மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் நதியின் வலி வேதனையானது. தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் காணப்படும் பள்ளங்களால், இயற்கையான ஊற்று நீரின் அளவும் குறைந்துவிட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரையோரத்தில் ஐந்தாண் டுகளுக்கு முன்பு 13 குவாரிகள் மூலம் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டது. ராட்சத இயந்திரங்களின் பேராசைக் கரங்கள் தாய் மடியைக் கிழித்தன. ஆயிரமாயிரம் லாரிகளில் தாய் மண்ணை பிற மாநிலங்களில் விற்றார்கள். இதனைத் தடுக்க நதியைப் போலவே திராணியற்று தவித்தார்கள் மக்கள்.
ஆற்று நீரோட்டம் மாறிப்போனது. மணல் அள்ளிய பள்ளங்களில் சீமை கருவேலம் வளர்ந்து மேடாகிப்போனது. மணல் மாஃபியாக்களின் போட்டியில் 25-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். மணல் கொள்ளை சமூதாய மோதல்களையும் உருவாக்கியது. நூற்றுக்கும் மேற் பட்டோர் இந்த மோதல்களில் உயிரிழந்தனர். காலம் காலமாக கவலை யின்றி குளித்த ஆற்றில் பெரும் செயற்கை பள்ளங்களும் (Whirlpool) அபாயச் நீர்ச் சுழல்களும் உருவாகின. இதில் சிக்கி சுமார் 30 பேர் இறந்தனர்.
ஐந்தாண்டுகளுக்குத் தடை
ஒருகட்டத்தில் தோழப்பன்பண்ணை பகுதியில் ஆற்றுமணல் அள்ள அனு மதிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணு நீதிமன்றத்தில் ஆஜராகி, “ஆற்றில் மணலை அள்ளுவதற்கான நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் 54,417 யூனிட் மணல் மட்டுமே எடுக்க வேண்டும். ஆனால், 65,000 யூனிட் மணல் எடுக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி நீதிமன்றம், தாமிரபரணியில் மணல் அள்ள ஐந்தாண்டுகளுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தடை வரும் டிசம்பர் 2-ம் தேதியுடன் காலாவதியாகிறது. இப்போது மீண்டும் மணலை அள்ள திட்டமிட்டு வரு கிறார்கள் அதிகார பலமிக்கவர்கள்.
பல்லாயிரகணக்கான ஆண்டுகள் தேவை ஆறுகளில் மணல் உருவாக. இவற்றை 10 ஆண்டுகளில் சூறை ஆடி ஆகி விட்டது. 5 ஆண்டு இடைவெளியில் என்ன மாற்றம் வந்திருக்க போகிறது?
4 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம்
திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது நகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 75 லட்சம் பேருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது தாமிரபரணி.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர், குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் மக்களின் தாகம் தீர்க்கிறது நதி. நகரில் மொத்தம் 12 தலைமை நீரேற்று நிலையங்களில் 46 நீர் உறிஞ்சு கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
தெற்கத்திய மாவட்டங்களின் உயிர் நாடியான தாமிரபரணியை இப்படி 10 ஆண்டுகளில் சின்னாபின்னமாகிய நம் அரசியல் வாதிகளையும் பணத்திற்க்காக அலையும் மணல் கொள்ளைகாரர்களையும் என்ன என்று சொல்வது?
நன்றி: ஹிந்து