டில்லியில் சில காலம் வசித்தாலே போதும், புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் நுரையீரல் பாதிப்பு வந்து விடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. டில்லியில் வசிக்கும் மக்களில் 34.5 சதவீதம் பேர் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
டில்லியில் ஒற்றை-இரட்டை இலக்க பதிவெண் வாகன கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி சார்பில் டில்லியில் வசிப்பவர்களிடம் நுரையீரல் பாதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.
புகைபிடிக்கும் பழக்கும் உள்ளவர்கள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களிடம், வயது, பாலினம், கல்வி, புகைப்பழக்கம், டில்லியில் வசிக்கும் கால அளவு போன்ற பிரிவுடன் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை மருத்துவ கல்லூரி டாக்டர்கள் கடந்த வாரம் வெளியிட்டனர்.
ஆய்வு முடிவு அறிக்கையின்படி, டில்லியில் வசிக்கும் 34.5 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து டாக்டர் சுனீலா கார்க் கூறுகையில், டில்லியின் முக்கியமான 10 பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் நுரையீரல் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. காற்று மாசுபாட்டிற்கும், நுரையீரல் பாதிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை டாக்டர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. இதற்கு அதிகப்படியான காற்று மாசுபாடு முக்கிய காரணம். நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மூச்சுக்குழல் அழற்சியும் ஏற்படுகிறது.
நீண்ட காலமாக டில்லியில் வசிப்பவர்களுக்கும் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. டில்லியில் 5 முதல் 9 ஆண்டுகளில் வசிப்பவர்களில் 28.7 சதவீதம் பேரும், 20 ஆண்டுகள் வரை வசிப்பவர்களில் 36.7 சதவீதம் பேருக்கும் நுரையீரல் பாதிப்பு உள்ளது. டில்லியில் வசிக்கும் காலம் அதிகரிக்க அதிகரிக்க நுரையீரல் பாதிப்பின் அளவும் அதிகமாக உள்ளது . டில்லியில் வசிக்கும் இளைஞர்களில் 5 ல் ஒரு பகுதியினர் கடுமையான நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக 20 வயதிற்கு கீழ் உள்ள 17.5 சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
தலைநகர் டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக கருவில் இருக்கும் குழந்தைக்கும் சுவாச பிரச்னைகள், குறை மாதத்தில் பிறப்பது, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது, கருச்சிதைவு போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதாக லண்டன் மற்றும் இந்திய அமைப்புக்கள் நடத்திய பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்