இந்த கட்டுரை சென்னையில் உள்ள அரசியல் குள்ள நரிகளை பற்றி அல்ல!
சென்னைக்கு மிக அருகில் ரியல் எஸ்டேட் வீட்டுமனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கின்றனவோ இல்லையோ, இயற்கை செழிக்கும் இடங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பழவேற்காடு உப்புநீர் ஏரி.
இந்தியாவிலேயே மிகப் பெரிய இரண்டாவது உப்புநீர் ஏரி இது. கிழக்கிந்தியக் கடற்கரைப் பகுதியில் வலசை வரும் பறவைகள் பெருமளவு கூடும் மூன்றாவது முக்கிய நீர்நிலை இது. இதையொட்டிப் பல்வேறு சதுப்புநிலங்களும் காயல்களும் பெருமளவு உள்ளன.
நடனப் பறவை
அதிகாலையில் புறப்பட்டு பழவேற்காடு ஏரியின் காயல் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சென்று அங்குக் காணக்கிடைத்த காட்சிகளில் லயித்துக் கொண்டிருந்தோம், நாங்கள் இருந்த இடத்திலிருந்து பூநாரைகளை மிக அருகில் பார்க்க முடிந்தது. பெரிய பூநாரைகள் தங்களுடைய நீண்டு வளைந்த கழுத்தை ஆட்டிக்கொண்டு நீரில் நடக்கும்போது, பின்னணியில் இயற்கையின் அனைத்து அம்சங்களும் அதனதன் லயத்தில் ஒன்றுகூடியிருக்கும் மாயாஜாலம் தெரிந்தது.
நீண்ட இளஞ்சிவப்பு நிறக் கால்கள் நடன அசைவுகளைப் போல நடைபயில, அந்தத் தாளத்தின் இசைக்கேற்ப அவற்றின் கழுத்து ஆடி கொண்டிருந்தது. வெள்ளை நிறம் கலந்த உடலில், ஆரஞ்சும் இளஞ்சிவப்பு நிறமும் கலந்த இறக்கைகள், ஆங்காங்கே கொஞ்சம் கறுப்புத் திட்டுகள் என ஒரு தேர்ந்த ஓவியனின் சித்திரம் போலப் பூநாரைகள் நின்றுகொண்டிருந்தன. இது போன்ற காட்சிகள் ஒருசில கணங்களுக்கே காணக் கிடைக்கும், அவற்றைத் தரிசிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
புதிய வருகை
சூரியன் மேலேறி காலை ஒன்பது மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. பூநாரைகளைப் பார்த்துவிட்டு வேறொரு பகுதிக்குச் சென்று மற்ற பறவைகளைப் பார்ப்பதில் மூழ்கிக் கிடந்தபோது, சில்லென்ற தென்றல் காற்று எங்கள் மீது வீசியது. அந்த இயற்கை அழகில் மூழ்கி, பூநாரைகளின் வருகைக்காக அமைதியாகக் காத்திருந்தோம்.
அந்த இடத்தில் எல்லாமே அமைதியாக, அதனதன் போக்கில் இயங்கிக் கொண்டிருந்தன. அப்போது கரையில் இடைவெளி இல்லாமல் நிரம்பியிருந்த தாவரங்களின் இடையே ஏதோ ஒன்று நகர்வது போலத் தெரிந்தது. நாங்கள் அமைதியானோம்.


எஞ்சியுள்ள நரிகள்
காட்டின் துப்புரவாளரான இந்திய நரி (Golden Jackal) நாங்கள் இருந்த கரையை நோக்கி வர ஆரம்பித்தது. ஏரியில் நீந்திச் சென்று மீன் வேட்டையாடியது. காயல் பகுதியில் இந்திய நரியைப் பார்ப்பதே கஷ்டம், அதிலும் அது வேட்டையாடுவதைப் பார்க்கும் அரிய அனுபவம் எங்களுக்குக் கிடைத்தது.
புதர்க்காடு, புல்வெளி, காடு, விவசாய நிலம், கிராமப்புறம், புறநகர் பகுதிகளில் இவை வாழ்ந்துவருகின்றன. வாழிடம் வேகமாக அழிந்துவருவதால் நரிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் நரிகளின் எண்ணிக்கை குறைந்துவரும் நேரத்தில், பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் அவை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எஞ்சியுள்ளன.
பழவேற்காட்டின் இந்தப் பகுதிக்கு ஏற்கெனவே பல முறை நான் சென்றிருந்தாலும், நரிகளைப் படமெடுக்க முடிந்ததில்லை. இந்த முறை படமெடுக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
கட்டுரையாளர், ஒளிப்பட ஆர்வலர் : பாலாஜி லோகநாதன்
தொடர்புக்கு: bala.1211@gmail.comநன்றி: ஹிந்து