‘டவுன் டு எர்த்’ கடந்த 25 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து சமூகத்திலும் அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் இடையேயும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இதழ். இந்தியா மட்டுமின்றி, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாகப் வாசித்துவரும் முதன்மையான இதழ். இந்த இதழின் வெள்ளி விழா இந்த ஆண்டு தொடங்குகிறது.
பிரேசில் தலைநகர் ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற புவி உச்சி மாநாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பல்வேறு வகைகளில் உத்வேகம் அளித்தது. இந்தப் பின்னணியில் தொடங்கப்பட்டதுதான் ‘டவுன் டு எர்த்’ ஆங்கில இதழ். இந்தியாவில் பரவலாகப் படிக்கப்பட்ட முதல் சுற்றுச்சூழல் இதழ் இது என்பதில் சந்தேகமில்லை.
வளர்ச்சி அரசியல் விமர்சனம்
தகவல் சந்தையில் ஓர் இடத்தைப் பிடிப்பதற்குப் பெரும்பாலான இதழ்கள் முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில், விமர்சனப் பூர்வமான தகவல்களை வெளியிடுவதையே நோக்கமாகக் கொண்டு இந்த இதழ் இயங்கி வருகிறது. எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் அதை அறிவியல்பூர்வமாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அடிப்படையிலும் நோக்கக்கூடிய கட்டுரைகளை இந்த இதழ் வெளியிட்டுவருகிறது.
பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களிலும் பாட்டில் குடிநீரிலும் பூச்சிக்கொல்லி இருப்பது தொடர்பாக அரசு எந்த ஆய்வுகளையும் வெளியிடாத நிலையில், ‘டவுன் டு எர்த்’ இதழை நடத்தும் புதுடெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வு செய்து வெளியிட்டது. இது நாடாளுமன்றத்தில் பெரிய விவாதத்துக்குக் காரணமானது. இந்த ஆய்வுகளைப் போல ஒவ்வொரு இதழிலும் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ‘டவுன் டு எர்த்’ கவனப்படுத்தி வந்துள்ளது. சுற்றுச்சூழல் மட்டுமில்லாமல் சுகாதாரம், வளர்ச்சி அரசியலைப் பேசும் இதழாக அது வளர்ந்திருக்கிறது.
நாடெங்கிலும் விவசாயம், காடுகள், தொழிற்சாலைகள் என மக்கள் வாழும் களம் சார்ந்த கட்டுரைகளையும், யாருக்கான வளர்ச்சி இது என்பது பற்றியும், உயிர் பிழைப்பதற்காக மக்கள் படும் பாட்டையும் ‘டவுன் டு எர்த்’ பதிவு செய்துவந்துள்ளது.
பாதுகாக்க வேண்டிய இதழ்
இந்த இதழின் வளர்ச்சிப் போக்கில் பங்கேற்ற முக்கியமான எழுத்தாளர்கள் பலரும் இதழின் பயணம் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளைத் தாங்கிய சிறப்பிதழை ‘டவுன் டு எர்த்’ சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதழின் ஆசிரியர் சுனிதா நாராயண், பமீலா பிலிபோஸ், அனுமிதா ராய்சௌத்ரி, விபா வர்ஷிணி, புலனாய்வு இதழாளர் அனிருத்த பஹல், மேக்ஸ் மார்ட்டின், ராகேஷ் கல்ஷியான், கேலிச்சித்திரக்காரர்கள் அஜித் நைனன், ருஸ்தம் வானியா உள்ளிட்ட பலருடைய படைப்புகள் இடம்பெற்றுப் பாதுகாக்க வேண்டிய இதழாக இதை மாற்றியுள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு: http://www.downtoearth.org.in
நன்றி: ஹிந்து