‘தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை சோலைக் காடுகளை புனரமைக்க நிபுணர் குழு அமைத்து திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’ என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை சரவணன் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறப்பட்டதாவது –
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 22 ஆயிரம் எக்டேர் சோலைக்காடுகள் (Shola Forests) உள்ளன. இந்த காடுகள் மேற்கு தொடர் மலைகளில் மலையிடுக்குகளில் மட்டுமே காணபடுகின்றன. இவற்றால் தான் மலைகளில் விழும் மழை நீர் ஸ்பாஞ் போன்று சேர்க்க பட்டு மெதுவாக ரிலீஸ் செய்ய படுகிறது.இந்த காடுகள் தான் தென் இந்தியாவின் எல்லா ஆறுகளின் மூலங்களும்.. எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்ட இந்த காடுகள் இப்போது சில இடங்களிலே மட்டுமே காணபடுகின்றன.
இவற்றிற்கு ஆபத்து ஏற்படும் வகையில் சீகை (வாட்டல்), முள்மரங்கள், யூகலிப்டஸ் மரங்கள் நட்டுள்ளனர். இவை, அதிக நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. இயற்கையாக வளரும் தாவரங்கள், புதர்களை வளரவிடுவதில்லை. வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றன. சீகை, முள்மரங்கள், யூகலிப்டஸ் மரங்களை அகற்றவும், நிபுணர் குழு அமைத்து சோலைக் காடுகளை பாதுகாக்கவும் வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி அமர்வு விசாரித்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் கோவிந்தன் ஆஜராயினர்.
கொடைக்கானல் வன அலுவலர் வெங்கடேஷன் ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கை: கொடைக்கானல், நீலகிரியில் சோலைக் காடுகளை பாதுகாக்கும் வகையில் சீகை மரம், யூகலிப்டஸ் மரங்களை அழிக்க நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டது.
களைச்செடிகளை அகற்றி சோலைக் காடுகளை புனரமைக்க தேசிய கருத்தரங்கு நடந்தது. 57 ஆயிரத்து 497 மெட்ரிக் டன் சீகை, யூகலிப்டஸ் மரங்களை அகற்றி தொழில்துறை பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். நீலகிரியில் 2019 க்குள் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.–கொடைக்கானலில் 2020 க்குள் 530 எக்டேரில் இந்த மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டது. வனவிலங்கு சரணாலயமாக கொடைக்கானல் அறிவிக்கப்பட்டதால், இத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
2014–15 ல் கொடைக்கானலில் 385, நீலகிரியில் 300 எக்டேரில் இந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட பகுதிகளில் நன்மைதரும் 60 ஆயிரம் சோலை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.
நீதிபதிகள், ‘சோலைக் காடுகளை புனரமைக்க உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி நிபுணர் குழு அமைத்து திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை 4 வாரங்கள்ஒத்திவைக்கப்படுகிறது,’ என்றனர்.
நன்றி: தினமலர்