தமிழக ஏரிக்கு வரும் நீர் வரத்து கால்வாயை ஒட்டி, ஆந்திராவில் உள்ள பழச்சாறு தொழிற்சாலையின் கழிவுகள் குவிக்கப்பட்டு வருவதால், தமிழக பகுதிக்கு உட்பட்ட நீர்நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மாசு அடைந்து, தண்ணீர் கருமை நிறத்துடன் காணப்படுவதால், கிராமவாசிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட பாலகுண்டா என்ற கிராமத்தில் தனியார் பழச்சாறு உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. அந்த தொழிற்சாலையின் கழிவுகள், தமிழக எல்லையை ஒட்டியுள்ள பகுதியில், 10 ஏக்கர் பரப்பில் பள்ளம் எடுத்து குவிக்கப்பட்டு வருகிறது.
கழிவுகள் குவிக்கப்படும் பகுதியை ஒட்டி, தமிழக ஏரிகளுக்கு மழைநீர் மற்றும் ஆந்திர ஏரிகளின் உபரி நீர் கொண்டு செல்லும், ராலகால்வாய் மற்றும் சவட்டகால்வாய் அமைந்துள்ளன. மழைக்காலங்களில், அந்த கழிவுகளுடன் மழைநீர் கலந்து, இரு கால்வாய்களில் செல்லும் தண்ணீர் கருமை நிறத்துடன், துர்நாற்றம் வீசுகிறது.
கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையில், அந்த அசுத்தமான தண்ணீர், போந்தவாக்கம் புது ஏரி மற்றும் பெரிய ஏரியில் கலந்து, அங்கிருந்து மாநெல்லூர் புது ஏரி மற்றும் பெரிய ஏரியை அடைந்துள்ளது.
இதனால், சுற்றியுள்ள கிராமங்களின் நீர் நிலைகள் மற்றும் ஏரிகளின் நீர் பாசனத்தை நம்பி உள்ள, 952 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என கிராமவாசிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தொழிற்சாலையின் கழிவுகள் குவிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி, கால்வாய் மற்றும் ஏரிகளை சுத்தம் செய்து, நீர் நிலைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என, ஒட்டுமொத்த கிராமவாசிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஐவண்ணன் கூறுகையில், ”மாசு அடைந்த, தமிழக நீர் நிலைகளின் தண்ணீரின் மாதிரிகளை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் ஆய்வுக்கான சேகரித்துள்ளனர். அந்த ஆய்வு அறிக்கையுடன், சுற்றியுள்ள தமிழக கிராமங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என வருவாய் ஆய்வாளரின் அறிக்கையும் இணைத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றார்.
ஆந்திர பழச்சாறு தொழிற்சாலையின் கழிவுகள், தினசரி 50 முதல் 60 டிராக்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் குவித்து வருகின்றனர். இதனால் சுற்றியுள்ள கிணறு, கால்வாய், ஏரி, குட்டை ஆகிய நீர் நிலைகள் மாசு அடைந்து துர்நாற்றம் வீசுவதால், எதற்கும் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாசு அடைந்த நீர் நிலைகளில் உள்ள தண்ணீரை தமிழக அரசு சேகரித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, பாதிப்புக்கு காரணமான அந்த தனியார் பழச்சாறு தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
நன்றி: தினமலர்