சிங்கப்பூர் தனி தேசமாக உருவானதன் பொன்விழா ஆண்டு இது. “உலக நாடுகள் நகரக் கட்டமைப்புருவாக்கம் சார்ந்து சிங்கப்பூரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்றார் நண்பர் மு.ராமநாதன். ஹாங்காங்கில் வசிக்கும் பொறியாளரும் எழுத்தாளருமான ராமநாதனுக்கு நகர நிர்மாணம் தொடர்பாக ஆழ்ந்த பார்வை உண்டு.
பேச்சு இயல்பாக ஹாங்காங் பக்கம் திரும்பியபோது, ஹாங்காங் கூண்டு வீடுகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். ஹாங்காங்கின் கூண்டு வீடுகளும் அங்கு நிலவும் வாழ்க்கைச் சூழலும் இன்றைக்கு நகர்மயமாக்கல் ஆய்வாளர்கள் மத்தியில் உலகப் பிரசித்தம்.
கசகச அடுக்ககங்கள்
பொதுவாகவே ஹாங்காங்கின் அடுக்கங்கள் நம்மூரைக் காட்டிலும் பல மடங்கு பெரியவை. சென்னையில் 2400 சதுர அடி கொண்ட ஒரு மனையில், எல்லாத் தளங்களுமாகச் சேர்த்து 3600 சதுர அடியில் வீடுகள் கட்டலாம் என்றால், ஹாங்காங்கில் 24,000 சதுர அடியில் வீடுகள் கட்டலாம். அரசு அவ்வளவு அனுமதிக்கிறது. அரசின் வீட்டு வசதி வாரிய அடுக்கங்களே சராசரியாக 40 தளங்களைக் கொண்டவை. 50+ தளங்களைக் கொண்ட அடுக்ககங்களும் உண்டு. ஆனாலும், நெருக்கடிச் சூழல்தான்.
“ஹாங்காங்கில் வீட்டு விலையும் வாடகையும் மிக அதிகம். அதனால், அடுக்கக வீடுகள் பரப்பும் குறைவு. மூன்று அறை வீடுகளையே 800 சதுர அடிக்குள் கட்டி விடுவார்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கான இரண்டு படுக்கையறை வீடுகளுக்கே 12,000 – 15,000 ஹாங்காங் டாலர்கள் வாடகை கேட்பார்கள். வருமானத்தில் 40% முதல் 50% வரை வாடகைக்குப் போய்விடும். இதனாலேயே கணவனும் மனைவியும் வேலைக்குப் போனால்தான் குடித்தனம் நடத்த முடியும் என்றாகிவிட்டது. அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச ஊதியமான 13,300 டாலர் அல்லது அதற்கும் குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு இந்த வீடுகள் கட்டுப்படியாகாது. அவர்கள் ஒரு வீட்டை இரண்டாகவோ, மூன்றாகவோ பிரித்துக்கொண்டு அவற்றில் குடியிருப்பார்கள் அல்லது கூண்டு வீடுகளில் இருப்பார்கள். கூண்டு வீடு என்பது ஒரு சின்ன அறை அவ்வளவே. எல்லா வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களையும் அதற்குள் அடக்கியும் விடுவார்கள். மக்கள் குறைந்த பரப்பில் வாழக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். அதற்குள்தான் சமையல், படுக்கை, வாழ்க்கை எல்லாமும். ஹாங்காங்கில் கிட்டத்தட்ட 50,000 கூண்டு வீடுகள் இருக்கும்” என்றார் ராமநாதன்.
இரு ஆய்வுகள்
ஜூலை 11, 2015 கணக்குபடி, உலகின் மக்கள்தொகை 730 கோடி. இது, 2050-ல் 970 கோடியாக உயரும். ஆசியாவின் மக்கள்தொகை 440 கோடி. இது, 2050-ல் 530 கோடியாக உயரும். இந்தியாவின் மக்கள்தொகை 127 கோடி. அதாவது, உலகின் 17.5% இந்தியர்கள். இதே நிலை நீடித்தால், 2028-லேயே சீனாவை முந்தி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகிவிடுவோம். 2050-ல் இந்த எண்ணிக்கை 163 கோடியாக உயரும். புவிப்பரப்பில் நகரங்களின் பரப்பு வெறும் 2%. ஆனால், பெருந்தொகை மக்கள் அதை நோக்கிதான் ஓடி வந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் கிராமங்கள் ஆவியாக, மேலும் மேலும் ஜனநெருக்கடிக்குள்ளாகும் இந்திய நகரங்கள் 2050-ல் எப்படியிருக்கும்? 2100-ல் டெல்லியும் சென்னையும் எப்படி இருக்கும்?
உலகச் சுகாதார நிறுவனம் சில மாதங்களுக்கு முன் ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது.உலக அளவில் 1600 நகரங்களை உள்ளடக்கிய அந்த ஆய்வுப் பட்டியலில் காற்று மாசில் முதல் இடத்தில் உள்ள நகரம் டெல்லி. பட்டியலின் முதல் 10 இடங்களில் உள்ள நகரங்களில் 6 இந்திய நகரங்கள்.
முதல் 100 மோசமான நகரங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்திய நகரங்கள்.
டெல்லியில் ஒரு கன மீட்டர் காற்றில் 153 மி.கி. அளவுக்கு திட-திரவ வடிவ மாசு கலந்திருக்கிறது. இதே அளவு வாகன அடர்த்தி மிக்க நியூயார்க்கில் மாசின் அளவு 14 மி.கி. என்றால், டெல்லி சூழல் எத்தனை மோசம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இது சர்வதேச அளவிலான ஆய்வின் முடிவு. பிரதமர் நரேந்திர மோடி சில மாதங்களுக்கு முன் தொடக்கிவைத்த ‘தேசியக் காற்றுத் தரக் குறியீடு ஆய்வுத் திட்ட’த்தின் தேசிய அளவிலான முடிவுகள் டெல்லியைவிடவும் சென்னை மோசம் என்கிறது.
உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியத் தேவைகள் காற்றிலிருந்தே தொடங்குகின்றன. நம்முடைய நகரங்களை நாம் எவ்வளவு மோசமாக உருமாற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதற்கான குறியீடுகளில் ஒன்றாகவும் காற்றைப் பார்க்க முடியும். இப்போதே ஆண்டுக்குக் குறைந்தது 6.2 லட்சம் உயிர்களை இங்கு காற்று மாசு காவு வாங்கிக்கொண்டிருக்கிறது. இப்போதே இப்படியென்றால், எதிர்வரும் காலங்களில் நம் நகரங்களின் நிலைமை என்னவாகும்?
இந்தியா நிச்சயம் தன் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால், ஜனநெருக்கடியை மட்டுமே இதற்கெல்லாம் ஒரே காரணமாகச் சொல்ல முடியுமா? இந்திய நகரங்களைக் காட்டிலும் ஜனநெருக்கடி மிகுந்த நகரங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஆனால், அங்கெல்லாம்கூட இந்த நிலை இல்லை. முக்கியமான காரணம், தொலைநோக்கின்மை.
சிங்கப்பூரின் தொடர் பயணம்
இன்றைய நகர்மய சிங்கப்பூருக்கு 1819-ல் அடிக்கல் நாட்டியவர் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ். அந்நாட்களில், கிழக்கு-மேற்கு அச்சில் பிரிட்டனின் கடல் வாணிப நலனைப் பாதுகாத்துக்கொள்ள ஆழமான, பாதுகாப்பான துறைமுகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று பிரிட்டன் நினைத்தது. சிங்கப்பூர் இதற்குத் தோதான இடமாக இருக்கும் என்று கணக்கிட்டார் ராஃபிள்ஸ். நகர்மய சிங்கப்பூரின் இரண்டாம் கட்டப் பாய்ச்சல் அது ஒரு தனி நாடானதும் லீ குவான் யூ ஆட்சிக்கு வந்த பின் நடந்தது.
எனினும், எதிர்காலத்தைக் கணக்கிட்டு திட்டமிடுவது சிங்கப்பூரில் 1819-ல் தொடங்கி இன்று வரை தொய்வில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
உதாரணமாக, இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஆக்கிரமிப்புக்குள்ளானபோது, பல்லாயிரக்கணக்கான சிங்கப்பூர்வாசிகள் வீடற்ற வர்களாயினர். ஆனால், அடுத்த 30 ஆண்டுகளில் 1970-களுக்குள் வீட்டுவசதித் திட்டங்கள் மூலம் பல லட்சம் வீடுகள் கட்டப்பட்டு, எல்லோருக்கும் வீடுகள் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆரம்பத்தில் 10 தளங்களோடு தொடங்கிய அடுக்கங்கள் பின் 20,30 தளங்கள் என்றாகி, இன்றைக்கு 50 தளங்களைக் கொண்டவையாகக் கட்டப்படுகின்றன. ஒருகாலத்தில் தண்ணீர் பிரச்சினையை எதிர்கொண்ட சிங்கப்பூரின் மூன்றில் இரு பகுதி இன்றைக்கு நீரைச் சேகரிப்பதாக மாற்றப்பட்டிருக்கிறது. காற்று மாசை எதிர்கொள்ள 2030-க்குள் 30% கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்க இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள்.
வரலாற்றில் கவனிக்க வேண்டிய விஷயம், பொதுவாக சிங்கப்பூர் ஆட்சியாளர்கள் எல்லாக் காலங்களிலும் சமகால நெருக்கடிகளைவிடவும் எதிர்கால நெருக்கடிகளைக் கணக்கிட்டே நகர் நிர்மாணத்தைத் திட்டமிட்டிருக்கிறார்கள். நமக்கோ கிராமங்களைத் தக்கவைக்கவும் தெரியவில்லை; நகரங்களைத் திட்டமிடவும் தெரியவில்லை. ஒரு குடிமகனுக்கு தேசம் கொடுக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கான அடையாளங்களில் முக்கியமானது வீடு. முதலீடுகள் மென்று விழுங்கிய தென் ஆசிய மையங்களின் நெருக்கடியான மனித வாழ்வின் அடையாளம் கூண்டு வீடுகள் என்றால், இந்தியாவின் சேரிகளும் சாலையோரக் குடில்களும் எதன் அடையாளம்?
ராமநாதன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டினார். “ஹாங்காங் மக்களில் கிட்டத்தட்ட 50% மக்களுக்கு, சிங்கப்பூரில் 80% மக்களுக்கு அரசின் வீட்டுவசதி வாரிய அடுக்ககங்களே வீடு அளிக்கின்றன. ஹாங்காங் கூண்டு வீடுகளைப் பார்த்து நாம் பரிதாபப்படலாம். ஆனால், நம்மூரைப் போல வீடற்றவர்கள் / சாலையோரங்களில் வசிப்பவர்கள் அங்கு கிடையாது. குடிநீர் பிரச்சினை, போக்குவரத்து நெரிசல், புகை புழுதிக் காற்று கிடையாது. இன்றைக்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும்கூட அவர்கள் விரைவில் கடந்துவிடுவார்கள். ஏனென்றால், இப்போதே அடுத்த நூற்றாண்டுக்கு அவர்கள் திட்டமிடுகிறார்கள். அடிப்படையில் முதலாளிகள் – முதலீடுகளின் மையங்கள் இவை என்றாலும் அங்குள்ள அரசியல்வாதிகள் ஒட்டுமொத்த மக்களுக்காகக் கொஞ்சமாவது சிந்திக்கிறார்கள்.”
வீடற்ற ஏழைகள் மேம்பாலங்களுக்குக் கீழே ஒதுங்கிவிட்டால், நகரத்தின் அழகு என்னாவது என்று மேம்பாலங்களின் கீழ்பகுதியில் தந்திரமாக கூர்கற்கள் பதித்துவைக்கும் நம் ஆட்சியாளர்கள் வேகமாக நினைவுக்கு வந்து போகிறார்கள். நம் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
– சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
நன்றி: ஹிந்து