மன வளர்ச்சி குன்றிய, உடல் நலம் பாதிக்கப்பட்ட, 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன், 100க்கும் மேற்பட்ட பெண்கள், திருவனந்தபுரத்தில் உள்ள, கேரள மாநில அரசின் தலைமைச் செயலகம் முன், ஏழு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘எண்டோசல்பான் பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்ட தங்கள் வாரிசுகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் என்ன பதில் சொல்லப் போகின்றன’ என்பது தான், அவர்களின் கேள்வி.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவி, நிதியுதவி வழங்க, காங்கிரசை சேர்ந்த, முதல்வர் உம்மன் சாண்டி அரசு தயாராக இருப்பதாக அறிவித்தும், அவை போதாது என கூறி, போராட்டத்தை கைவிட தாய்மார்கள் தயாராக இல்லை.
பாதிக்கப்பட்ட, 6,000 குழந்தைகளின் பெற்றோரில், 3,000 பேர், நிதியுதவியை பெற தயாராகி விட்டனர்; மீதமுள்ள, 3,000 பேர், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மாநில அரசு தக்க பதில் சொல்ல வேண்டும் என கோரி, போராட்டத்தை தொடர்கின்றனர். குழந்தைகள் மட்டுமின்றி, அந்த பகுதியில், பெரியவர்களும், பூச்சி கொல்லியால் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடந்தது என்ன?
கேரளாவின் காசர்கோடு மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், முந்திரி செடிகள் மற்றும் பிற பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ‘எண்டோசல்பான்’ என்ற பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டது. கடந்த, 1976 முதல், 2000 வரை, விமானம் மூலம், அந்தப் பகுதியில், ஆண்டுக்கு மூன்று முறை அந்த விஷ மருந்தை தெளித்தனர். எளிதில் அழியாத அந்த பூச்சிக்கொல்லி, உணவு, தண்ணீர், சுவாசத்தில் கலந்து, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டன.
எங்கள் உயிர் உள்ள வரை இந்த குழந்தைகளை வைத்து பராமரிப்போம்; அதற்குப் பிறகு யார் பார்த்துக் கொள்வர்? எனவே, எங்களுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள மாட்டோம். உலகிற்கு எங்கள் போராட்டம் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான், நோய் பாதித்த குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். போராட்டத்தில் ஈடுபடும் எங்கள் குழந்தைகளுக்கு, உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது; அதற்கு சிகிச்சை அளிக்கக் கூட, ஒரு டாக்டரும் இதுவரை வரவில்லை.
நன்றி: தினமலர்