மனிதர்களை காப்பாற்றும் அலையாத்தி காடுகள்

ஆழிப் பேரலை Tsunami, தமிழகக் கடற்கரைகளை 2004-ல் தாக்கியபோது, சிதம்பரம், முத்துப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிகமில்லை. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? அங்கிருந்த இயற்கைத் தடுப்பரண்கள். அதாவது அலையாத்திக் காடுகள். (Mangrove forests)

இந்த அலையாத்திக் காடுகள் சத்தமின்றி, மந்திரஜாலம் செய்வதுபோல நமது கடற்கரைகளைக் காலங்காலமாகக் காப்பாற்றிவருகின்றன. அவை செய்யும் பேருதவிகளில் சில:

புயல் தடுப்பு

பருவமழைக் காலங்களிலும், புயல் காலங்களிலும் பெரும் புயல்களும் பேரலைகளும் நம் கடற்கரைகளைத் தாக்குகின்றன. இந்த அதிவேகமான இயற்கைச் சீற்றங்களை, அலையாத்திக் காடுகள் அமைதியாக எதிர்கொண்டு தடுக்கின்றன. கடற்கரையில் பெரும் தடுப்பு அரண் போலிருக்கும் இவை, புயலின் வேகத்தைக் குறைக்கின்றன. நமது வீடுகள், நிலப்பகுதி ஆகியவற்றின் அழிவைத் தடுக்கின்றன.

Courtesy: Wikipedia
Courtesy: Wikipedia

வெள்ளத் தடுப்பு

அலையாத்திக் காடுகள் ஆழமற்ற மிகப் பெரிய கிண்ணங்களைப் போலிருக்கின்றன. அதனுள் புகும் தண்ணீர் தனது இயக்க ஆற்றலை இழந்து பரவ ஆரம்பிக்கிறது. இக்காடுகளின் தரைப் பகுதியில் உள்ள அடர்த்தியான தாவரங்களும் தண்ணீரின் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

இயற்கை இனப்பெருக்க மையம்

மீன்கள், இறால்கள், நண்டுகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடமாக அலையாத்திக் காடுகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் அவற்றின் குஞ்சுகள் பிழைக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால், இங்குக் கிடைக்கும் ஊட்டச்சத்துமிக்க உணவு, அவற்றின் உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. நமக்கு உணவாகும் பல மீன்கள் அலையாத்திக் காடுகளை நம்பியே வாழ்கின்றன.

Courtesy: Wikipedia
Courtesy: Wikipedia

வண்டல் காவலர்கள்

மலைச்சரிவில் இருந்துவரும் மழை நீர் மிக நுணுக்கமான வளம் நிறைந்த வண்டல் மண்ணையும் ஊட்டச்சத்து மிகுந்த தாவர இலைகளையும் அடித்து வரும். அலையாத்திக் காடுகள் அந்த வண்டலையும் இலைகளையும் பிடித்து வைத்துக்கொள்கின்றன. அலையாத்திக் காடுகளில் உள்ள தாவரங்கள், உயிரினங்கள் அந்தச் சத்துகளை உணவாக்கிக் கொள்கின்றன.

நடக்கும் காடுகள்

அலையாத்திக் காடுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கடலை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பதால் நமக்கு அதிக நிலப்பகுதி கிடைக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் சிறிதளவு கடல் பகுதியை ஒவ்வொரு அலையாத்திக் காடும் ஆக்கிரமிக்கிறது. அதேநேரம் உள்ளே நிலப்பகுதி உருவாகிறது.

ஆபத்துகள்

ஆனால், அலையாத்திக் காடு களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் நாம் அவற்றை அழித்துவருகிறோம். தொழிற்சாலைக் கழிவு நீர் அலையாத்தித் தாவரங்களை அழிக்கிறது. உப்பளங்களில் இருந்து வெளியேறும் அளவுக்கு அதிகமான உப்பு நீர் தாவர வளர்ச்சியைப் பாதிக்கிறது. செயற்கை இறால் பண்ணைகள் அமைக்க அலையாத்திக் காடுகள் அழிக்கப் படுகின்றன. நதிகளில் தண்ணீர் வரத்து குறைவதாலும் இயற்கையாகவே அலையாத்திக் காடுகள் அழியும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

நன்றி: ஹிந்து

மனிதனுக்கு இயற்க்கை கொடுத்த அரண்களை இப்படி அழிக்கல் ஆகுமா? short term gains எனப்படும் உடனடி லாபத்திற்காக எத்தனையோ வருடமாக வளர்ந்துள்ள  இந்த இயற்க்கை அரண்களை அழிப்பது எப்படி நியாயம்? எல்லாமே பொருளாதார வளர்ச்சி என்ற பேரில் சப்பை கட்டுதல் எப்படி பட்ட முட்டாள்தனம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *