மருந்து மரமாகிய நோனி Noni

நுணா  எட்டு மீட்டர் உயரம்வரை வளரக்கூடிய பசுமையிலை மரம். கருத்த அடித்தண்டையும் கிளைகளையும், நல்ல மணமும் வெண்மை நிறமும் கொண்ட பூக்களையும் கொண்டது (‘இருஞ்சினைக் கருங்கால் நுணவம் கமழும் பொழுது’ ஐங்குறுநூறு 342). பூக்கள் மார்ச்-மே மாதங்களில் தோன்றுபவை, தேன் நிறைந்தவை (‘நறவு வாய் உறைக்கும் நாகுமுதிர் துணவம்’ சிறுபாணாற்றுப்படை 51). இதன் மலர் சூடப்படுவதில்லை. இதன் கனி சிறப்புமிக்க கூட்டுக்கனி, தொடக்கத்தில் பசுமை நிறத்தையும், கனிந்த பின் கறுப்பு நிறத்தையும் கொண்டது; பல ‘கண்களைப்’ பெற்றது, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம்வரை மரத்தில் காணப்படும்.

பல்முனை மருந்து

நுணா நாட்டார் மருத்து வத்திலும், சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. இதன் வேர்களும் இலைகளும் சிறுநீரகக் கற்களால் ஏற்படும் வலியை நீக்கப் பயன்படுகின்றன. இலைப்பசை ஆழமான புண்கள், அரிப்பு, காயங்கள் மற்றும் முதுகுவலியை நீக்கப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இலையின் சாறு வேலிப் பருத்தி, நொச்சி, பொடுதலை ஆகியவற்றின் சாற்றோடு கலக்கப்பட்டுக் குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவற்றைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெயில் ஊற வைக்கப்பட்ட இலை தோலின் வெண்புள்ளி நோய்க்குச் சிறந்த மருந்தாகும். உப்போடு அரைக்கப்பட்ட உலர்ந்த காயின் தூளும், சுடப்பட்ட காயின் தூளும் பல் தேய்ப்பதற்காகப் பழங்குடியினராலும் சில கிராமங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

சர்வரோக நிவாரணி

இங்கு நோனி சாறு (Noni Juice) பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

நோனி என்பது மற்றொரு வகை நுணா (Morinda citrifobia). இது தமிழகத்தில் இயல்பாகக் காணப்படவில்லை என்றாலும், சில பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. சற்றுப் பெரிய, முட்டை வடிவக் கூட்டுக்கனிகளைக் கொண்ட இந்த மரத்தின் பழச்சாறு நோனி சாறு என்று அழைக்கப்படுகிறது.

இந்தச் சாறு வயிற்றுக் கோளாறுகள், கபம், நீரிழிவு நோய், மாதவிடாய் பிரச்சினைகள், காய்ச்சல், மூட்டுவலி, உயர் ரத்தஅழுத்தம், தலைவலி, இதய நோய், எய்ட்ஸ், புற்றுநோய், மன அழுத்தம், போதை மருந்துக்கு அடிமையாதலை நீக்குதல் போன்றவற்றுக்கான நல்ல மருந்தாகும். நுணாவின் கனியும் மேற்கண்ட பல மருத்துவப் பண்புகளைப் பெற்றிருப்பதால், நோனி சாறு போன்று நுணா சாற்றையும் தயாரித்து, தரப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், நுணா பசுமையிலை மரமாக இருப்பதாலும் சிறிய மரமாக இருப்பதாலும் சாலை ஓர மரமாக வளர்ப்பதற்கு உகந்த மரம் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர். | தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

நன்றி: ஹிந்து

[embedit snippet=”whatsapp”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *