சிந்தாதிரிப்பேட்டையில், கூவம் கரையை ஆக்கிரமித்து, கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களை நடத்தும் சிலர், மீன் கழிவுகளை கூவத்தில் பகிரங்கமாக கொட்டி, அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால், அரசின் கூவம் மறுசீரமைப்பு திட்டம், வீணாகி விடும் அபாயம் எழுந்துள்ளது.சென்னையின் அவமான சின்னமாக மாறிவிட்டது, கூவம் நதி; ஆட்சியாளர்கள், மாறி மாறி நதியை சீரமைக்க திட்டம் போட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஏப்பம் விட்டது தான் மிச்சம்; கூவத்தின் அவலநிலை அப்படியே தொடர்கிறது.திட்டத்தின் நோக்கம்ஐந்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், மீண்டும் கூவம் நதி மறு சீரமைப்பு திட்டம் தயாரிக்கப்பட்டது.
இத்திட்டம் கடந்தாண்டில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி எல்லையில் மட்டும், கூவத்தின் கரைகளை நில அளவை செய்வது, கரையை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிறைவேற்றுவதே திட்டத்தின் நோக்கம்!
இதற்காக, 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு பகுதியாக, கூவத்தில் கழிவுகள் சேராமல் தடுப்பது, அகற்றுவது, பூங்கா அமைப்பது ஆகிய பணிகளுக்கு ஒப்பந்தம் விட்டு, பணி ஆணையையும் மாநகராட்சி வழங்கி விட்டது.கடல் உணவு ஏற்றுமதிக்கு தலைமையிடமாக, சிந்தாதிரிப்பேட்டை உள்ளது. இங்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு நாடுகள் போன்ற, 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
1 கி.மீ.,க்கு நாசம்:இந்நிறுவனங்கள், அதிக ருசி கொண்ட தமிழக கடல் மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்கின்றன. இத்தொழிலில், 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
கூவம் கரை சாலையை ஒட்டியுள்ள இடம் முழுவதும், கூவம் ஆற்றுக்கு சொந்தமானது என, பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், சாலையில் இருந்து கூவத்தை பார்க்க முடியாத வகையில், சிந்தாதிரிப்பேட்டையில் முழுமையாக, ஏற்றுமதி நிறுவனங்களால் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
சரக்கு லாரிகளில், நிறுவனங்களுக்கு டன் கணக்கில் கொண்டு வரப்படும் மீன்கள், இறால் மற்றும் நண்டுகள், வெட்டப்பட்டு, ஐஸ்பெட்டிகளில் வைத்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உள்ளூரில் சில்லரை விற்பனையும் நடக்கிறது.கடல் உணவு, ஏற்றுமதி தொழில் என்பதால், மீன் கழிவுகளை கூவத்தில் கொட்டி விடுகின்றனர். இத்தொழில் செய்வோர், ஆக்கிரமிப்பாளர்களிடம் பேசி, கூவம் கரையை வாடகைக்கு எடுக்கின்றனர். ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படும் தெர்மோகோல் பெட்டிகள், பயன்பாடு முடிந்ததும், கூவத்திலேயே வீசப்படுகின்றன. கூவத்தில் ஒரு கி.மீ.,க்கு மிகவும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
பல கோடி ரூபாய் ஏப்பம்?
இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:கூவத்திற்கு கேடு ஏற்படுத்துவதன் மூலம், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. கூவத்தில் கழிவுகளை முதலில் அகற்ற வேண்டும். பின், கழிவுகளை யாரும் கொட்டாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அதன் பின், மற்ற மேம்பாட்டு பணிகளை செய்ய வேண்டும். இது தான் சீரமைப்பு திட்டத்தின் சரியான பாதையாக இருக்கும்.
டெண்டர் விட்டு காசு பார்க்கும் நோக்கில், பூங்கா அமைப்பது, இருக்கும் கழிவுகளை அகற்றுவது என, வெட்டி வேலையை அதிகாரிகள் பார்க்கின்றனர்.முறையாக திட்டமிடாமல் செய்யப்படுவதால், தற்போதைய கூவம் சீரமைப்பு திட்டமும், பழைய திட்டங்களை போன்று, பல கோடி ரூபாய்களை விழுங்கிவிட்டு, ஒன்றும் இல்லாமல் தான் போகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி: தினமலர்
[embedit snippet=”whatsapp”]