தஞ்சை அகழியில் தனி ஆளாக சுத்தப்படுத்திய சென்னை பெண்!

சென்னை அண்ணா நகர் திருவல்லீஸ்வரர் காலனி மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி நர்மதா(38). இவர்களுக்கு, மகன், மகள் உள்ளனர்.

எம்.ஏ., எம்.பில்., பொருளாதாரம் படித்த நர்மதா, சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு வேலையை விட்டுவிட்டு, பொது சேவையாற்ற விரும்பியுள்ளார்.

கடந்த 26-ம் தேதி அம்பத்தூர் ஏரிக்குச் சென்ற நர்மதா, அங்கு செடி கொடிகள் மண்டி, தண்ணீர் செல்ல வழியில்லாமல் இருப்பதைப் பார்த்துள்ளார். உடனடியாக, தனி ஆளாக களத்தில் இறங்கி, அங்கு மண்டிக் கிடந்த செடி, கொடிகளை அகற்றியுள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

தகவலறிந்து வந்த அரசு அலுவலர்கள் அந்த ஏரியை தாங்களே சுத்தம் செய்வதாக தெரிவித்துள்ளனர். தனது முயற்சிக்கு உடனடி பலன் கிடைத்ததால் உற்சாகமடைந்த நர்மதா, மற்ற இடங்களிலும் இதேபோல மாற்றத்தை ஏற்படுத்த விரும்பியுள்ளார்.

இதையடுத்து, நேற்று பேருந்தில் தஞ்சாவூருக்கு வந்த நர்மதா, நகரின் நுழைவுப் பகுதியான கொடிமரத்து மூலை அருகே, தஞ்சாவூர் பெரிய கோட்டை அகழியில், ஆகாயத் தாமரை மற்றும் செடிகள் மண்டிக் கிடப்பதை பார்த்துள்ளார். பேருந்திலிருந்து இறங்கிய நர்மதா, தனி ஆளாக அவற்றை அகற்றத் தொடங்கினார். பொதுமக்கள் திரண்டு ஆர்வத்துடன் பார்த்தனர். பலரும் பாரட்டினர்.

இதுகுறித்து நர்மதா கூறும்போது, “நான் பிறந்தது சென்னை. எனது கணவரின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள சொக்கலிங்கபுரம். ராஜபாளையம் முழுவதுமே தண்ணீர் பஞ்சம் நிலவும் ஊர். அங்கு தண்ணீருக்காக மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. அதன் தாக்கம் என்னைத் தொடர்ந்தது. எனவே, நீர்நிலைகளை காக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. கடந்த மாதம் அம்பத்தூர் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டேன். அதைத் தொடர்ந்து, நேற்று தஞ்சாவூர் அகழியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டேன். இது மோசமான நிலையில் உள்ளது. கழிவு நீர் தேங்கி, கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து, பாராட்டினாலும், தூய்மைப் பணிக்கு யாரும் முன்வராதது வருத்தமளிக்கிறது. மக்களுக்கும், அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் இதைச் செய்கிறேன். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு ஊருக்குச் செல்வேன். அடுத்ததாக, வேறு ஊரில் எனது பணியை தொடர்வேன். வெறுமனே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதை விட, களத்தில் இறங்கினால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்கிறார் நர்மதா.

நன்றி: ஹிந்து

[embedit snippet=”whatsapp”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *