‘வர்தா’ புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியான, ‘தினமலர்’ நாளிதழின், ‘மரம் செய்ய விரும்பு’ திட்டத்தின் கீழ், தனியார் அமைப்புகளுடன் கைகோர்த்து, பூந்தமல்லி அடுத்த கண்ணபாளையம் பகுதியில் நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
வர்தா புயலின் போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு விழுந்தன. வர்தாவால் இழந்த பசுமையை மீட்கும் முயற்சியில், ‘தினமலர்’ களம் இறங்கியுள்ளது.ஐந்திணை மற்றும் வானவில், ‘டிவி’ உடன் இணைந்து, மரம் செய்ய விரும்பு என்ற திட்டம் துவங்கி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஒரு லட்சம் நாட்டு மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடர்கின்றன.
இந்த திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த, கண்ணபாளையம் ஊராட்சியில் உள்ள கைத்தியம்மன் கோவில் குளம், மாதா கோவில் குளம் சுற்றியும், மேலும் அந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பூவரசம், புங்கை, அரசு, வேம்பு, ஆல், நாவல், நீர் மருது உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த மரக்கன்றுகளை, ‘தினமலர்’ நிகழ்ச்சிகள் பிரிவு துணை மேலாளர் கல்பலதா மோகன், கண்ணபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், ஐந்திணை அமைப்பைச் சேர்ந்த பிரபாகர் மற்றும், 40க்கும் மேற்பட்ட தன்னார்வ இளைஞர்கள் உள்ளிட்டோர் இணைந்து நட்டனர்.
மேலும் அப்பகுதியில் ஏற்கனவே நடப்பட்டிருந்த மரங்களை பராமரிக்கும் பணிகளிலும், வர்தாவில் சாய்ந்த வேப்ப மரங்களை நிமிர்த்தும் பணிகளிலும் ஈடுபட்டனர்.
‘தினமலர்’ நாளிதழின் மரம் செய்ய விரும்பு திட்டத்தில் இணைந்து கைகோர்க்க விரும்புபவர்கள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை, 10:00 மணி முதல் மாலை 5:00 மணிக்குள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 08300189000 .
இ – மெயில் முகவரி: events@dinamalar.in.