சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஒரு சில ஏரிகளைத் தவிர, மற்ற ஏரிகள் சுவாசிக்க வழியில்லாமல் ஆக்ஸிஜனுக்குப் போராடிக் கொண்டிருக்கின்றன என்னும் நிதர்சனத்தைப் பதைபதைப்போடு காட்சிப்படுத்துகிறது ‘சென்னை லேக்ஸ்’ ஆவணப்படம். என்விரான்மென்டலிஸ்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாகத் தயாரிக்கப்பட்ட படம் இது.
“ஒருநாள்தான் ரெஸ்ட். அன்னைக்கு வீட்டைவிட்டு வெளியவே வரமாட்டேன்..” என்று பலரும் அடம்பிடிக்கும் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தத் திரையிடலுக்கு அரங்கம் நிறைந்த கூட்டம் இருந்ததே, நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இ.எஃப்.ஐ. அமைப்புக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி.
ஏரிகளின் அவலநிலை
தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள், பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், ஒருசில ஏரிகளைத் தவிரப் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்புகளின் பிடியிலும், ஆலைக் கழிவுகளின் சேர்க்கையாலும் அழிந்துகொண்டிருக்கின்றன.
சென்னையைச் சுற்றியிருக்கும் சித்தாலப்பாக்கம், திருநீர்மலை, பல்லாவரம் ஓல்ட் டேங்க், ஆதம்பாக்கம், பெரும்பாக்கம், கீழ்க்கட்டளை போன்ற ஏரிகளின் இன்றைய நிலையை 20 நிமிடங்கள் ஓடும் ஆவணப்படமாக எடுத்துள்ளனர் விக்னேஷ் மகேஷும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நீல்ஸ் ஹெல்மக் என்னும் இளைஞரும்.
இன்னும் ஐந்து படங்கள்
“சென்னையைச் சுற்றி ஒரு காலத்தில் மிகவும் தூய்மையாக இருந்த நீர்நிலைகள் எல்லாம் இன்றைக்குப் பிளாஸ்டிக், இறந்த விலங்குகளின் சடலங்கள், ஆலைக் கழிவுகள் எல்லாமும் சேர்ந்து நீர்நிலைகளின் மூச்சை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொண்டிருக்கின்றன என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். இதைப் பார்க்கும் நல்ல உள்ளங்கள் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகளில் எங்களோடு இணைத்துக்கொள்ளலாம். அப்போதுதான் இந்த நீர்நிலைகளை எதிர்காலச் சந்ததிகளுக்குப் பாதுகாக்க முடியும். சென்னை லேக்ஸ் தொடர்பாக இன்னும் ஐந்து ஆவணப்படங்களை அடுத்தடுத்து வெளியிட இருக்கிறோம்” என்றார் இ.எஃப்.ஐயின் நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி.
அகற்ற வேண்டிய கழிவு
“பழைய பல்லாவரம் டேங்க் பகுதியில் இருக்கும் ஏரி 30 சதவீதம் சீர்கெட்டுள்ளது. எங்கிருந்தோ எடுத்துவரப்படும் குப்பைக்கூளம், மருத்துவக் கழிவுகள், விலங்குகளின் இறந்த உடல்கள் இந்த ஏரியில்தான் வீசப்படுகின்றன. இந்த ஏரியில் கழிவு கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கெனவே கொட்டப்பட்ட கழிவைப் போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்ய வேண்டும்.
பெரும்பாக்கம் ஏரி மிகப் பெரியது. ஆக்கிரமிப்பு, ஆகாயத் தாமரை பரவுதல் போன்ற பிரச்சினைகளும் இங்கே இருக்கின்றன. இந்தத் தாவரங்கள் நீரில் இருக்கும் ஆக்ஸிஜனை முழுவதும் உறிஞ்சி வளரும் இயல்புடையவை. இதனால் நீர்நிலைகளில் வேறு எந்த உயிரினமும் வளரமுடியாத நிலை ஏற்படுத்திவிடும்” என்கிறார் ஆவணப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் மகேஷ்.
யாருடைய கடமை?
நீர்நிலைகளைப் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டியது அரசின் கடமை என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட்டுச் செல்லாமல், அது ஒவ்வொரு குடிமகனின் கடமையும்கூட என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்த ஆவணப்படம்.
நீர்நிலைகளை அசுத்தப்படுத்த மாட்டோம் என்னும் மனஉறுதி நம்மிடம் முதலில் தோன்றினால்தான், `நட்சத்திரத் தடம் பதிக்கும் வாத்துகள் கூட்டம்’ என்னும் நா. முத்துக்குமாரின் கவி மனதைக் கற்பனையிலும் நிஜத்திலும் குறைந்தபட்சமாகத் தரிசிக்க முடியும்!
நன்றி: ஹிந்து
[embedit snippet=”whatsapp”]