நதி நீர் இணைப்பு திட்டமும், சோழர்களின் நீர் மேலாண்மையும்

(முன்குறிப்பு: ஆங்கிலத்தில்  ‘Romanticize’ என்றொரு சொல் உண்டு. அதாவது இருக்கின்ற விஷயத்தை மிகைப்படுத்தி அதை சிறப்பாக கூறுவது. இந்த கட்டுரை அந்த வகையை சேர்ந்தது அல்ல. அதனால் இதை மற்றுமொரு தமிழ் பெருமை பீற்றல் என்று கடந்து விடாதீர்கள்.)

பெரிய திட்டங்களை கண்டு எப்போதும் வியப்பது, அந்த பெரிய திட்டங்கள் நமக்கு வேண்டும் என்று கேட்பது நம் பொதுவான இயல்பு. நீர் மேலாண்மை விஷயத்தில் எடுத்துக் கொண்டால் கூட, நமது கோரிக்கைகள் எப்போதும் பெரிய அணைகளாக, நதி நீர் இணைப்பாக இருந்துகிறது. இந்த இயல்பினால் தான் உலகின் பழமையான அணையை கட்டியவன் சோழன்  என்று பெருமை கொள்கிறோம். ஆனால், அதே சோழர்கள் வெட்டிய லட்சக்கணக்கான குளங்கள், ஏரிகளை  பற்றி பேச மறுக்கிறோம்.

கரிகாலனின் கல்லணை குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும்தான். இப்போது கட்டப்படும் அணைகள் போலானது அல்ல, சோழன் கட்டிய கல்லணை. சூழலுக்கு அதிகம் தீங்கிழைக்க்காமல், கல், மண் மற்றும் களிமண் கொண்டு கட்டப்பட்ட அணை அது. அதனால்தான், இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டன், கல்லணையின் பொறியியலை கண்டு வியந்து கல்லணைக்கு ‘கிரான்ட் அணைகட்’ என்று பெயர் சூட்டினார். இது பெருமைக்குரிய விஷயம்தான். ஆனால், சோழர்கள்  அணைகளை மட்டும் கட்டவில்லை. கல்லணைக்கு நிகரான தொழிற் நுட்பம் அவர்கள் வெட்டிய ஏரிகளிலும் இருந்தது.

ராஜகேசரி பெருவழியும், நொய்யல் ஆறும்:

பிற்காலச் சோழர்கள் நாகப்பட்டினம் முதல் கேரள மாநிலம் கோழிக்கோடு வரை ஒரு பெரும் பாதையை உண்டாக்கி இருந்தார்கள். இந்த பாதை ராஜகேசரி பெருவழி என்று அழைக்கப்பட்டது. இந்த பெருவழியின் பக்கமாக ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஏரிகள்தான் நொய்யலாற்றின் உயிர் நாடி.

எழுத்தாளர் இரா. முருகவேளிடம் இந்த பெருவழி குறித்து பேசியபோது, “இந்த பெருவழியில் பெரும் வணிக குழுக்கள் பயணித்தன. வணிக குழுக்கள் என்றால் பத்து இருபது பேர் அல்ல. குறைந்தது 1000 மாட்டு வண்டிகளில் தானியங்கள், பஞ்சுகள் மற்றும் பிறச் செலவங்களை ஏற்றிக் கொண்டு வணிகர்கள் பயணித்து இருக்கிறார்கள். கொடுமுடி முதல் பாலக்காடு வரை இந்த பெருவழியை ஒட்டிய பகுதிகள் மிகவும் வறட்சியானதாக இருந்து இருக்கிறது. அதனால், அந்த பாதையில் பயணிப்பவர்களின் நலனுக்காக கோவை பகுதியில் மட்டும் 32 நீர் நிலைகளை உண்டாக்கி இருக்கிறார்கள். இது குறித்த கல்வெட்டு இன்றும் இருக்கிறது.

கோவை மாநகரத்தில் உள்ள அல்லிக்குளம், குறிச்சி குளம், நாகராஜபுர குளம், முத்தனங்குளம், பனங்காட்டு குளம், வாலாங்குளம் எல்லாம் அவர் வெட்டியதுதான். இந்த நீர் நிலைகள் ஒன்றோடு ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டவை. நொய்யலாற்றிலிருந்து வரும் நீர் இந்த ஏரிகளை எல்லாம் நிரப்பிவிட்டு மீண்டும் நொய்யலாற்றோடு கலந்துவிடும்.


கோவை மாவட்டம் பீடபூமி பகுதி. அதனால் மற்ற ஆறுகளைவிட நொய்யலாற்றின் வேகம் அதிகமாக இருக்கும். பெரும் மழை பெய்தால் கூட வேகமாக பயணித்து காவிரி உடன் விரைவாக கலந்துவிடும். அதனால், இந்த ஆற்றின் பயன்களை அந்த பகுதி மக்கள், முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை இருந்து இருக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதியில் வெட்டபட்ட இந்த ஏரிகள், ஆற்றின் வேகத்தை ஆற்றுப்படுத்தியது மட்டும் இல்லாமல்,  அந்த பகுதியையும் எப்போதும் செழிப்பாக வைத்து இருந்து இருக்கிறது.

ஆனால், நாம் நம் மோசமான நீர் மேலாண்மையால், அந்த ஏரிகளையும் மெல்ல கொன்று வருகிறோம். அதன் மூலமாக நொய்யலையும். ஆம் நொய்யல் அழிவிற்கு சாயப்பட்டறைகள் மட்டும் காரணம் அல்ல. இந்த ஏரிகளின் அழிவும்தான். முன்பு ஒரு காலத்தில் நொய்யலில் ஏராளமான நீர் நாய்கள் இருந்து இருக்கின்றன. ஆனால், இப்போது ஒன்றை கூட பார்க்க முடியவில்லை. அந்த நிலை நாளை அதனை ஒட்டி வாழும் நமக்கும் ஏற்படலாம்…” என்கிறார் முருகவேள்.

நதிநீர் இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் வேலையா…?

இந்த நீர் நிலைகளை காக்க வக்கற்ற இந்த அரசும் நாமும்தான் இப்போது நதி நீர் இணைப்பை பற்றி அதி தீவிரமாக பேசி வருகிறோம்.  அனைத்து கட்சிகளும் நம்மை கவர்வதற்காக நதி நீர் இணைப்பு திட்டத்தையும் தம் தேர்தல் அறிக்கையில் முன் வைத்து இருக்கிறது. உண்மையில் இந்த நதி நீர் இணைப்பு சாத்தியமா…பயன் தருமா…? என்ற நம் கேள்விக்கு ‘இல்லை’ என்பதுதான் சூழலியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்களின் பதிலாக இருக்கிறது.

சூழலியலாளர் பியூஷ், “நதி நீர் இணைப்பு நன்மைகளை தருவதை விட மாநிலங்களுக்கிடையே  பிரச்னையைதான் உண்டாக்கும். இது போல் பெரிய திட்டங்களை நாம் யோசிப்பது மூலமாக, தீர்வை நோக்கி பயணிக்காமல் பிரச்னைகளை மேலும் மேலும் நாம் சிக்கலாக்குகிறோம்.” என்கிறார்.

“ஒரு வேளை இந்த நதிகள் இணைக்கப்படும் பட்சத்தில், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது அளவுக்கு மக்கள் இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படும். அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு என்ன திட்டத்தை வைத்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல், டன் கணக்கில் கான்கீரீட் கலவைகள் ஆற்றில் கொட்ட்டப்படும். இது மேலும் மேலும் ஆற்றை மாசுப்படுத்துமே தவிர, எந்த நல் பயன்களையும் தராது…” என்கிறார் பியூஷ்.

ஏற்கெனவே, மேட்டூர் அணை கட்டப்படுவதற்காக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் இன்றும் கர்நாடக வனப்பகுதிகளில் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், பியூஷின் கருத்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

ஏறத்தாழ இதே கருத்தை வழிமொழியும், பூவுலகு அமைப்பைச் சேர்ந்த சுந்தராஜன்,  “இன்றைய மதிப்பில், இந்த திட்டத்தை செயல்படுத்த 20 லட்சம் கோடி தேவை. பராமரிக்க வருடத்திற்கு 2 லட்சம் கோடி தேவை. இவ்வளவு நிதி எங்கு இருக்கிறது. இது முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பி ஏமாற்றும் திட்டம்”  என்கிறார்.

அரசின் வாதம்:

இந்தியாவில் சில நதிகளில் மிகவும் செழிப்பாக வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கிறது. சில நதிகளில் பருவகாலத்தில் மட்டும் தண்ணீர் இருக்கிறது. இந்த இரண்டையும் இணைக்கும் போது, அனைத்து நதிகளிலும் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்க செய்து விட முடியும். அதனால் நமது விவசாய பரப்பு 175 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு விரிவடையும்,  34000 மெகாவாட் புனல் மின்சாரம் தயாரிக்க முடியும். –  இது அரசின் வாதம்.

ஆனால், இந்த அடிப்படை புரிதலே தவறு என்கிறார் இந்திய நீர் நிலைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டெல்லி ஐஐடி பேராசிரியர் கோசைன்.

“பருவநிலை மாற்றத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த திட்டத்தை முன்வைக்கிறார்கள். வற்றாத நதிகள் அனைத்திற்கும் ஜீவனாக இருப்பது இமயமலை பனிப்பாறைகள். ஆனால், பருவநிலை மாற்றத்தால் இந்த பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இன்னும் சில காலத்தில்  முழுவதுமாக உருகிவிடும் பட்சத்தில், வற்றாத நதிகள் என்று ஒன்று இல்லாமலேயே ஆகிவிடும். பின்பு, நதிகளை இணைத்து என்ன பயன்…?” என்று அவர் வைக்கும் கேள்விகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

நதிகள் இணைப்பிற்கு அரசு சொல்லும் இன்னொரு காரணம், தேவையில்லாமல் கடலில் கலக்கும் நீரை தடுக்க முடியும் என்பது. ஆனால், இந்த வாதமும் தவறு என்கிறார் பூவுலகு சுந்தராஜன்.

சுந்தராஜன், ”கடல் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் நதிகள் அதன் இயல்பில் கடலில் கலக்க வேண்டும். அதை தடுத்தால் கடல் மரணித்துவிடும். அதற்கு நம் சமகால உதாரணம்  ‘Dead Sea’. ஜோர்டான் நதியை கடலில் கலக்க விடாமல் செய்ததுதான் அந்த கடல் மெல்ல இறக்க காரணம். அது மட்டுமல்லாமல், நதி கடலில் கலக்கும் கழிமுகத்தில்தான், மீன்கள் குஞ்சு பொறிக்கும், அந்த பகுதியில்தான் அலையாத்தி காடுகள் உண்டாகும். நாம் நதி, கடலில் கலப்பதை தடுக்கிறோமென்றால், இவை அனைத்தையும் அழிக்கிறோம் என்று அர்த்தம்”

பிரச்னைகளுக்கு உள்ளூர் அளவிலேயே தீர்வு காணுங்கள்…?

சரி நம் நீர் பிரச்னைக்கு தீர்வென்ன…? நம் வரலாற்றை மீள்வாசிப்பது மூலமே நம் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியும். ஆம். சோழர்களின் நீர் மேலாண்மை.

இவர்கள் பெரிய அணைகள், நதிகள் இணைப்பு ஆகியவற்றுக்காக திட்டமிடும் பணத்தில் பத்து சதவீதத்தைக் கொண்டே, நம் அனைத்து குளங்கள், ஏரிகளையும் மீட்டுவிட முடியும் மற்றும் ஆயிரக்கணக்கில் புது நீர் நிலைகளையும் உண்டாக்கிவிட முடியும். அதன்  மூலம் அந்தந்த பகுதியில் நீர் வளம் பெருகும். அந்த பகுதி பிரச்னை அந்த பகுதியிலேயே தீர்க்கப்படும்.

நாம் ஒரு பொருளை ஒரு இடத்தில் தொலைக்கிறோமேன்றால், தொலைத்த இடத்தில் தேடுவோமா அல்லது நமக்கு விருப்பமான இடத்தில் தேடுவோமா…? அது போலதான் நீர் பிரச்னையும். ஒரு இடத்தில் தண்ணீர் சிக்கலென்றால், அதே இடத்தில் அதிக நீர் நிலைகளை உண்டாக்கி தீர்க்க வேண்டுமே தவிர, இன்னொரு இடத்திலிந்து நீர் எடுக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. இது சிக்கலை மேலும் மேலும் அதிகமாக்குமே தவிர, நிரந்திர தீர்வை தராது.

நன்றி: ஆனந்த விகடன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *