‘மழை வெள்ள பாதிப்புக்கு தவறான நிர்வாகம் மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தது தான் காரணம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர
விட்டுள்ளது.
சென்னை, கொளத்துாரில் உள்ள ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து, பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களை வெளியேற்ற, அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, கொளத்துார் ஏரியில் குடியிருப்பவர்களுக்கு, பட்டா வழங்கவும், ஆக்கிரமிப்பை வரன்முறை (Regularize) செய்யவும் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், வட சென்னை மாவட்ட செயலர் சண்முகம், மனு தாக்கல் செய்தார்.அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், கூடுதல் பிளீடர் கமலநாதன், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், ராஜா சீனிவாஸ், குடிநீர் வாரியம் சார்பில், வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகினர்.
மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி, எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, முதல், ‘பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:
சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டியது அவசியம் தான்; அது தான், தற்போது முக்கிய பிரச்னையாக உள்ளது. இயற்கை வளங்களான நீர், காற்று, தாவரங்கள், ஏரிகள் எல்லாம், இயற்கை நமக்கு அளித்த நன்கொடை; இத்தகைய பரிசுகள், மேலும் கிடைக்க வாய்ப்பில்லை.எனவே, மக்களுக்கு பயன் அளிக்கும் விதத்தில், எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்கும் வகையில், இந்த மதிப்பு மிக்க இயற்கை ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும்.
மனித வாழ்க்கையில், சுற்றுப்புறச்சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கை ஆதாரங்களை பயன்படுத்தி, வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதால், சுற்றுப்புறச் சூழலின் தாக்கம் பற்றி ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.வனம், ஏரிகள், ஆறுகள், வன உயிரினங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், அரசியலமைப்பு சட்டம் வழிவகுக்கிறது. ஆறு, குளங்கள், நீர் நிலைகள் எல்லாம், பொதுமக்களின் சொத்து. சுற்றுப்புற நிர்வாகத்தின் மீது அரசுக்கு மட்டுமே அக்கறை இருக்க வேண்டும் என, கூற முடியாது; பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது.
துரதிருஷ்டவசமாக, சொத்துகளை கூடுதலாக வாங்கும் ஆர்வத்தில், நீர் நிலைகளை கூட விட்டு வைப்பதில்லை. நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. மனித குலத்துக்கும், கால்நடைகளுக்கும், குடிநீருக்கு ஆதாரமாக இந்த நீர் நிலைகள் உள்ளன. இதை காக்கும் நோக்கிலும், சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டம், 2007ல் கொண்டு வரப்பட்டது.
நீர் நிலைகளை பாதுகாக்கும் சட்டத்தை மறந்து விட்டு, வளர்ச்சி என்ற போர்வையில் இயற்கை ஆதாரங்களை அரசு மறைக்கும் போது, அரசுக்கு எதிராக, மக்கள் கையை உயர்த்துகின்றனர். நீர் நிலைகளை ஆக்கிரமிப்பதால், பொது மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. ‘இயற்கை ஆதாரங்களில் ஆக்கிரமிப்புகள் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது’ என, உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளன. எனவே, மனுதாரர் கோரிய படி, ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து, பட்டா வழங்க உத்தரவிட முடியாது.
எனவே, மனுதாரர் கோரியபடி, ஏரி புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்பை வரன்முறைப்படுத்த முடியாது. மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது; மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
25 ஆண்டுகள் குடியிருந்தாலும்அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களே:
“ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்து, ஒப்படைக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக, நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன என்பதை நிராகரிக்கிறோம்; அதற்கான ஆதாரங்கள் இல்லை. அப்படியே பல ஆண்டுகளாக அவர்கள் வசம் இடம் இருந்தாலும், அவர்களுக்கு எந்த உரிமையும் வந்து விடாது; அவர்கள், ஆக்கிரமிப்பாளர்களாகத் தான் கருதப்படுவர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைகளை மீட்கும் படி, 2005 ஜூனில், உயர் நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. அதிகாரிகளின் தவறால், உயிரிழப்பும், நிதி இழப்பும், 2005 அக்டோபரில் ஏற்பட்டது.இந்த வழக்கை விசாரிக்கும் போது, மழை வெள்ளத்தால் தமிழகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருப்பதும், பலர் உயிரிழந்தது, உடைமைகளை இழந்தது கவனத்தில் கொள்ளப்பட்டது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீர் நிலைகள் அருகே வீடுஅனுமதித்தது அதிகாரிகள் தவறு:
நீதிபதிகள் மேலும் கூறியதாவது:
மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புக்கு, தவறான நிர்வாகமும் (Poor administration), அதிகாரிகள் பின்பற்றிய நடைமுறையும் தான் காரணம். நீர் நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதித்ததால், தண்ணீர் கொள்ளளவு மட்டம் குறைந்தது. அதனால், வெள்ள நீர், வழக்கமான நீரோட்டத்தில் செல்லாமல், குடியிருப்புகளுக்குள் புகுந்து, சேதங்களை விளைவித்தது; தண்ணீர் சூழ்ந்து, வீடுகள் மூழ்கின நீர் நிலைகள் உள்ள இடங்களில், வீடுகளை கட்ட அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும், ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பது போல் அதிகாரிகள் நடிப்பதும், ஆனால், திட்டமிட்ட முறையில் செயல்படாததையும், இது காட்டுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
நன்றி: தினமலர்
இப்படி உயர் நீதி மன்றம் தீர்ப்பு கொடுத்த பின்பாவது நம் அதிகாரிகள் செயல் படுவார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்