ஓசூர் மற்றும் கர்நாடக மாநில எல்லைகளில் உள்ள, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், அட்டை கூடுகள் அமைத்து, சிட்டு குருவி வளர்க்கின்றனர்.
காகத்திற்கு அடுத்து, மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை, சிட்டு குருவி. சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மொபைல் ஃபோன் டவர் அதிகரிப்பு உள்ளிட்ட காரணத்தால், வீடுகளுக்குள் கூடு கட்டி வாழ்ந்த குருவிகளை தற்போது காண முடியவில்லை என்பது பலருக்கும் வேதனையான விஷயம்.
இதனால் தான் என்னவோ இந்த இளைய தலைமுறைக்கு சிட்டுக்குருவியை பற்றி தெரியவில்லை. உலக அளவில், தற்போது அழிந்து வரும் அரிய வகை பறவை இனங்களில் சிட்டுக்குருவியும் ஒன்றாக உள்ளது. கடந்த காலங்களில், மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் சீட்டுகுருவிகள் அதிகம் பார்க்க முடிந்தது. ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்பட்ட வயல் வெளிகள், கான்கிரீட் வீடுகள், மொபைல் ஃபோன் டவர்களின் கதிர்வீச்சு போன்ற காரணங்களால் சிட்டு குருவி இனம் படிப்படியாக அழிந்து வருகின்றன. விளைநிலங்களில் தெளிக்கப்படும் ரசாயன மருந்து காரணமாக, சிட்டு குருவிகளில் இறைதேடும் இடங்கள் சுருங்கி விட்டன.

அப்படிப்பட்ட நிலையில், ஓசூர், டி.வி.எஸ்., நிறுவனத்தின் சீனிவாசன் அறக்கட்டளை, ஓசூர், தளி மற்றும் கர்நாடக எல்லை பகுதியை ஓட்டியுள்ள, 100 கிராமங்களில் உள்ள வீடுகளில், சிட்டுக்குருவிகள் வாழும் சூழ்நிலையை உருவாக்கி, அவை தங்குவதற்கு அட்டை கூடுகள் வழங்கி, சிட்டு குருவி வளர்க்க மக்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

சீனிவாசன் அறக்கட்டளை கள பணியாளர் துரையன் கூறியதாவது:
- ஓசூர் அடுத்த, கும்மாளாபுரம், கொத்தகொண்டப்பள்ளி, முத்ததுார், தளி சுற்று வட்டார பகுதிளில் உள்ள மொத்தம், 236 கிராமங்களில் அட்டை கூடுகள் வைக்க திட்டமிட்டு தற்போது, 80 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- கர்நாடக மாநிலம், ஆனைக்கல் பகுதியில், 44 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு இதில், 20 கிராமங்களில் அட்டை கூடுகள் வைக்கப்பட்டள்ளது.
- எங்களது இந்த முயற்சியால் தற்போது, 10 ஆயிரம் வீடுகளில் சிட்டு குருவிகள் வாழ்வதற்கு வசதியாக அட்டை கூடுகள் வைக்கப்பட்டுள்ளது.
- சிட்டுக்குருவியின் மொத்த வாழ்நாள், 13 ஆண்டு தான். இந்த குருவிகள் வனப்பகுதிகளில் வாழ்வதை விட, மனிதர்களுடன் நெருங்கி இருக்கவே விரும்புகின்றன. மொபைல் ஃபோன் கோபுரம் கதிர்வீச்சால் சிட்டு குருவிகள் அழிந்து வருவதாக கூறுவது மட்டும் காரணமல்ல, குருவிகள் வாழ்வதற்கான இருப்பிடம் இல்லாமல் போனதும், வயல்வெளிகளில் பயிர்களுக்கு ரசாயனம் தெளிப்பு அதிகரிப்பே முக்கிய காரணம்.சிட்டு குருவிகள் மூட்டை இடுவதற்காவே கூட்டை தேடுகிறது.
- மனிதர்களுக்கு நோய்கள் தாக்காமல் இருக்கவும், சுற்றுபுறச்சூழல், சுகாதாரத்தை காக்கும் வகையில் குருவிகள் இனம் உள்ளது. குறிப்பாக, குருவிகள் தானியங்கள் மற்றும் சாக்கடையில் உள்ள புழுக்களை விரும்பி உண்ணும்.
- வீடுகளில் இந்த குருவிகள் வசித்தால், குடும்பம் ஆலம்மரம் போல் விரித்தியடையும் என்ற நம்பிக்கையால் கிராம மக்களும், குருவிகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்.
- ஒரு சிறிய அட்டை பெட்டியில், வைக்கோலை அடைத்து வீட்டு வராண்டா, பால்கனி, மரம் என ஏதாவது ஒன்றில் சிட்டுக்குருவி கூட்டை தொங்க விடலாம். இந்தப் பறவை வீட்டிற்குள், ஒரு சிறிய கிண்ணத்தில் குளியலுக்கு வசதியாக நீர் வைக்கும் பட்சத்தில், குருவிகள் தானாகவே கூட்டை தேடி வரும். சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கிராம மக்கள், பள்ளி குழந்தைகள் மத்தியில் சிட்டுக்குருவிகளை வளர்க்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தி, சீட்டுக்குருவி இனத்தை பெருக்கி வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.