கடந்த 2014-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 2226 புலிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே 570 புலிகளுடன் உலகிலேயே புலிகள் மிக அதிகம் வாழும், வளமை பெற்ற பகுதியாக முதுமலை – பந்திப்பூர் – வயநாடு வனப்பகுதி அறிவிக்கப்பட் டுள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டிலுள்ள புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகிறது. தற்போது நாட்டில் 47 தேசிய புலிகள் சரணாலயங்கள் இருக்கின்றன. கடந்த 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1411 புலிகளும், 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 1706 புலிகளும் இருந்தன. 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்த எண்ணிக்கை 2226-ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள் ளது. இது 30 சதவீதம் அதிகமாகும்.

நாட்டிலுள்ள மாநிலங்கள், புலிகள் சரணாலயங்களை மொத்தம் நான்கு பகுதிகளாக பிரித்து மேற்கண்ட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி சிவாலிக் மலைத் தொடர் – கங்கை சமவெளிப் பகுதியிலுள்ள உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், பிஹார் ஆகிய பகுதிகளில் 485 புலிகளும், மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளை உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிசா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 688 புலிகளும், மேற்குத் தொடர்ச்சி மலையை உள்ளடக்கிய கர்நாடகம், கேரளம், தமிழகம், கோவா ஆகிய மாநிலங்களில் 776 புலிகளும், வடகிழக்கு மலைத் தொடர் மற்றும் பிரம்ம புத்திரா சமவெளியை உள்ளடக்கிய அசாம், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 201 புலிகளும், சுந்தரவனக் காடு களில் 76 புலிகளும் என மொத்தம் 2226 புலிகள் இந்தியாவில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இவற்றில் உலகிலேயே மிக அதிகளவு புலிகளை கொண்ட வளமை மிக்க வனப் பகுதியாக முதுமலை – பந்திப்பூர், நாகர் ஹோளே – வயநாடு வனப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மட்டும் 570-க்கும் மேற் பட்ட புலிகள் வசிப்பதாக தெரிய வந்துள்ளது.
மாநிலங்களைப் பொறுத்த வரை புலிகள் எண்ணிக் கையில் தமிழகம் 229 புலிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. தவிர, கடந்த 2006 மற்றும் 2010-ம் ஆண்டு கணக்கெடுப்புகளில் புலிகளே இல்லாத கோவாவில் ஐந்து புலிகள் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 2010-ம் ஆண்டு புலிகளே இல்லாமல் இருந்த அருணாச்சல பிரதேசத்தில் நான்கு ஆண்டுகளில் 28 புலிகள் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
நன்றி: ஹிந்து