நாட்டிலேயே தூய்மை மிகுந்த மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் 39.2% மதிப்பெண்களுடன் மிகவும் பின்தங்கியுள்ளது.
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ) கணித்துள்ள தூய்மையான மாநிலங்கள் பட்டியலை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வியாழக்கிழமை வெளியிட்டார்.
இதில் நாட்டிலேயே தூய்மையான மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது.
தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. மொத்தம் 26 மாநிலங்களின் தரவரிசை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சிக்கிமைத் தொடர்ந்து கேரளா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹிமாச்சல பிரதேசம், நாகலாந்து, ஹரியாணா, பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், மேகாலயா மாநிலங்கள் முறையே முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் பட்டியலில் 14-வது இடத்தில் இடம் பெற்றிருக்கிறது.
பின்தங்கிய தமிழகம்:
சத்தீஸ்கர், ஒடிசா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்கள் இந்தப் பட்டியலில் பின்தங்கியிருக்கின்றன.
தமிழகம் 100-க்கு 39.2 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளது.
எப்படி கணக்கிடப்படுகிறது?
கடந்த 2015-ம் ஆண்டு மே – ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 3,788 கிராமங்களில் 73,176 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை வீடுகளில் கழிப்பறை வசதி இருக்கிறது என்பதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆய்வின் அடிப்படையில் சிக்கிம் 100-க்கு 98.2%, கேரளா 96.4%, தமிழகம் 39.2% மதிப்பெண்கள் பெற்றுள்ளன.
நன்றி: ஹிந்து
பக்கத்துக்கு மாநிலமான கேரளா டாப் 5 மாநிலமாகவும் நாம் இவ்வளவு கீழேயும் இருப்பது வெட்கப்படவேண்டிய விஷயம். அவர்களில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம்!