காற்றினிலே வரும் கீதம்!

அடுத்த வீட்டின் பின்புறம் ஒரு மாமரம் இருந்தது. அதில் ஒரு குயில் தம்பதி குடியிருந்தது. கிழக்கு வெளுக்கத் தொடங்கியவுடன் அவை பாடத் தொடங்கும். நன்னம்பிக்கையின் குறியீடாக அது புலப்படும். இருளின் அடர்த்தி குறைவதையும் ஒளி வளர்வதையும் கண்டு உற்சாகமும் ஊக்கமும் அவற்றின் தொண்டையிலிருந்து பீறிட்டுக் கிளம்பும். ஒன்றன் பின் ஒன்றாக வேறு பல பறவைகளும் அவற்றுடன் சேர்ந்துகொள்ளும்.

பறவைகளின் வைகறை இசையைப் போல மனதுக்குச் சுறுசுறுப்பூட்டுவது வேறெதுவுமில்லை. அதில் எண்ணற்ற சொற்கட்டுகளும், சங்கதிகளும், ராகங்களும், சுரங்களும் வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடும். அது ஒரு மொழி. அதில் சொற்கள் இல்லாதிருந்தாலும் பொருள் செறிந் திருக்கும். அந்தப் பொருள் நமக்கு விளங்காமல் போனாலும் அந்த இசை வசந்த காலத்தின் வருகைக்குக் கட்டியம் கூறுவதால், நமது மனதிலும் மகிழ்ச்சியுண்டாகும். உயிர் தரித்திருப்பதைக் கொண்டாடும் மனமிருந்தால் அது சாத்தியம்.

birdsinging

ஏன் பாடுகின்றன?

பறவைகள் ஏன் பாடுகின்றன என்று கேட்டால், அதற்குக் காரணம் அவை அதற்காகவே படைக்கப்பட்டவை என்றுதான் சொல்ல முடியும். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குரல்வளை அமைப்பிலிருந்து பறவைகளின் குரல்வளை வேறுபட்டது. அது மென்மையான தசை நார்களால் ஆனது. குருவி போன்ற சிறிய உடலுள்ள பறவைகளுக்கு அது சிறியதாக இருப்பதால், உயர் அதிர்வெண் சுருதிகளுள்ள ஒலிகளை மட்டுமே அதனால் வெளிப்படுத்த முடியும். பெரிய பறவைகளின் குரல் கர்ண கடூரமாயிருப்பதற்கு அவற்றின் குரல்வளை பெரியதாயிருப்பதே காரணம். தான் கூடு கட்டியிருக்கிற இடம், தனக்குரிய சமஸ்தானம் என்று மற்ற பறவைகளுக்கு அறிவிக்கவே ஒரு பறவை பாடுகிறது எனச் சில ஆய்வர்கள் கூறுகிறார்கள். உண்மையில், மனிதனின் குரல்வளை இசையொலிகளை எழுப்பும் உறுப்பாகப் பரிணமிக்கவில்லை என்றே சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பறவைகளைப் போல இசையொலி மூலம் தமது இணைகளைக் கவர்ந்திழுக்க வேண்டிய தேவை மனிதர்களுக்கும் (விலங்குகளுக்கும்) இல்லை என்பதே அதற்குக் காரணம்.

குளிர் மிகுந்த பகுதிகளிலிருந்து புறப்பட்டு, மிதவெப்பப் பகுதிகளுக்கு இனப் பெருக்கத்துக்காக வரும் பறவைகளில் ஆண்களே தமது கூடுகளைக் கட்டத் தொடங்குகின்றன. கூடுகளைக் கட்டி முடித்ததும் அவை உரத்த குரலில் பாடி, ‘வீடு தயார்’ என்று இணைகளுக்கு அறிவிக்கின்றன. வேறு ஆண் பறவை ஏதாவது அக்கம்பக்கத்தில் இருந்தால், அவற்றை எச்சரித்து வேறு இடத்துக்குப் போகும்படி கோபமாக மிரட்டவும் ஆண் பறவை குரலை உயர்த்திப் பாடும்.

birdsinging2

ஓர் இணை கிடைத்து, அது கூட்டில் முட்டையிட்டு அடைகாக்கும்போதும் ஆண் பறவை பாடுகிறது. அது பெண் பறவையை மகிழ்விப்பதற்காக இருக்கலாம். அதை விடவும், அந்த நேரத்தில் அதன் உடலும் மனமும் உச்சகட்ட ஆற்றலுடன் இருப்பதே அதன் தொண்டையிலிருந்து இசை பீறிட்டெழுவதற்குக் காரணம். கூடுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் பறவைகள், அருகே இணை ஏதும் இல்லாத நிலையிலும் வசந்தத்தின் இனப் பெருக்கக் காலத்தில் உரத்த குரலில் பாடுகின்றன. அது ஏதோ ஓர் உள்ளுணர்வின் தூண்டலாகவே தோன்றுகிறது.

முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிப்பட்டதும் பாட்டுப் பாடுவது குறைகிறது. ஆணுக்கு, வெளியே சுற்றித் திரிந்து இரை தேடி எடுத்து வர வேண்டிய பணிச்சுமை அதிகரிக்கிறது. சில பறவை இனங்களில் ஒரு ஈடு முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிப்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே பெண் பறவை இன்னொரு ஈடு முட்டைகளை இட்டுவிடுவது உண்டு. அப்போது வசந்த காலமாக இல்லாவிட்டாலும் ஆண் பறவை அலகை மூடியவாறே வாய்க்குள்ளாகப் பாட்டுப் பாடும்.

காலையில்தான் பாட்டு

பாட்டுப் பாடுவதற்கு நேரம், காலம், பருவம் எல்லாம் பொருந்திவர வேண்டும். பெரும்பாலான பறவைகள் கிழக்கு வெளுக்கத் தொடங்கும்போது பாடத் தொடங்குகின்றன. அப்போதும் ஒவ்வொரு பறவையினமும் ஒவ்வொரு குறிப்பிட்ட கணத்தில்தான் பாட்டை ஆரம்பிக்கின்றன. மாலையில் அவை கூடுகளுக்குத் திரும்பும் நேரத்தில், மீண்டும் கச்சேரி உச்ச ஸ்தாயியில் தொடங்கும். ஆனால், காலை வேளையில் நடப்பதைவிடச் சற்று மென்மையான சுரங்களுடன் இருக்கும். அதில் இசையொலியைவிட, சளசளப்புக் கூச்சலே அதிகம். ஆற்றங்கரை அரச மரங்களில் மாலை நேரங்களில் பலவிதமான பறவைகள் தத்தம் கூடுகளில் அமர்ந்துகொண்டு சத்தம் போடும். அதை இசையென்று வகைப்படுத்த மிகவும் தாராளமான மனநிலை தேவை.

சில பறவைகள் விடியற்காலையில் மட்டும் பாடும். ஆந்தைகளும் கோட்டான்களும் இரவின் இருட்டில் மட்டுமே குரல் கொடுக்கும். அதை இசையாக யாரும் குறிப்பிடுவதில்லை. அலறல் என்றுதான் சொல்லுவார்கள். ஆனால், பெண் ஆந்தைகளுக்கு அது கந்தர்வ கானமாயிருக்கும்.

இருள் பிரிவதற்கு முன்பே கண் விழித்துவிடும் ஸ்விஃப்ட் (உழவாரன்) பறவைகள், வானத்தில் பெரும் உயரத்துக்கு எழும்பிச் சூரியனின் முதல் செங்கதிர்கள் பூமியின் தரையில் படுவதற்கு முன்பாகவே எதிர்கொண்டு வரவேற்றுப் பாடத் தொடங்கும். வானம்பாடிகள் காலையிலும் பாடும், மாலையிலும் பாடும். நைட்டிங்கேல் பறவையும் இரு வேளையும் பாடும் பழக்கமுள்ளது.

எல்லாப் பறவைகளுமே தமக்குரிய குரல் வளத்துடன் பாடுகின்றன. மனிதர்கள்தான் அவற்றை இசை, சளசளப்பு, கூச்சல் என்றெல்லாம் வகைப்படுத்துகின்றனர். பறவைகள் அடைகாக்கும்போது மென்மையான குரலில் முணுமுணுக்கின்றன. முட்டைக்குள் வளரும் குஞ்சுகள் அதிலிருந்து வெளிப்படுகிறபோது தம் பெற்றோரை அடையாளம் காண அது உதவுகிறது. அவை முதலில் அதே போன்ற ஒலிகளை எழுப்பினாலும், வளர வளரத் தத்தம் இனத்தாரிடமிருந்து பல்வேறு இசையொலிகளை எழுப்பக் கற்றுக்கொள்வதாகப் பறவையியலாளர்கள் கருதுகின்றனர்.

பயிற்சி மூலமே பாட்டு

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வர் குழு ஒரு ஃபிஞ்ச் குருவிக் குஞ்சை, முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடன் தனிமைப்படுத்திப் பராமரித்தது. அது ஓரளவுக்குச் சுமாரான சில இசையொலிகளை எழுப்பினாலும் சுயேச்சையாக வாழும் குருவிகளின் அளவுக்குப் பல்வேறு இசையொலிகளை எழுப்பவில்லை. இதன் மூலம் ஃபிஞ்ச் குருவிகள் பிற குருவிகளிடமிருந்தே முழுமையான இசைப் பயிற்சியைப் பெறுகின்றன என்பது கண்டறியப்பட்டது. மற்றெல்லா இனப் பறவைகளுக்கும் இது பொருந்தும்.

அடுத்து, அந்தக் குருவிக் குஞ்சுக்குத் துணையாக இன்னொரு குருவியைக் கூண்டில் வைத்தபோது, பெரிய குருவி எழுப்பிய இசையொலிகளைக் கேட்டுக் கேட்டுக் குருவிக் குஞ்சும் அவற்றைக் காப்பியடித்துப் பாடத் தொடங்கிவிட்டது. பறவையிசை என்பது பிறவிக் குணமல்ல என்பதும் பயிற்றுவிக்கப்படுவதே என்பதும் இதன் மூலம் அறியப்பட்டது.

இன்னொரு சோதனையில், பல ஃபிஞ்ச் குருவிக் குஞ்சுகளை ஒரே அறையில் வசிக்க வைத்தபோது எல்லாக் குஞ்சுகளும் ஒரே மாதிரியான குரலில், ஒரே சுரத்தைப் பாடின. சுயேச்சையாகத் திரியும் ஃபிஞ்ச் குருவிக் கூட்டத்தில் ஒலிக்கிற பல்வேறு சுருதிகளை இந்தப் பரிசோதனைக் கூட்டத்தில் கேட்க முடியவில்லை. அந்தக் கூட்டத்தின் இசையே சுயேச்சையான கூட்டத்தின் இசையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது.

தாய்ப் பறவை அடைகாக்கும்போதும், குஞ்சுகளுக்கு இரையூட்டுகிறபோதும், இளம் பருவத்திலும் கற்றுத்தருகிற பாட்டைத்தான் குஞ்சுகள் தம் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் பிறந்து வளர்ந்த ஃபிஞ்ச் பறவைகள் எல்லாம் ஒரே சுரத்தை ஒரே மாதிரியாகப் பாடின. ஆனால், வேறு மாகாணத்தில் வேறு ஒரு வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவை வேறு சுரத்தில் பாடின. லயம்கூட வேறுபட்டிருந்தது. கேம்பிரிட்ஜில் ஆய்வர்கள் தமது வட்டாரத்தில் வசித்த குருவிகளின் இசைக்கு ஏற்பச் சொற்களைப் போட்டுப் பாடலை இயற்றினார்கள். ஆனால், வேறு மாகாணங்களில் வசித்த ஃபிஞ்ச் குருவிகளின் இசைக்கு அந்தச் சொற்கள் பொருந்தவில்லை.

birdsinging3

ஜே, மாக்கிங்பர்ட் போன்ற பறவைகள் தம்முடன் கூடி வாழும் வேறு இனப் பறவைகளின் பாட்டுகளைக் காப்பியடிப்பதும் காணப்பட்டிருக்கிறது. வீடுகளில் கூண்டுப் பறவைகளாக வளர்க்கப்படும் நீல ஜே பறவைகள் தமது காதில் விழும் சலவை இயந்திர ஒலி, நாய்களின் குரைப்பு போன்றவற்றைப் போலவே ஒலியெழுப்பும். ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட மாக்கிங் பர்ட் தன் எஜமானரின் இருமல் ஒலியைத் தத்ரூபமாக எழுப்பியது. அதைக் கேட்டுச் சிரித்த எஜமானியின் சிரிப்பையும் அப்படியே எதிரொலித்தது.

பறவைகளின் இசையில் ஓர் அடிப்படையான மர்மம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அவை இசை மூலம் தமக்குள் பரிமாறிக்கொள்ளும் ரகசியங்களை விண்டுணர மனிதர்களால் இயலவில்லை. ஆனாலும் கத்தும் குயிலோசை காதில் விழ வேண்டும் என்ற ஆசை மனிதர்களுக்குத் தணியாமலிருக்கிறது. குக்கூ என்று அது எழுப்பும் ஒலியே அதன் ஆங்கிலப் பெயராகிவிட்டது.

– கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

நன்றி: ஹிந்து 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *