மேற்கத்திய நடன வகைகளில் ‘ஃப்ளெமங்கோ’ எனும் ஸ்பானிய நடனம் பிரசித்தி பெற்றது. லத்தீன் மொழியில் ‘ஃப்ளெம்மா’ (flamma) என்று ஒரு சொல் இருக்கிறது. ‘பற்றி எரியும் தீ ஜுவாலை’ என்பது இதன் பொருள்.
அந்தத் தீ ஜுவாலை காற்றில் எப்படி அசைந்தாடுகிறதோ, அப்படியான அசைவுகளில் இந்த நடன வகை இருக்கும் என்ற காரணத்தாலோ என்னவோ, லத்தீன் மொழியின் வேர் வார்த்தையை வைத்துக்கொண்டு ‘ஃப்ளெமங்கோ’ என்ற சொல்லை ஸ்பானிய மக்கள் உருவாக்கினர்.
ஜூவாலைப் பறவை
அதே வேர் வார்த்தையிலிருந்து தோன்றிய ஒரு பறவையின் பெயரும் இந்த நடன வகையின் பெயரை ஒத்திருக்கிறது. அது ‘ஃப்ளெமிங்கோ!’. Flamingo அழகுத் தமிழில் அது ‘பூநாரை’. ‘பூ’ என்ற சொல்லுக்குச் சிவப்பு என்ற அர்த்தமும் உண்டு. பூநாரைகளின் உடலில் மெல்லிய சிவப்பு நிறம் தென்படுவதைப் பார்க்க முடியும்.

குப்பை மேட்டுப் பறவைகள்
கடந்த 26-ம் தேதி சென்னையில் ‘மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டி’ அமைப்பால் ஒன்பதாவது ஆண்டாக ‘பறவை பந்தயம்’ நடத்தப்பட்டது. அதன் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய மும்பையைச் சார்ந்த சூழலியலாளர் சஞ்சய் மோங்கா ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டார்.
‘காடுகளுக்கெல்லாம் இனிச் செல்லத் தேவையில்லை. இனிப் பறவைகளைச் சுலபமாகக் காண்பதற்குக் குப்பை மேடுகளேபோதும்!’ என்பதே அது. அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணமிருக்கிறது.
மும்பையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பூநாரைகள் திருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது. பல வெளிநாடுகளிலிருந்து நாரைகள் ஆயிரக்கணக்கில் இந்தியாவுக்கு வலசை வருகின்றன. இவை வழக்கமாக டிசம்பர் முதல் மே மாதம்வரை தங்கியிருக்கின்றன.
தீமையில் ஓர் நன்மை
80-களின் இறுதிவரைக்கும் ஒன்று அல்லது இரண்டு நாரைகள் வந்து செல்வதே அரிதாக இருந்தது. ஆனால், 90-கள் மற்றும் அதற்குப் பிந்தைய காலங்களில் இருநூறு, இரண்டாயிரம் என அதிகரிக்கத் தொடங்கிக் கடந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் பூநாரைகள் மும்பைக்கு வலசை வந்து சேர்ந்தன.
“மும்பை தானே ஓடையின் சிறுகுடாவான ‘சூவ்ரி’ என்ற இடத்தில் நிறைய சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அவை வெப்பமான கழிவு நீரை ஓடையில் திறந்துவிடுகின்றன. அதன் காரணமாக ஓடை நீரில் நைட்ரேட், பாஸ்பேட் உள்ளிட்ட வேதிப்பொருட்களின் அளவு சமன்பட்டிருக்கும். இதனால் ‘பைட்டோப்ளாங்க்டன்’ (மிதவை உயிரிகள்) தோன்றுகின்றன. இவைதான் நாரைகளின் முக்கியமான உணவு.
சுத்திகரிப்பு ஆலைகள் வருவதற்கு முன்பு சுத்தமாக இருந்த ஓடையில் நாரைகள் தென்படவில்லை. ஆனால் அந்த ஆலைகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு அவை வெளியிடும் மாசுபாட்டால்கூட, இப்படியொரு நன்மை ஏற்பட்டுள்ளது!” என்றார் சஞ்சய் மோங்கா.
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியை ‘தானே ஓடை பூநாரை சரணாலயம்’ என்று மகாராஷ்டிர அரசு அறிவித்தது. என்றாலும், பூநாரைகள் இங்கு வருவதற்கு மோங்கா சொல்லும் காரணம் அறிவியல்பூர்வமாகவும், அதிகாரப்பூர்வமாகவும் உறுதி செய்யப்படவில்லை என்று ‘பம்பாய் இயற்கை வரலாற்று கழக’த்தின் ‘இயற்கைக் கல்வி திட்ட’ அலுவலர் அதுல் சாட்டே கூறுகிறார்.
சென்னையில் பூநாரைகள்
சென்னையில் முதன்முதலில் பூநாரைகள் வரத் தொடங்கிய இடம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 2008-ம் ஆண்டில் பூநாரைகள் முதலில் வந்தன என்கிறார் ‘நேச்சர் ட்ரஸ்ட்’ அமைப்பின் நிறுவனர் கே.வி.ஆர்.கே. திருநாரணன். அதன் பிறகு குறைந்த எண்ணிக்கையாக இருந்தாலும் ஒவ்வோர் ஆண்டும் பூநாரைகள் அங்குத் தென்பட்டுக் கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு பள்ளிக்கரணைக்கு அருகில் உள்ள, பள்ளிக்கரணை அளவுக்கு மாசுபடாத பெரும்பாக்கம் சதுப்பு நிலத்திலும் பெரிய பூநாரைகள் முதன்முறையாகத் தென்பட்டதாகக் கூறும் திருநாரணன், “இதற்கு முக்கியக் காரணம், அவற்றுக்குத் தேவையான உணவும் பாதுகாப்பும் கிடைப்பதுதான்” என்கிறார்.
பெரும்பாக்கச் சீரழிவு
கடந்த 2014-ம் ஆண்டு பெரும்பாக்கத்தின் 71.85 ஹெக்டேர் அளவு சதுப்பு நிலத்தை மாநில அரசு வனத்துறையிடம் ஒப்படைப்பதற்கான அரசாணையை வெளியிடப்பட்டது. இந்த நிலத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்பது விதி. ஆனால், இன்றுவரையிலும் அந்த இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவை செய்து, நிலத்தைப் பிரித்துத் தரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த இடங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தையொட்டி வளர்ச்சிப் பணிகளும் குப்பை கொட்டுவதும் அதிகரித்து வருவதாகப் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
நன்றி: ஹிந்து