சின்ன மழைக்குக்கூட சென்னை நகரம் மிதப்பது ஏன்?

நீர் ஆதாரமாகவும், ரசனைக்கு உரியதாகவும் இருக்கும் மழை சென்னை மக்களைப் பொறுத்தவரை பீதியின் அடையாளமாகவே இருக்கிறது. மிரட்டிச்சென்ற மழை, விட்டுச் சென்ற தாக்கங்கள் ஏராளம். நீர்நிலைகளைகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற படிப்பினையையும் சென்னை மழை நம்மிடம் விட்டுச் சென்றது. இன்னொரு பருவமழை நமக்கு அருகாமையில் வந்து கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில் நீர்நிலைகள் குறித்து ஆய்வு செய்து வரும் சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ஜனகராஜனிடம் பேசினோம்.

Courtesy: Vikatan
Courtesy: Vikatan

“சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் குறித்து நீங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்துச் சொல்லுங்கள்?”

“சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மூன்று மாவட்டங்களிலும் மொத்தமாக 3,600 ஏரிகள் இருந்ததாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. இப்போது அதில் 3 ஆயிரம் ஏரிகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. 3 ஆயிரம் ஏரிகளில் 1800 ஏரிகள் வரை ஆய்வு செய்து அது குறித்து வரைபடங்கள் தயாரித்து உள்ளோம்.  பழைய மகாபலிபுரம் சாலையில் மட்டும் ஏராளமான ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் மூலம் 75 டி.எம்.சி தண்ணீர் சேகரிக்க முடியும். குடிதண்ணீருக்காக யாருடைய தயவையும் எதிர்பார்க்கத் தேவையில்லை.
அதே போல எந்த ஒரு நகரிலும் இல்லாதவகையில் வடசென்னையில் கொசஸ்தலை ஆறு, தென் சென்னைக்கு அடையாறு, மத்திய சென்னைக்கு கூவம் என 3 ஆறுகள் ஓடுகின்றன. ஆறு என்பது வெறும் ஆறு மட்டும் அல்ல. ஆற்றைச் சார்ந்த கரைகள் காப்பாற்றப்பட வேண்டும். இப்போது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், ஆற்றின் கரைகளில் உள்ள குடியிருப்புகளை அகற்றிவிட்டு காம்பவுண்ட் சுவர் கட்டி இருக்கிறார்கள். ஆற்றில் சரிவான பகுதி இருந்தால்தான் தண்ணீர் ஆற்றில் சரிந்து ஓட முடியும்.”
“நீர்நிலைகள் எப்படிப் பாதுகாக்கப்பட வேண்டும்?”

“நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் வெறுமனே ஏரியை மட்டும் பாதுகாப்பது என்று அர்த்தம் அல்ல. ஏரி, நீர்பிடிப்பு, வரத்துக்கால்வாய், உபரி நீர் கால்வாய், நீர் பரப்புப் பகுதி, எதுவாய், மதகு, கலங்கல், ஏரிக்கரை இவ்வளவும் சேர்ந்ததுதான் ஏரி. இப்போது ஏரியைத் தவிர ஏரியின் துணைப்பகுதிகளான நீர்பிடிப்பு, கால்வாய் எல்லாமே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, ஏரியையாவது பாதுகாக்க வேண்டும். ஏரிகளைக் காப்பது நமக்கு இரட்டை நன்மை. தண்ணீர் தேவை என்பது ஒரு நன்மை. வெள்ளம் வருவதைத் தடுப்பது இன்னொரு நன்மை. நான் இரட்டை நன்மை பெறப்போகிறோமோ, இரட்டை நஷ்டம் அடையப்போகிறோமோ என்பதுதான் நமது கேள்வி. ஏரிகளில் தண்ணீர் இருந்தால் நிலத்தடி நீர் அதிகரிக்கும். ஆனால் அதை விட்டு விட்டு, நெமேலியில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்துகின்றனர்.  ஒரு பில்டிங் கட்டமுடியும். ஆனால், நம்மால் ஏரியை உருவாக்க முடியாது”

“சிறிய அளவுக்கு மழை பெய்தாலும் கூட சென்னை நகரம் மிதக்கிறதே?”

“சென்னை நகருக்குள் மாம்பலம் கால்வாய், ஓட்டேரி நல்லா என 16 கால்வாய்கள் உள்ளன. இது தவிர மழைநீர் வடிகால்கள் உள்ளன. நீர் வழித்தடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டால் வெள்ளம் வருவதைத் தடுக்கலாம். உயிர் சேதம், பொருட் சேதம் ஏற்படக்கூடாது என்றால், இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்.”

“வடகிழக்குப் பருவ மழைக்கு முன்பாக என்ன செய்யவேண்டும்?”

“சென்னையில் அதிக அளவு மழை பெய்யும் என்பதையும், வடகிழக்குப் பருவமழையில் புயல் மூலம் மட்டுமே அந்த மழையைப் பெற முடியும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சென்னை புறநகர் பகுதியை ‘ecological hotspot’ என்று சொல்வார்கள். அதாவது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்று அர்த்தம். ஆனால், இயற்கையாக இருக்கும் நீர் பிடிப்புப் பகுதிகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. நீர்நிலைகளைப் பாதுகாத்தால் வடகிழக்குப் பருவமழையால் பாதிப்புகள் ஏற்படாது.”

நன்றி: விகடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *