கடற்கரையை சுத்தப்படுத்தும் தனி ஒருவன்!

ரலாற்று சிறப்புமிக்க தண்டி கடற்கரையை, தனியொரு மனிதனாக  கடந்த நான்கு ஆண்டுகளாக சுத்தம் செய்து வருகிறார் ஓர் இயற்கை ஆர்வலர். குஜராத் மாநிலம், நவ்சாரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான தண்டியில் உள்ள கடற்கரை, அந்த மாநிலத்திலேயே சுத்தமான கடற்கரைப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. இதற்குக் காரணம் 40 வயதை கடந்த காலு டாங்கர் என்ற தனி மனிதனின் அளப்பரிய பங்கு.

Courtesy: Ananda vikatan
Courtesy: Ananda vikatan

 

 

 

 

 

 

 

 

 

கடந்த நான்கு வருடங்களாக ஒரு சேவை போல்,   தினமும் தண்டி கடற்கரையை சுத்தப்படுத்தி வருகிறார் காலு. குப்பைகளை சேகரிக்க கையில் ஒரு பெரிய சாக்குப்பையோடு தினமும் காலை 6.30 மணிக்கெல்லாம் கிளம்பி விடுவார். மக்கள் அதிகம் கூடும் மூன்று சதுர கிலோமீட்டர் கடற்கரை பரப்பளவை, தினமும் சுத்தம் செய்கிறார். இரண்டு மணி நேரம் சுத்தம் செய்த பிறகு, வரும் பார்வையாளர்களுக்காக 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் நிரப்புவார்.

இவர், தான் கடற்கரையை இவ்வாறு சுத்தப்படுத்திக்கொண்டிருப்பதை புகைப்படம் எடுத்து முகநூலிலோ  ட்விட்டரிலோ அப்லோட் செய்துகொள்ளவில்லை. அதை அவர் விரும்பவும் இல்லை. எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் சுற்றுப்புறத் தூய்மைக்காக இந்த சேவையை செய்துவரும் காலு டாங்கரிடம்,  எதனால் இப்படி ஒரு முடிவெடுத்தீர்கள் என்றால், ‘தினமும் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரிடமும் குப்பைகளை தயவுசெய்து குப்பைத் தொட்டியில் போடுங்கள் என எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தும் பயனில்லை. எனவே நானே  குப்பைகளை சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டேன்’ என்கிறார்.

கடற்கரையில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் மீனவர்களிடம் மாதம் 100 ரூபாய் வசூல் செய்து, அதன் மூலம் அங்கிருக்கும் தண்ணீர்த் தொட்டியைப் பராமரிப்பது மற்றும் வேறு சில பராமரிப்பு வேலைகளையும் செய்து வருகிறார்.

காலு போன்ற மனிதர்களின் மகத்தான சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக, நாம் குப்பைகளை சேகரித்து கடற்கரையை சுத்தம் செய்கிறோமோ இல்லையோ.. குறைந்தது அடுத்தமுறை கடற்கரைக்குப் போகும்போது குப்பையை போடாமலாவது இருக்கலாமே…

நன்றி: ஆனந்த விகடன்

One thought on “கடற்கரையை சுத்தப்படுத்தும் தனி ஒருவன்!

  1. சிவ சுப்ரமணியன் says:

    அற்புதமான மனிதர. ‘குப்பை’ போட மட்டுமே அறிந்துள்ள மனித உலகில் எடுத்துக்காட்டாக திகழும் இவர் இலட்சத்தில் ஒருவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *