நிலத்தடி நீர் நெருக்கடி

வருகிற 2,030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் வறட்சியாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவையின் வெள்ளை அறிக்கை கூறுகிறது.

கையால் மணலை அள்ளி அகற்றிவிட்டு, ஊற்று நீரைக் குடித்த தமிழ்நாட்டில், இன்று 200 அடிக்கும் கீழேதான் நிலத்தடி நீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் கீழ்நோக்கிப் போய்க்கொண்டே இருக்கிறது.

பருவமழைக் காலங்களில் தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் எந்தவித பயன்பாட்டுக்கும் உதவாமல் அப்படியே கடலுக்குள் சென்று கலந்து வீணாகிறது. அதே நேரத்தில், காவிரியிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. அந்த மழை நீரும் எந்தவிதப் பயன்பாட்டுக்கும் உதவாமல் கடலில் கலக்கிறது.

கடல் முகத்துவாரத்தில் இருந்து 30 முதல் 40 கி.மீ. தூரத்துக்கு முன்பாக தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கு வழியேற்படும். அதே நேரத்தில் கடலில் சென்று சேரும் நீரைத் தேக்கி விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தண்ணீரை விற்றுத் தங்கள் பணத் தாகத்தை தீர்த்துக் கொள்ள பல வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அரசின் உதவியுடன் தமிழ் நாட்டின் நீர்வளத்தைச் சுரண்டி வருகின்றன. தண்ணீர் விற்பனையில் பெரும் பங்கு வகிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுடன், உள்ளூர் நிறுவனங்களும் ஆற்று நீரை மட்டுமல்லாது நிலத்தடி நீரையும் கொள்ளையடிக்கின்றன.

இருபத்தோராம் நூற்றாண்டின் நிலத்தங்கம் தண்ணீர் என அழைக்கப்படுகிறது. தண்ணீர், தங்கத்துக்கு நிகரானது, அது ஒரு நீரகத் தங்கம் என்றார் ஆர்தர் காட்டன். சென்னை ராஜதானியாக இருந்தபோது தலைமைப் பொறியாளராக பணியாற்றியவர் இவர். கல்லணையின் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி கோதாவரியின் குறுக்கே அணையைக் கட்டினார்.

அனைத்து ஆறுகளையும் இணைத்தால் கடலில் வீணாகும் தண்ணீரை சேமித்து வேளாண்மைக்கும், குடிநீருக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மழையில்லாக் காலங்களில் வறண்டு கிடக்கும் ஆறுகளெல்லாம் வற்றாத ஜீவ ஆறுகளாக மாறும். தண்ணீருக்காக எந்தவொரு மாநிலமும் ஏங்க வேண்டிய நிலைமை ஏற்படாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு உலக வங்கியும், தனியார் தண்ணீர் குழுவினரும் இணைந்து இயற்கை வளங்களின் பொதுப்பிரிவில் இருந்த தண்ணீரை வர்த்தகப் பொருள் பிரிவிற்கு மாற்றினர். இக்கருத்தை உலக நாடுகளிடையே பரப்பியதால் பல நாடுகள் தண்ணீரை தனியாரிடம் ஒப்படைக்க முனைந்தன.

குடிநீருக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் தவிர ஏனைய அனைத்துப் பணிகளுக்கும் இன்றியமையாத தண்ணீரை இனிமேல் பணம் கொடுத்துதான் பெற வேண்டிய சூழல் உருவாகும்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சென்னை ராஜதானியாக இருந்த போது பாலாறு தோன்றும் இடத்திலிருந்து கல்பாக்கம் வரை 240 கி.மீ. தமிழ்நாட்டுக்கு உரியதாகத்தான் இருந்தது. 1956-இல் மொழிவாரி மாநிலம் உருவாகியபோது தமிழர் பகுதியான சித்தூரை ஆந்திரத்துடனும், தங்கவயல் கோலாரை கர்நாடகத்துடனும் இணைத்ததால் 70 கி.மீ. கர்நாடக மாநிலத்துக்கும், 22 கி.மீ. ஆந்திர மாநிலத்துக்கும் சொந்தமாகிப் போனது.

பாலாற்றுத் தண்ணீரை தமிழன் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எப்படித் தெரியுமா? ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள பாலாற்றின் குறுக்கே 22 கி.மீ. தூரத்தில் 26 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகளில் தண்ணீர் தேக்கப்பட்டு மீதமுள்ள தண்ணீர்தான் தமிழ்நாட்டுக்கு வரும்.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பவானி ஆற்றுத் தண்ணீரை தமிழர்களின் தேவைக்குப் பயன்படாதவாறு கேரள எல்லைக்குள் சுமார் 16 கி.மீ. இருக்கும் வகையில் கேரள எல்லையை வடிவமைத்தது எவ்வளவு பெரிய துரோகம்? இது போன்ற அவல நிலையால்தான் தமிழ்நாட்டில் உருவான ஆறுகள் தமிழர்களுக்கு உதவாமல் போயின.

இப்படியாக தண்ணீரை இழந்து தவிக்கும் தமிழ்நாட்டில் உள்ள 39,000-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்களை இயந்திரங்களை பயன்படுத்தி ஆழப்படுத்த வேண்டும்; ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்; கிராமங்கள்தோறும் உள்ள சிறிய, பெரிய நீர்நிலைகளை சுத்தப்படுத்தி நீர் சேமிப்புக் கலன்களாக மாற்ற வேண்டும்.

தமிழக ஆறுகள் அனைத்தையும் இணைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவற்றை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த ஒரே நேரத்தில் 54,000 சிற்றூர்களும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இந்நிலை உருவானால்தான் நமது எதிர்கால சந்ததியைக் காக்க இயலும். இல்லாவிட்டால் நாம் வேளாண்மைக்கு மட்டுமல்ல, குடிநீருக்கும் ஆலாய்ப் பறக்க வேண்டிய நிலை ஏற்படும்.

 நன்றி :தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *