோசிக்கணும். எங்க காலம் பூட்ச்சு; நீங்கலாம்தான் இன்னா பண்ணப்போறீங்கன்னு தெர்லபா”

நன்றி: ஹிந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *