சாதி சீழ் படிந்த ஊர், பெண் சிசுக் கொலை அதிகம் நடந்த ஊர் என்று நமக்கு மோசமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தருமபுரியின் மொத்த பிம்பத்தையும், நூறு இளைஞர்கள் கரம் கோர்த்து மாற்றி இருக்கிறார்கள். இப்போது இந்த ஊர் நீர் மேலாண்மையில், மொத்த தமிழகத்திற்குமே வழிகாட்டியாக இருக்கிறது. ஆம், குப்பை மேடாக, சீமை கருவேலம் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஏரிக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள்.
இலக்கியம்பட்டி ஏரி, தருமபுரி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கூப்பிடு தொலைவில் இருக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக இந்த ஏரியின் அழுகுரல் அவர்களுக்கு கேட்கவேயில்லை.

ஆனால், தருமபுரி மக்கள் மன்றத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் ஏரியை தத்தெடுத்து அதை முழுவதும் புனரமைத்து, 3000த்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட்டு, எரிக்குள் ஆறு செயற்கை தீவுகள் உண்டாக்கி, யோகா மையம், அரைவட்ட அரங்கம் அமைத்திருக்கிறார்கள்.
இது குறித்து, தருமபுரி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் த. பாலசுப்பிரமணி கூறும் போது, “ஒரு காலத்தில் இந்த ஏரி பறவைகள் சரணாலயமாக இருந்தது. ஆனால், ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் அலட்சியத்தினால், இந்த ஏரி தன் பொலிவை இழந்து குப்பை மேடாக மாறி இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த ஏரியை தத்தெடுத்து முழுவதுமாக புனரமைத்து விட்டோம். ஏரிக்கு மீண்டும் பறவைகள் திரும்ப துவங்கி உள்ளன.”
“எங்கள் பகுதியில் இருந்த ஒரு ஏரியை நாங்கள புனரமைத்திவிட்டோம். ஆனால், எங்களால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் புனரமைக்க முடியாது. அதை அரசுதான் செய்ய வேண்டும்.” என்கிறார்.
நீர் நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றக் கோரி சூழலியலாளர் பியுஷுடன் இணைந்து, தருமபுரியிலிருந்து சென்னை நோக்கி மிதிவண்டி பயணத்தை தர்மபுரி மக்கள் மன்றத்தை சேர்ந்த இந்த இளைஞர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.
வீடியோ இங்கே –
நன்றி: ஆனந்த விகடன்