உலகின் நீரில் 97 சதவீதம் கடலில் உள்ள உப்பு நீர் தான் உள்ளது. மீதமுள்ள 3 சதவீதம் மட்டுமே நன்னீர்.
நல்ல நீரில் 68.7 சதவீதம் பனிமலைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் உள்ளன. 30.1 சதவீதம் நிலத்தடி நீர். மீதமுள்ள 1.2 சதவீதம் மட்டுமே ஆறு, ஏரி, குளம் மற்றும் அணைகளில் உள்ளன. வெப்பமயமாதல், காடுகளை அழித்தல் போன்ற இயற்கைக்கு எதிரான செயலால், நீர் ஆதாரம் மிகவும் கெட்டு விட்டது. உலகில் உள்ள பல பெரிய ஆறுகள் தற்போது அழியும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளன.பல ஆறுகளில் வருடத்திற்கு 2 மாதம் நீர் ஓடினால் பெரிது. காவேரி ஆறு இப்படி என்றால், பாலாறு போன்ற ஆறுகளில் ஆண்டு முழுவதும் நீர் இல்லை
நிலத்தடி நீரையும் அளவுக்கு மேல் உறிஞ்சி வருகிறோம். இது மிகவும் ஆபத்தானது. வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்றவற்றுக்கு இதுவும் ஒரு காரணம். நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் அந்த இடத்தின் இயற்கை சமநிலைக்கே பாதிப்பு ஏற்படுகிறது.
நீரின் செலவீனம்
விவசாயத்திற்கே அதிக நீர் தேவைப்படுகிறது. அடுத்ததாக தொழிற்சாலை, வீடு போன்றவற்றில் அன்றாட தேவைக்காக நீர் பயன்படுத்தப்படுகிறது. 1970ம் ஆண்டில் உலகில் இருந்த மொத்த நீரில் 25 சதவீதத்தை பயன்படுத்தினோம். இது 1980ல் 45 சதவீதமாகவும், 1990ல் 65 சதவீதமாகவும் அதிகரித்தது. தற்போது உலக மக்களின் நீர்த்தேவை மொத்தத்தில் 80 சதவீதத்தை நெருங்கி விட்டது. இதே நிலை தொடர்ந்தால் நீர் அரிதான பொருளாகும் அபாயம் இருக்கிறது. நீர் இல்லாவிடில் உலகம் அழிந்து விடும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
மாசுபடுத்தும் காரணிகள்
மனித செயல்பாடுகளே நீர் மாசுபாட்டுக்கு முக்கிய காரணம். காற்று மாசுபட்டால் நீரும் கண்டிப்பாக மாசுபடும். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள், வேதிப்பொருட்கள் மற்றும் ஆயில், பெயின்ட் போன்றவையாலும் நீர் மாசுபடுகிறது. இந்த வேதிப்பொருட்கள் ஆற்று நீரை மட்டுமல்லாது, நிலத்தடி நீரையும் கெடுக்கிறது. நிலத்தின் இயற்கை தன்மையையே மாற்றுகிறது. வீட்டு கழிவறை மற்றும் சாக்கடை ஆகியவற்றாலும் நீர் மாசுபாடு அடைகிறது.
உலகம் முழுவதும் 25-40 சதவீதம் வரை நிலத்தடி நீரே குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. 60 சதவீத நிலத்தடி நீர் விவசாயத்துக்கு உபயோகப்படுகிறது.
சொட்டு நீர் பாசனம் அமைப்பது , நீர் அதிகம் தேவையான கரும்பு போன்ற பயிர்களின் பாசனத்தை கட்டுப்பாடு செய்வது போன்ற வழிகளால் விவசாயத்தின் நீர் தேவையை குறைக்க முடியும்
நன்றி: தினமலர்