சென்னையில், இதுவரை 114செ.மீ., மழை பதிவாகி இருந்தும், பல கோவில் குளங்கள் நிரம்பவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, குளங்கள் பற்றிய அடிப்படை தகவல்களே, இந்து சமய அறநிலைய துறையிடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சென்னையில், கடந்த அக்., 28ம் தேதி முதல், நவ., 24ம் தேதி வரை, 114 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதில், மொத்தம் 18 டி.எம்.சி., தண்ணீர் கிடைத்துள்ளது. ஆனால் வெறும், 5 டி.எம்.சி., மழை நீர் மட்டுமே ஏரி, குளம் மற்றும் நிலத்தடி நீராக சேமிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 13 டி.எம்.சி மழைநீர் வீணாக கடலில் கலந்துள்ளது.
கடந்த ஆண்டு பருவமழையில், கோவில் குளங்கள் நிரம்பாதது குறித்து, தினமலரில் படங்களுடன் விரிவான செய்தி வெளியானது.
அப்போதே, இந்து சமய அறநிலைய துறை, மாநகராட்சி மற்றும் பொதுப்பணி துறை ஆகியவை இணைந்து, கோவில் குளங்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, துார்வாரி, மழைநீர் வடிகாலை துாய்மை செய்து வைத்திருந்தால், இந்த கனமழையில், பெரும்பாலான கோவில் குளங்கள் நிறைந்திருக்கும்.
ஆனால், கனத்த மழை பெதும், பல கோவில் குளங்கள் இன்னும் நிரம்பாதது, பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
கோவில் குளங்களில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு, ஒவ்வொரு கோவிலுக்கும், ௨௦ ஆயிரம் ரூபாய் வரை செலவழித்ததாக, அறநிலைய துறை கூறுகிறது. உண்மையில், அனைத்து கோவில்களிலும் அந்த கட்டமைப்பு முறையாக செயல்படுகிறதா என, அறநிலைய துறை பரிசோதிக்கவில்லையா?
பல இடங்களில் மழைநீர் வடிகாலில், கழிவுநீர் கலப்பதால், கோவில் குளங்களை அவற்றுடன் இணைப்பதில் பிரச்னை நிலவுகிறது. எனில், மாநகராட்சியுடன் இணைந்து, அவற்றை துாய்மை செய்வதில், அறநிலைய துறை கவனம் செலுத்தவில்லையா?
சென்னையில் உள்ள எந்த கோவில் குளமும் துார்வாரப்படவில்லையே, ஏன்?
இதுகுறித்து விசாரித்த போது, மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
அறநிலைய துறைக்கு சொந்தமான குளங்கள் எத்தனை; தனியார் கோவில் குளங்கள் எத்தனை, அவற்றின் நீளம், அகலம், ஆழம், கொள்ளளவு, படிகளின் எண்ணிக்கை என, எந்தவித அடிப்படை தகவல்களும் அறநிலைய துறை தலையமையகத்தில் இல்லை.
அதேபோல், குளங்களுக்கான வரத்து, போக்கு கால்வாய் பற்றிய தகவலும் இல்லை என, தெரியவந்துள்ளது. சில தகவல்கள், அந்தந்த கோவில்களிடம் தான் உள்ளன.
ஆனால் அவற்றைக் கூட அறநிலைய துறை தலைமையகம், சேகரித்து வைக்கவில்லை. இதில் வேடிக்கை என்னவெனில், சில குளங்கள் பற்றிய தகவல்கள், சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திற்கே தெரியவில்லை. பொதுப்பணி துறையிடம் கேட்டு வாங்க வேண்டியுள்ளது.
நன்றி: தினமலர்
ஊர் உலகமெல்லாம் கணினி மையமும் மொபைலும் பெருக்கிய இன்னாளில் இப்படி ஒரு அரசு துறை! தன்னிடம் உள்ள விலை மதிப்பில்லாத நிலங்களை பற்றியும், குளங்களை பற்றியும் தகவலே தெரியாத இந்த துறையை பற்றி என்ன சொல்வது?