கடல்சூழல் தூய்மை காவலர்களாக திகழ்பவை கடல் ஆமைகள். கடற்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள், காலநிலை மாறுபாடு, கடலில் கலக்கும் கழிவுகளால் ஏற்படும் சூழல் கேடு, முறையற்ற வகையிலான மீன்பிடிப்பு போன்றவற்றால் சமீப காலமாக இந்த ஆமைகள் இனம் அழிவுக்கு உள்ளாகி வருகின்றன.
சித்தாமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை மற்றும் பச்சை ஆமை என 5 வகை கடல் ஆமைகள் இந்திய கடல் பகுதியில் காணப்படுகின்றன. இனத்தை சேர்ந்த இந்த ஆமைகளில் கருவுற்ற பெண் ஆமைகள் முட்டையிடுவதற்கு தாங்கள் பிறந்த மணற்பாங்கான கடற்கரை பகுதிகளையே நாடி செல்கின்றன. இவ்வாறு கரைக்கு வரும் ஒரு ஆமை சிறு குழியினை தோண்டி அதில் 100 முதல் 150 முட்டைகளை இட்டு அந்த குழியினை மூடிவிட்டு செல்கின்றன.
ஏழு முதல் 10 வாரங்களுக்குள்ளாக இந்த முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவரும். பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே ஆமை முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக வெளியேறுவதால் இவை மற்ற விலங்குகளிடம் இருந்து தப்பித்து கொள்ளும். குஞ்சு பொரித்த சில நாட்களில் கடலுக்கு செல்லும் இவை அலையின் திசையினை நோக்கி நீந்த தொடங்குகின்றன.
கடல் ஆமைகள் மாமிச உணவிற்காகவும், அதன் தோலுக்காகவும் வேட்டையாடப்பட்டாலும் முறையற்ற மீன்பிடி முறைகளும் கடற்கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளினாலும் இந்திய கடலோர பகுதிகளுக்கு இனப்பெருக்கம் செய்ய வரும் ஆமைக்கள் அரிதாகி விட்டன.
இந்த நிலையில் கடல் ஆமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மன்னார் வளைகுடா கடற்கரை ஓர பகுதிகளில் வன உயிரின பாதுகாப்பு அலுவலர்கள் ஆமை முட்டைகளை சேகரித்து, அவை குஞ்சு பொரிக்கும் வரை பாதுகாப்பதற்கென ஆங்காங்கே பாதுகாப்பு மையங்கள் அமைத்துள்ளனர்.
கடற்கரை ஓரங்களில் ஆமைகளால் இட்டு வைக்கப்படும் முட்டைகளை சேகரித்து இந்த மையங்களில் வைத்து குஞ்சு பொரித்த பின்னர் அவற்றை கடலில் விடும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 3 மாதங்களில் முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான கடற்கரை பகுதிகளில் இருந்து சுமார் 5500 முட்டைகள் சேகரிக்கப்பட்டு அவற்றில் இருந்து இதுவரை 240 குஞ்சுகள் பொரிக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளன.
இந்த சூழலில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள அரிய வகை ஆமை ஒன்று நேற்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், தாமரைகுளம் அருகே உள்ள வலங்காபுரி தெற்கு கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் ஒதுங்கிய இந்த பெண் ஆமையின் வயது 125 இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 250 கிலோ எடை கொண்ட இந்த ஆமை பாறையில் மோதி அடிபட்டு இறந்து கரை ஒதுங்கி இருக்க கூடும் என சொல்லப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த வன உயிரின பாதுகாப்பு வனச்சரகர் சதீஷ், வனச்சரக அலுவலர்கள் ராதா, காளிதாஸ், முனியசாமி, கருப்பன் உள்ளிட்டோர் வலங்காபுரி கடற்கரை பகுதிக்கு சென்று இறந்த ஆமையின் உடலை கைப்பற்றினர். கால்நடை மருத்துவர் சரண்யா ஆமையின் உடலை கூராய்வு செய்த பின்னர் ஆமையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.
இது போன்று ஆமையின் உயிரிழப்புகள் சமீப காலமாக அதிகரித்து வருவது குறித்து நம்மிடம் பேசிய வன உயிரின பாதுகாவலர்கள் ‘‘கடலில் வாழும் சிறு மீன்களை உணவாக கொள்ளும் சொறி மீன் எனப்படும் ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உட்கொள்கிறது. இதனால் மீனவர்களுக்கு நல்ல விலையினை ஈட்டி தரும் பல மீன் இனங்களின் வளர்ச்சியை பாதுக்காப்பதுடன், கடலின் தூய்மையையும் பாதுகாக்க கடல் ஆமைகள் பெரிதும் உதவுகிறது. மன்னார் வளைகுடா கடல் பகுதியான தனுஷ்கோடி பகுதி ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க உகந்த பகுதியாக இருந்து வந்தது. இதனால் ஏராளமான ஆமைகள் இப்பகுதியில் காணப்பட்டு வந்தன. சமீப காலமாக இதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
தனுஷ்கோடிக்கு அமைக்கப்பட்ட புதிய சாலைக்கும் கடலின் கரைக்கும் இடையே 30 முதல் 40 அடி அகலம் வரையிலான மணல் பகுதி இருந்து வந்தது. புதிய சாலையினை பாதுகாப்பதற்காக இந்த மணல் பகுதியில் பெரும் பாறை கற்களை குவித்து தடுப்புகள் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் கருத்தரித்த ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிட முடியாத சூழல் எழுந்துள்ளது.
கடற்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது. கழிவுகளை கடலில் கலக்க கூடாது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை விளக்குகள் போட கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மதிக்காத தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் லாரி லாரியாக பாறாங் கற்களை கடற்கரை ஓரங்களில் குவித்து வருகின்றனர். இது பற்றி அவர்களிடம் பல முறை எடுத்து சொல்லியும் எதையும் காதில் வாங்கவில்லை. ஒருபுறம் தடை செய்யப்பட்ட வலைகளால் மீன்பிடிப்பதும், மறுபுறம் வளர்ச்சி என்ற பெயரில் கடல் வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால் உலக உயிரின காப்பகமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்திய கடல் பகுதியான மன்னார் வளைகுடா,
வரும் காலத்தில் ஆமைகள் இல்லா வளைகுடா பகுதியாக மாறிவிடும்’’ என்றனர்.
ஒருபக்கம் மலைகளை ஆக்கிரமிப்பதால் வன உயிரினங்கள் ஊருக்குள் புகுகின்றன. மறுபக்கம் கடற்கரை ஓரங்களை அபகரிப்பதால் கடல்வாழ் உயிரிங்கள் கரைக்கு வர மறுக்கின்றன.
என்ன செய்ய போகிறது அரசு?
நன்றி: விகடன்