அமெரிக்காவின் மெயின் வளைகுடாவில் பொழுது போக்குக்காகவும் வியாபாரத்துக்காகவும் பன்னா (காட்) (Cod) ரக மீன்களைப் பிடிக்கக் கூடாது என்று ‘தேசிய பெருங்கடல், வளிமண்டல நிர்வாகம்’ தடை விதித்திருக்கிறது. கடந்த நவம்பர் முதல் இந்தத் தடை அமலுக்கு வந்துவிட்டது. கிழக்கு முதல் வட கிழக்கு எல்லை வரையிலான கடல் பகுதியில் பன்னா மீன்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைந்துவிட்டதே இதற்குக் காரணம். பன்னா மீன்களின் இனத்தைப் பெருக்க அரசும் கடல் நிர்வாகமும் ஆண்டுதோறும் இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் அந்த இனமே அழிந்துவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அவற்றின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருக்கிறது.
புவி வெப்பமடைவதாலோ, பருவநிலை மாறுதல்களா லோதான் மீன்களின் எண்ணிக்கை குறைகிறது என்று நாம் நினைக்கக்கூடும். உண்மை அதுவல்ல.
நவீன பெரிய உருக்குக் கப்பல்களும், மீன்களின் இருப்பிடத்தைத் துல்லியமாக அறிய உதவும் மின்னணு சாதனங்களும், மீன்கள் இருக்கும் இடம் நோக்கி விரைவாகவும் சரியாகவும் கொண்டுசெல்ல உதவும் திசைகாட்டும் கருவிகளும் (GPS) மீன் பிடிப்பதை மிக எளிதாக மாற்றிவிட்டன. வர்த்தக நோக்கில், அதிக அளவில் மீன் பிடிப்பதற்கு இவை உதவுகின்றன.
ஒவ்வோராண்டும் மீன் பிடிப்பதற்குத் தடை விதித்துவிட்டால் மீன்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து மீண்டும் பழைய எண்ணிக்கையளவுக்கு உயர்ந்துவிடும் என்ற தவறான எண்ணம் உலகம் முழுக்கவும் இருக்கிறது. எல்லா கடல் பகுதிகளிலும் மீன்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகின்றன.

நகர்ப்புறங்களின் கழிவு நீர், ஆலைகளின் அமில – கார கழிவு நீர், கப்பல் போக்குவரத்தால் கடலில் கலக்கும் கழிவுகள் என்று கடல் பெருமளவு மாசடைந்துவருகிறது. கடலில் உள்ள மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. பவளப் பாறைகளும் கடலடித் திட்டுகளும் வேகமாக அழிந்துவருகின்றன. கடலில் சுத்த நீர் கலப்பது குறைவதால் நல்ல பிராணவாயுவின் அளவும் குறைந்து வருகிறது. இது கடலில் உள்ள தாவரங்களையும் உயிரினங் களையும் அழித்துவருகிறது. இந்தக் காரணங்களால்தான் கடலில் மீன்பாடு குறைந்துகொண்டே இருக்கிறது.
பாலைவன மணல்போல
மேற்கு அட்லான்டிக் கடல் பரப்பில் ஒரு காலத்தில் பார்க்குமிடமெல்லாம் மீன்களாகவே இருந்தன. சஹாரா பாலைவனத்தில் உள்ள மணல் துகள்களின் எண்ணிக்கைக்குச் சமமாக கடலில் மீன்களும் இருந்தன. இந்த மீனளம் வற்றவே வற்றாது என்றுதான் அனைவரும் நம்பினர். இப்போதோ பன்னா மீன்கள் அடியோடு மறைந்துவிடாமலிருக்க அவற்றைப் பிடிக்காமல் விட்டுவையுங்கள் என்று அரசு அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. கடந்த 150 ஆண்டுகளாக மீன்பிடித் தொழில்நுட்பமும் வேகமும் அதிகரித்ததால் மீன்கள் சிக்காத வலைகளும் மீன் இல்லாத கடல் பரப்புமாக அட்லான்டிக் மாறிவிட்டது.
1850-முதலே பிரச்சினை
அட்லான்டிக் கடல் பரப்பில் மீன்பாடு குறைந்துவிட்டதை 1850-லேயே மீனவர்கள் உணர்ந்தார்கள். மீன்கூட்டம் அருகிவருகிறது, மீன்களின் எண்ணிக்கை பெருக ஏதாவது செய்யுங்கள் என்று மாநில அரசையும் பெடரல் அரசையும் அவர்கள் வலியுறுத்தத் தொடங்கினார்கள். மரத்தினாலான சிறிய படகுகளில் சென்றுதான் அப்போது மீன் பிடித்தார்கள். மீன் பிடிக்கத் தூண்டில்களையும் சிறு வலைகளையும் பயன்படுத்தினர். பன்னா மீன்களுக்கு இரையாக இருந்த மென்ஹாடன் என்ற வகை மீன்களும் குறைந்துவருவது குறித்து கோல்ட்ஸ்பாரோ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கவலை தெரிவித்தார்கள். அரசு அதைத் தடுக்கச் சட்டமியற்ற வேண்டும் என்று 1857-ல் கோரினார்கள்.
ஆயினும் பன்னா மீன்களின் எண்ணிக்கை மெயின் வளைகுடாப் பகுதியில் வெகுவாகச் சரிந்துவந்தது. 1861-ல் 70,000 மெட்ரிக் டன்களாக இருந்த பன்னா மீன்பிடியளவு 1880-ல் 54,000 மெட்ரிக் டன்னாகக் குறைந்தது. 1920-களில் வெறும் 20,000 டன்களாக மேலும் சுருங்கிவிட்டது. சமீப ஆண்டுகளில் சில ஆயிரம் டன்களே பிடிபடுகின்றன. 1980-களின் நடுப்பகுதியில் ஓராண்டு மட்டும் திடீரென 25,000 டன்களாக இது உயர்ந்தது. மீன்வளம் பெருகியதால் அல்ல, ஏராளமான மீன்பிடிக் கப்பல்கள் இரட்டை மடி வலையைப் போட்டு கடலின் தரையையே பெருக்குவதைப் போல முற்றிலுமாக மீன்வளத்தைச் சுரண்டியதால் அந்த அளவுக்குக் கிடைத்தது.
மீன்பாடு மேலும் அழிந்தது
கடலடியில் உள்ள மீன்களையும் முற்றிலுமாக வழித் தெடுக்கும் நவீனத் தொழில்நுட்பங்களால் 1954-ல் மீன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டது. மீன்கள் முட்டையிடவும் குஞ்சு பொரிக்கவும் அவகாசம் தராமல் மீன் இனத்தை முற்றிலுமாக அழிக்கும் இப்போதைய முறை எதிர்காலத்தில் மீன்பிடித் தொழிலையே முடக்கிவிடும் என்று பாஸ்டன் நகரைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் ஒருவர் எச்சரித்தார்.
அந்த காலகட்டத்தில்தான் குளிர்பதனக் கிடங்குகளுடன் கூடிய நவீன மீன்பிடிக் கப்பல்களும் புழக்கத்துக்கு வந்தன. அந்தக் கப்பல்களும் பிரம்மாண்டமாக இருந்தன. கடலில் மீன்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தாலும் அந்தக் கப்பல்கள் பிடிக்கும் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. மீன்பாடு குறையக் குறைய, மீனைத் திறமையாகப் பிடிக்கும் சாதனங்கள் அதிகரித்தன. கடலில் மீன்கள் குறைந்தாலும் இந்தக் கப்பல்களால் பிடிபடும் மீன்களின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது. கடலில் ஏற்பட்டுவரும் மாற்றத்தை உணர்ந்த மீனவர்கள், தங்களுடைய குழந்தைகளைப் படிக்கவைத்து வேறு தொழிலுக்கு மாற்றிவிட்டனர். இனி கடலில் மீன்பிடிப்பது ஒரு தொழிலாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டனர்.
1% மீன்களே மிஞ்சியுள்ளன
ஜார்ஜ் வாஷிங்டன் காலத்தில் கடலில் இருந்த மீன்களில் 1% மட்டுமே இப்போது எஞ்சியுள்ளன. மீனவர்கள், அறிவியல் அறிஞர்கள், அரசியல்வாதிகள், ஆட்சியமைப்பு ஆகிய அனைத்துத் தரப்புமே சேர்ந்துதான் கடல் வளத்தை அழித்திருக்கின்றனர்.
குறுகிய கால வியாபார லாபத்துக்காக, நீண்டகால நலனைப் புறக்கணித்துவிட்டனர். மெயின் வளைகுடா பகுதியில் பன்னா மீன்களைப் பிடிக்கக்கூடாது என்று விதிக்கப்பட்ட தடை காலம் கடந்தது என்றாலும் முக்கியமானது. வரக்கூடிய ஆபத்தை ஆட்சியாளர்கள் முன்கூட்டியே ஊகித்தறியவோ, அறிந்தாலும் தடுக்கவோ தவறிவிட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.
இது அமெரிக்க நிலைமை .. நம் நாட்டில் நிலைமை என்ன? விரைவில் பார்ப்போம்…
நன்றி: ஹிந்து