நம்ப முடிகிறதா? கூவத்தை சுத்தப்படுத்த தனி ஆணையம் !!

ம்பமுடியாத, ஆனால் ஓர் உண்மைச் செய்தி சொல்லவா… ? இன்றைக்கு நாம் சாக்கடை என்று மூக்கைப் பொத்திக்கொண்டு கடந்து போகிற கூவம் ஆற்றில், 1950-ம் ஆண்டில்  மட்டும் 49 வகையான மீன்கள் வாழ்ந்தன; அவற்றைப் பிடித்து சென்னைவாசிகள் உணவாக உண்டனர். 1970-களில் இந்த நிலைமை பாதியாகி 21 மீன்கள் இனமாகக் குறைந்தன. இன்று முற்றிலும் சாக்கடையாகிப்போன கூவம் ஆற்றில், ஒரு மீன்கூட இல்லை.

Courtesy: Vikatan
Courtesy: Vikatan

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சென்னை மாநகரத்தின்  குப்பைகள் கொட்டப்பட்டு, கழிவுகள் கலக்கப்பட்டு  தண்ணீரில் ஆக்சிஜனின் அளவு குறைந்ததே இதற்கு காரணம்.  மீன் பிடிப்பும், படகு சேவையும் நடந்து உயிர்ப்பாக இருந்த கூவம் நதி, இன்று குப்பைத்தொட்டியாகவும் சாக்கடையாகவும் மாறியதில், நகரமயமாதலின் வேகமும்  திடக்கழிவுகளை மேலாண்மை செய்யும் திட்டம் சரியாக நடைமுறையில் இல்லாதததுமே மிக முக்கியக் காரணங்கள்.

சென்னையின் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், சமீபத்தில் சென்னையில் பெய்த பெருமழை, சென்னையின் ஆறுகளை உயிர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தை நமக்கு உணர்த்திவிட்டுப் போனது. ஆனாலும் அடுத்த நான்கே மாதங்களில் மீண்டும் அந்த ஆறுகளை பழைய சாக்கடை நதிகள் என்கிற நிலைக்கே கொண்டு வந்துவிட்டோம்.

கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்… இவை சென்னையை ஊடறுத்து கடலில் கலக்கும் ஆறுகள். இவற்றில் தென்னிந்தியாவின் தேம்ஸ் என்று அழைக்கப்பட்ட கூவம் ஆற்றின் நீளம் 65 கிமீ. சென்னைக்குள் மட்டும் இந்த ஆறு 20 கிமீ  நீளத்துக்கு ஓடுகிறது. இது அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு, சேத்துபட்டு, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை, சேப்பாக்கம் ஆகிய பகுதிகளை ஒட்டி ஓடி வங்கக் கடலில் கலக்கிறது.

இந்த ஆறுகளைப் புணரமைத்து, சென்னை நகரத்தை உயிர்ப்பாக்க , 2009-ல் திமுக அரசு, சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையம் ஒன்றை உருவாக்கியது. அடிப்படையில் இது ஓர் அறக்கட்டளைப் போலவே இன்றும் செயல்பட்டு வருகிறது.  இதன் கீழ்வரும் திட்டங்களுக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி மட்டும் சுமார் ரூ.4,000 கோடி. இந்தத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த குடிசைமாற்று வாரியம், பொதுப்பணித் துறை, குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றோடு இணைந்து செயல்படும் பொறுப்பு இந்த ஆணையத்துக்கு உள்ளது.

ஆனால், அது அப்படிச் செயல்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. `பருத்திப்பட்டு பகுதியில் இருந்து, வங்காள விரிகுடாவில் கலக்கும் பகுதி வரை கூவத்தைப் புணரமைக்கும் பணியில் 250-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுவார்கள்’ என்கிறது சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான  www.chennairivers.gov.in. சிங்கப்பூர் ஆறுகள் மற்றும் நகர மேலாண்மை தொழில்நுட்பவியலாளர்களிடம் இந்தத் திட்டங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் இந்த இணையதளத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த ஆணையம் அமைக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சென்னை ஆறுகளின் நிலை இன்னும் மோசமாகியுள்ளதே தவிர, எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த ஆணையத்தின் திட்ட இயக்குநர் கலையரசனிடம் கேட்டபோது, `இந்த ஆணையம் மூலம் நேற்றுவரை என்ன  திட்டங்கள் எல்லாம் வேலைகள் செய்தோம் என்பது  எங்கள் இணையத்தில் இருக்கின்றன. அதில் இருந்து தகவல் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார். ஆனால் அந்த இணையதளத்தில் சென்னை ஆறுகள் புனரமைப்புக்காக என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன என்ற பட்டியல்தான் இருக்கின்றனவே தவிர, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிறைவேற்றப்பட்டத் திட்டங்கள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

இரண்டே இரண்டு கனமழை, சென்னை ஆறுகளின் மொத்த மாசுகளையும் சுத்தப்படுத்திவிடும்போது, கடந்த ஏழு ஆண்டுகளால் ஓர் ஆணையத்தால் எவ்வளவோ செய்திருக்க முடியாதா… அல்லது செய்யும் எண்ணமில்லையா? இந்த மெத்தனம் எதனால்?

சென்னை ஆறுகள் நிர்வாகம் ஆணையம் என்ன செய்திருக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜனிடம் கேட்டோம்…

‘சென்னை ஆறுகள் நிர்வாகம் ஆணையம் இதுவரை ஒரு உருப்படியான வேலையைக்கூட செய்யவில்லை. அவ்வப்போது கண் துடைப்பு வேலையாக ஆறுகளில் தூர்வாறும் பணிகள் மட்டுமே நடக்கும். அப்படி தூர் வாரப்பட்டக் கழிவுகளையும் ஆற்றின் கரையிலே போட்டுவிட்டுப்போய்விடுவார்கள். அதன் மூலம் நோய்த் தொற்றுகள் தொற்றுவதுதான் வாடிக்கை. சென்னை மாநகரத்தில் கொடுங்கையூர், நெசப்பாக்கம், வில்லிவாக்கம், மகாகவி நகர், கோயம்பேடு ஆகிய இடங்களில் இருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில்,  ஒரு நாளைக்கு 630 எம்.எல்.டி கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகின்றன. ஆனால், சென்னை மாநகரின் ஒரு நாள் கழிவு நீர் உற்பத்தி 1,000 எம்.எல்.டி. மீதமுள்ள கழிவு நீர் எல்லாம் நேரடியாக சென்னை ஆறுகளில்தான் கலக்கின்றன.

இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் கேளுங்கள்… சென்னைப் பகுதி கூவத்தில் மட்டும் 852 இடங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்கள் கலக்கின்றன. சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையத்தில், தன் பங்களிப்பைத் தரும் பொதுப்பணித் துறையின் கீழ்தான் ஆறுகளின் பராமரிப்பும் வருகிறது. ஆனால், இவர்கள் அறிவிக்கும் 2,000 கோடி, 3,000 கோடி ரூபாய் திட்டங்கள் எல்லாம் பெயரளவுக்குத்தான் இருக்கின்றன. ஆறுகளுக்கு சுவர் கட்டுவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, தூர்வாருவது, பூங்காக்கள், நடைபாதைகள் போன்றவை எல்லாம் மேம்போக்கான திட்டங்கள்தான்.

இந்த மேம்போக்கான திட்டங்களுக்கு பதிலாக, அந்த அந்தப் பகுதிகளில் சின்னச் சின்ன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தாலே, சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆறுகளில் கலக்கும் சுமார் 400 எம்.எல்.டி கழிவு நீரைத் தடுக்க முடியும். மேலும், மழைக்காலங்களில் வெளியேறும் கழிவு நீரை, மழைநீர் வடிகால் குழாய்களில் இணைத்துவிடுகின்றனர்.

அவை நேரடியாக ஆறுகளில்தான் வந்து விழுகின்றன. ஆறுகளில் தேங்கியிருக்கும் நீரில் மியூட்டேன் பவுடரைக் கலக்கும்போது அந்த நீரில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்கும். இதற்கான முயற்சியையும் சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையம் எடுக்க வேண்டும். இந்த ஆணையம் பெயரளவில் இன்னுமோர் ஆணையமாக இல்லாமல், மக்கள் நலனில் அக்கறையுள்ள ஆணையமாக இருக்க வேண்டும்’’ என்கிறார்.

சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையம் செயல்படுத்த உள்ள திட்டங்களாக அதன் அதிகாரபூர்வமான இணையதளமான www.chennairivers.gov.in  -ல் சொல்லப்பட்டிருக்கும் திட்டங்களும், அதற்கு பொறுப்பான துறைகளும்…..

1. தூர் வாருதல், எல்லை வரையறை மற்றும் எல்லை கற்கள் அமைத்தல் மற்றும் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு  – பொதுப்பணித் துறை.
2. திடக் கழிவு அகற்றுதல், வேலி அமைத்தல், பூங்காக்கள், நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் அமைத்தல் – சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையம்.
3. மடைகள், கால்வாய்கள் அமைத்தல், கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைத்தல்  – சென்னை மாநகராட்சி குடிநீர், கழிவு நீர் வாரியம்.
4. ஆக்கிரமிப்பு அகற்றுதல், மாற்றும் இடம் கொடுத்தல் – குடிசை மாற்று வாரியம்.
5. சதுப்பு நிலக் காடுகள் அமைத்தல், பூங்காக்கள், சமூகக் கல்வி திட்டங்கள், திட்டங்களைக் கண்காணித்தல் – சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையம்.

நன்றி: விகடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *