கோபி அருகே, சாலை விரிவாக்க பணியின் போது, வேருடன் அகற்றி இடம் மாற்றி நடப்பட்ட புளிய மரங்கள், பசுமையாக துளிர் விட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம், கோபி – குன்னத்துார் சாலை, ஒட்டவலவு அருகே, ‘எஸ்’ வடிவில் குறுகிய திருப்பமாக இருந்தது. இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, இச்சாலையை விரிவாக்கம் செய்ய முடிவானது.
இதற்கு இடையூறாக, பழமை வாய்ந்த, 33 புளிய மரங்கள் இருந்தன. மரங்களை வெட்டி அகற்ற மனமில்லாத நெடுஞ்சாலைத் துறை, அம்மரங்களை ஆணி வேருடன் பிடுங்கி, வேறிடத்தில் நட திட்டமிட்டது; ஆக., 27ல், மரங்கள் அகற்றப்பட்டன. ஒட்டவலவு – கொளப்பலுார் சாலையில், லிங்கப்ப கவுண்டன்புதுார் முதல் கல்லுமடை வரை, சாலையோரத்தில், புளிய மரங்கள் நடப்பட்டன.
மழை பெய்யாததால், மரங்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டது. இதனால் விலைக்கு தண்ணீர் வாங்கி, மரங்களை பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர், 1,600 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி, நெடுஞ்சாலைத் துறையினர் ஊற்றினர். ஊற்றிய தண்ணீரின் ஈரப்பதத்தை தக்க வைக்க, மரத்தின் நடுத்தண்டு பகுதியில், நார்ச்சாக்கு கட்டப்பட்டது. ஆணி வேர் விரைவில் வளர்ச்சி பெற, 15 நாளைக்கு ஒரு முறை, ‘ரூட் மேக்கர்’ என்ற உரமிடப்பட்டது.
இதன் விளைவாக, ஓரிரு மரங்களை தவிர, அனைத்து மரங்களும் தற்போது துளிர் விட்டு வியக்க வைத்துள்ளன.
அதே சமயம் வளைவாக இருந்த, ஏழு மீட்டர் சாலை, 90 லட்சம் ரூபாய் செலவில், 15.20 மீட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டு, தார்சாலையாக மாற்றும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது!
நன்றி: தினமலர்
தமிழ் நாடு நெடுஞ்சாலைத் துறைக்கு பாராட்டுக்கள்!!
இதே முறையை இந்தியா முழுவதும் செயல் படுத்தினால் அநியாயமாக மரங்களை வெட்டுவது குறையுமே!
[embedit cf=”whatsapp”]