பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை என்பதை விளக்கத் தேவை இல்லை. என்னதான் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்றாலும், வெடிதான் நமக்கான தீபாவளிக் கொண்டாட்டம். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் வெடி இல்லையென்றால் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க முடியாது.
ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கிராமமே வெடியைத் தவிர்த்து தீபாவளியைக் கொண்டாடுகிறது. காரணம், வெளவால்.!
தருமபுரியிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வேப்பம்பட்டி கிராமம். அந்த ஊருக்கே பிரதானமாக ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளவால்கள் வசிக்கின்றன. அந்த வெளவால்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகவே தீபாவளியானாலும் வெடியை வெடிக்காமல் இருக்கிறார்கள் வேப்பம்பட்டி மக்கள். வெளவாலுக்காக யாராவது வெடி வெடிக்காமல் இருப்பார்களா.? என்று அசால்ட்டாக கேட்டால், “ஆலமர அம்மன் கோவில்” அதிசயத் தகவல்களை அள்ளி வீசுகிறார்கள்.
அங்கு உள்ள அம்மன்கோவிலில் பூசாரியாக இருக்கும் குப்பம்மாளிடம் வெடி வெடிக்காத வரலாறு பற்றி கேட்டோம் “பல தலைமுறைகளாக எங்க கிராமத்துல, வெடி வெடிக்கிறதே இல்லை. இந்த ஆலமரத்துல குடியிருக்கிற ஆயிரக்கணக்கான வெளவால்கள் அம்மனின் குழந்தைங்க என்பது எங்க முன்னோர்களுடைய நீண்டகால நம்பிக்கை. அதுதான் உண்மையும் கூட. வெளவாலுக்கு ஏதாவது பிரச்னை கொடுத்தால், அது கிராமத்துக்கே பெரிய ஆபத்தாக மாறிடும்.
இப்படித்தான் ஒரு வருஷம் ஒருத்தர் வெளவால் மேல கல்லைத் தூக்கி அடிச்சிட்டார். அம்மனுக்கு கோபம் வந்துருச்சி. பல வருஷமா மழை தண்ணி கொடுக்காம ஊரையே பஞ்சத்துல திண்டாட வச்சிட்டா அம்மன். அப்புறம், ஏதேதோ பரிகாரமெல்லாம் பண்ணி, அம்மனை சாந்தப்படுத்தினாங்க. அதுலயிருந்து அம்மனின் குழந்தைங்களை (வெளவால்கள்) யாரும் தொந்தரவு செய்றது கிடையாது. இதை சின்ன வயசுல இருந்தே குழந்தைகளுக்கும் சொல்லி வளர்ப்பதால் அவுங்களும் புரிஞ்சிகிட்டு வெடி வெடிக்கணும்னு அடம்பிடிக்கிறது இல்லை. அம்மன் குத்தம் ஆகிடக்கூடாது இல்லையா” என்கிறார்.
அந்த ஊரில் வாழும் படித்தவர்களிடம் விசாரித்தால் “ இந்த நம்பிக்கை ஊர்முழுக்க இருக்கு. அதை நாங்களும் ஏத்துக்குறோம். ஏன்னா, பல கிராமத்துல வெளவால்களே இல்லாம அழிஞ்சிருச்சி. வெளவால்கள் இருந்தால், அதன்மூலம் அந்த பகுதிக்கான உரங்கள் நிறைய கிடைக்கும். வெளவால்களால் பல நன்மைகள் இருக்கிறது. வெடியால் தீமைகள்தான் வருகிறது. அம்மன் பெயரைச்சொல்லி நல்லது நடந்தால் வரவேற்க வேண்டியதுதானே” என்கிறார்கள்.
நன்றி:ஆனந்த விகடன்