இலங்கையில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு சில ரசாயனங்கள் தான் காரணம் என்று நிலவிவரும் வாதத்தை மறுதலிக்கும் விதத்தில் புதிய அறிக்கை ஒன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடமத்திய மாகாணத்தில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான மக்களை பாதித்துள்ள ஒருவகை சிறுநீரக நோய்க்கான (Chronic Kidney Failure) காரணம் இதுவரை மர்மமாகவே இருந்துவருகின்றது.
கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் இந்தப் பிரதேசத்தில் 20 ஆயிரம் பேர் இந்த மர்மமான சிறுநீரக நோய்க்கு பலியாகியுள்ளதாகவும் சுமார் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில கிராமங்களில் மாதத்திற்கு 10 பேராவது பலியாவதாகவும் சில புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இலங்கையின் நெற்களஞ்சியங்களில் ஒன்றாக கருதப்படுகின்ற இந்தப் பிரதேசத்தில் விவசாய இரசாயனங்களின் வழியாக வரும் கிளிஃபோஸேட் (Glysophate) எனப்படும் ஒருவகை ரசாயன பாவனை தான் இந்த சிறுநீரக நோய் பெருக காரணம் என்ற ஒரு வாதம் கடந்த சில ஆண்டுகளாகவே முன்வைக்கப்பட்டுவந்தது. இந்த ரசாயனம் ஒரு களை கொல்லி. நம் நாட்டிலும் அதிகம் பயன் படுத்த படுகிறது
இன்னும் கட்மியம், ஆர்ஸனிக் போன்ற வேறு சில ரசாயனங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்ற வாதங்களும் முன்வைக்கப்பட்டன.
உலக சுகாதார நிறுவனம் அடங்கலாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிபுணர்கள் கடந்த காலங்களில் இந்தப் பிரச்சனை பற்றி பல்வேறு ஆய்வுகளை நடத்திவந்துள்ளனர்.
இப்போது, ஐந்தாண்டு கால ஆய்வொன்றை துவங்கியுள்ள நிபுணர் குழுவொன்று, இதுவரையான எல்லா ஆய்வுகளின் முடிவுகளையும் தொகுத்து அதன் முதற்கட்ட அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துள்ளது.
சர்ச்சைக்குரிய அந்த ரசாயனப் பொருட்கள் தான் இந்த நோய்க்குக் காரணம் என்ற நம்பிக்கையை மறுக்கும் விதத்தில் தங்கள் முதற்கட்ட முடிவுகள் உள்ளதாக அந்தக் குழு கூறுகின்றது.
‘இலங்கையில் சிறுநீரக நோய் பரவலாக காணப்படுகின்ற பிரதேசத்தின் நிலக்கீழ் நீரில் எங்குமே கட்மியம் இல்லை. அதுபோல, இந்தப் பிரதேசத்தில் நீரில் ஆர்ஸனிக் அதிகளவில் இல்லை’என்றார் ஆய்வுத் திட்டத்தின் இயக்குநர் டாக்டர் எஸ்.கே. வேரகொட.
பூச்சிகொல்லி மருந்துகளில் காணப்படும் கிளிஃபோஸேட் ரசாயனம் தான் இந்த மர்ம நோய்க்கு காரணம் என்ற வாதத்தையும் டாக்டர் வேரகொட பிபிசியிடம் மறுத்தார்.
‘இந்த நோய்க்கு இந்த கிளிஃபோஸேட் தான் காரணம் என்பதை உறுதியாக கண்டறியமுன்பதாகவே, அந்த ராசயனம் நாட்டில் தடைசெய்யப்பட்டுவிட்டது. கிளிஃபோஸேட்-ஐ தடைசெய்த முடிவு ஆய்வுமுடிவுகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்ற முடிவுக்கு தான் நாங்கள் வந்திருக்கின்றோம்’ என்றும் கூறினார் வேரகொட.
ஆனால், ரசாயன உரவகைகள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளின் பாவனை தொடர்பான நாட்டின் கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தினர் 2014-ம் ஆண்டில் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
உலகில் இலங்கையில் தான் விவசாய ரசாயனம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்று இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய பிபிசியிடம் அப்போது கூறியிருந்தார்.
நன்றி: பிபிசி /ஹிந்து
உண்மை என்ன என்று இன்னும் தெரியவில்லை!
இந்த சர்ச்சை நம் நாட்டிலும் தாக்கம் உண்டு. மேலும் அறிய Glyphosate Srilanka ban என்று கூகுள செய்யவும்
[embedit snippet=”whatsapp”]