தமிழகத்தில் மட்டும் அல்ல, கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவிலும் கடும் வெயில். வரலாறு காணாத என்னும் சொலவடை இப்போது மிகச் சரியாக கேரளாவிற்குப் பொருந்துகிறது. கடந்த 30 வருடங்களாக இல்லாத அளவிற்கு கடும் வெயிலை, 107.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை மலப்புழா மாவட்டம் உமிழ்ந்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெக்கையுடன் ஒரு தகவலைத் தருகிறது. வெயில் வெக்கையை மட்டும் தருவதில்லை என்பது நமக்கு நன்கு தெரியும், வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, பஞ்சம் இவை கடும் வெயிலின் இலவச இணைப்புகள். இந்த இணைப்புகளும் கேரள குடிமக்களின் வீட்டு வாசல் கதவைத் தட்டியுள்ளது
ஆம், முன்பு எப்போதும் கேரள மக்கள் உணர்ந்திராத கடும் தண்ணீர் தட்டுப்பாடு. குறிப்பாக காஞ்சிக்கோடு மக்கள் தினம் தினம் தண்ணீர் லாரிகள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திற்கு இது பழகிய ஒன்றென்றாலும், மரங்கள் சூழ்ந்த கேரளாவிற்கு இது புதிது.
பெப்சி தினம் சுரண்டும் ஆறு லட்சம் லிட்டர் தண்ணீர்
தண்ணீர் பஞ்சம், வறட்சி போன்ற சொற்கள் எல்லாம் சாமானிய மனிதர்களுக்குதான். நிறுவனங்களை அது என்றும் அசைத்துப் பார்த்ததில்லை.
இந்தக் கடும் வளர்ச்சியிலும் காஞ்சிக்கோடு பகுதியில் இயங்கும் பெப்சி நிறுவனம் மார்ச் மாதத்தில் நாளொன்றுக்கு 5.97 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியுள்ளது. கடும் வறட்சி நிலவும் இந்த காஞ்சிக்கோடு பகுதியில் தான், பெப்சி, யுனைட்டட் பிரைவரீஸ். எம்பி டிஸ்டலரீஸ் போன்ற தண்ணீரைச் சுரண்டும் நிறுவனங்கள் அதிகம் இருக்கிறது என்பதுதான் நகை முரண்.
மக்கள் கடும் தண்ணீர் பஞ்சத்தில் தவித்துக் கொண்டிருக்கும்போது, கேரளத் தண்ணீர் ஆணையம் ஒரு மாதத்திற்கு ஒரு கோடியே எழுபது லட்சம் தண்ணீரை யுனைட்டட் பிரைவரீஸ் நிறுவனத்திற்கு வெறும் ஏழு லட்சம் ரூபாய் விலைக்கு வழங்கி வருகிறது. தண்ணீரை இவர்கள் உற்பத்தி செய்து தருவதில்லை. அது இயற்கையின் கொடை. இவர்கள் பெரும்பாலும் நிலத்தடி நீரை உறிஞ்சியே நிறுவனங்களுக்குத் தருவதால், காஞ்சிக்கோடு சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அட்டப்பள்ளம், பி.கே. சல்லா, சுல்லிமாடு, வாளையாறு, வடகாரபதி, செப்னா, கவா போன்ற பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக ஜன ஜக்ரதா இயக்கத்தின் மாநில செயலாளர் பணிக்கர் கூறுகிறார்.
அதிகாரமற்று நிற்கும் பஞ்சாயத்துகள்
அதிக அளவில் பெப்ஸி நிறுவனம் தண்ணீரைச் சுரண்டுவதால், அந்த நிறுவனம் இருக்கும் புதுச்சேரி பஞ்சாயத்து, அந்த நிறுவனத்திற்கான அனுமதியை ரத்து செய்தது. ஆனால், அதை பெப்சி நிறுவனம் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்திற்குப் போனது, உயர் நீதி மன்றமும், பெப்சி நிறுவனத்திற்கு சாதகமாகவே தீர்பை வழங்கியது. சிறப்புப் பொருளாதார மண்டலம் பஞ்சாயத்தின் கட்டுபாட்டிற்குள் வராது என்றது உயர் நீதி மன்றம். அரசின் சட்டங்கள் எளிய மக்களுக்கானதல்ல, பெரு நிறுவனங்களுக்கானது என்று அப்பட்டமாகத் தெரிந்தது.
அதே நேரம், உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் இன்னொன்றையும் குறிப்பிட்டு இருந்தது, அரசியல் அமைப்பு ஆர்ட்டிகிள் 21, உணவு, தண்ணீருக்கான உரிமையை அனைவருக்கும் வழங்கி இருக்கிறது. அதனால், இதில் அராசங்கம் தலையிட்டு, ஒரு தீர்வைக் காண வேண்டும் என்றது நீதிமன்றம். இதன் தொடர்ச்சியாக ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, பெப்சி ஒரு நாளைக்கு 2.34 இலட்சம் தண்ணீரைத்தான் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், அந்தப் பரிந்துரையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெப்சி தண்ணீர் சுரண்டுவதையும் நிறுத்தவில்லை.
மொத்தம் 12 ஆழ்துளைக் கிணறுகள் பெப்சி வளாகத்தில் இருக்கின்றன. ஏற்கெனவே, ஆறாவது குழாயும், ஏழாவது குழாயும் வற்றும் நிலைக்கே சென்றுவிட்டது. ஆனால், பெப்சி, தண்ணீர் சுரண்டுவதை நிறுத்தியபாடில்லை. இதில் அரசாங்கமும் தலையிடுவதாக இல்லை.
பெப்சி நிறுவனம், “நாங்கள் எவ்வளவு தண்ணீர் எடுக்கிறோமோ, அதே அளவு தண்ணீரை மீண்டும் பூமியில் செலுத்தும் முறைகளை கையாண்டுகொண்டு இருக்கிறோம்” என்கிறது.
மக்களுக்கான அரசா… இல்லை நிறுவனங்களுக்கான அரசா?
ஒவ்வொரு முறை இயற்கை பேரிடர் நடக்கும்போதெல்லாம், ‘Man Made Disaster’ என்கிற பதம் பயன்படுத்தப்படுகிறது. அதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆனால், அதே வேலை அது மட்டுமே முழு உண்மையும் இல்லை.
இந்தப் பதம், அரசு தன் கடமையிலிருந்து தப்பிக்கவே உதவுகிறது. அரசு சில விஷயங்களில் தலையிட்டு கடுமையான முடிவுகளை எடுக்கும் பட்சத்தில், சில அழிவுகள் தடுத்து நிறுத்தப்படும். இதுவும் அத்தகைய ஒன்றுதான். கடவுளின் தேசம், சாத்தானின் கரங்களுக்குள் செல்வதற்குள் அரசு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.
– மு. நியாஸ் அகமது
நன்றி: விகடன்