ஆம்பூர் அருகே பாலாற்றில் நீந்திக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான வாத்துகள் கழிவுநீரின் பாதிப்பால் அடுத்தடுத்து செத்து மடிந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர், வாணியம்பாடி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாத்து வளர்ப்புத் தொழிலில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள பாலாற்றில் தேங்கி இருக்கும் நீர்நிலை அருகே கொட்டகை அமைத்து வாத்து வளர்ப்புத் தொழில் செய்கின்றனர். இங்கு வளர்க்கப்படும் வாத்துகள், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆம்பூர் அயித்தம்பட்டை சேர்ந்த கோபி என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு 4 ஆயிரம் வாத்துக் குஞ்சுகளை வாங்கி வந்து பெரிய கொம்மேஸ்வரம் பாலாற்றின் பாலத்தின் கீழ் கொட்டகை அமைத்து வளர்த்து வந்தார். அங்கு தேங்கியுள்ள நீரில் வழக்கமாக மேய்ச்சலுக்கு விடுவார். வழக்கம்போல் நேற்று மாலை அப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த வாத்துகளில் சில வாத்துகள் திடீரென மயங்கி துடித்து இறந்து போனது. உடனே அங்கிருந்து மற்ற வாத்துகளை அப்புறப்படுத்தினார் கோபி. ஆனால் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து வரிசையாக 3420 வாத்துகள் மொத்தமாக இறந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த கோபி, கால்நடைத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து இறந்து போன வாத்துகளையும் பாலாற்று தண்ணீரையும் பார்வையிட்டனர். அருகிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்த வெளியேறிய கழிவுநீர் பாலாற்றில் கலந்து அதனால் வாத்துகள் இறந்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் கால்நடை மருத்துவ அதிகாரிகள் இறந்து போன வாத்துகளின் மாதிரிகளை ஆய்வு செய்தனர். முதற்கட்ட ஆய்வில் நோய்த் தொற்று எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
இதுபற்றி நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள் ” பெரிய கொம்மேஸ்வரம் பாலாற்றிலிருந்து 5 கிமீ தொலைவில் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் சில ஆலைகள் தங்கள் கழிவு நீரை அப்புறப்படுத்தாமல் நேரடியாக பாலாற்றில் கலந்து விடுகின்றனர். கழிவுநீரை சுத்திகரிக்க லட்சக்கணக்கில் செலவு பிடிக்கும் என்பதால் இப்படி குறுக்கு வழியை பின்பற்றுகின்றன தொழிற்சாலைகள் நிர்வாகங்கள்.
இதனை தடுக்க வேண்டிய மாசுக் கட்டுபாட்டு வாரியம் கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். இதனால் நிலத்தடி நீரும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பாசன நீரிலும் ரசாயனக் கழிவுகள் கலந்து இது போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ராணிப்பேட்டையில் தேக்கி வைத்த கழிவு நீர் தொட்டி உடைந்து ஒருமுறை 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரை விட்டனர். தோல் தொழிற்சாலைகள் ரசாயனக் கழிவுகளை முறையாக கையாள வேண்டும். அதனை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் இன்று ஆயிரக்கணக்கில் வாத்துகள் இறந்த மாதிரி நாளை மனிதர்களும் இறப்பார்கள்.” என்று வேதனையை வெளிப்படுத்தினர்.
இன்று வாத்துகள் நாளை மனிதர்கள்….மாசு கட்டுப்பாட்டு வாரியம் விழித்துக்கொள்ளுமா…?
நன்றி: விகடன்