ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் ஐந்து அரிய வகை கடல் ஆமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உலகில் 225 வகையான கடல் ஆமைகள் வாழ்கின்றன. இதில் பேராமை, பெருந்தலை, தோணி, ஆலிவ், அலுங்கு ஆகிய ஐந்து வகை ஆமைகள் இந்தியாவில் உள்ளன.
இந்த ஆமைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகம் உள்ளன.பேராமை கடற்பாசிகளையும், அலுங்கு ஆமை கடற் பஞ்சுகளையும், பெருந்தலை ஆமை நண்டுகள் மற்றும் மெல்லுடலிகளையும், தோணி ஆமை ஜெல்லி மீன்களையும் உண்கிறது. ஆமைகளின் கண்கள் சிறிதாக இருந்தாலும் பார்வை மிகவும் கூர்மையானது. தோல் கடினமாக இருக்கும்.
ஆழ்கடலில் இனப்பெருக்கம் செய்யும். கருவுற்ற பெண் ஆமைகள் கடற்கரையில் மணலில் ஆழமான குழி தோண்டி முட்டையிடும். இதற்காக பல ஆயிரம் கி.மீ., கூட பயணிக்கும்.பெருந்தலை ஆமைகளைத் தவிர, மற்ற ஆமைகள் இந்திய கடற்கரையில் முட்டையிடும்.
இவைகள் 50 முதல் 80 செ.மீ., ஆழத்தில் குழி தோண்டி 200 முட்டைகள் வரை இடும். பின் அவற்றை மண்ணால் மூடிச்செல்லும்.
பொதுவாக ஆமைகள் நவ., முதல் ஏப்., வரை முட்டையிடும். தமிழகத்தில் தரங்கம்பாடி பழையாறு கடற்கரை, மாமல்லபுரம், சென்னை கடற்கரை, பாயின்ட் காலிமர் நாகப்பட்டினம் கடற்பகுதிகளில் அதிகளவு முட்டையிடுகின்றன. ஆலிவ் ஆமைகள் அதிகளவில் சென்னை கடற்கரையில் முட்டையிடுகின்றன.
சூரிய வெப்பத்தில் 60 முதல் 90 நாட்களில் முட்டை பொரித்து வெளிவரும் குஞ்சுகள் ஊர்ந்து கடலுக்குள் சென்றுவிடுகின்றன.இந்த வகை ஆமைகள் கடலில் மீன்பிடி விசைப்படகுகள், இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளால் அதிகளவு உயிரிழக்கிறது.
உணவு, தோலுக்காகஆமைகள் கொல்லப்படுகின்றன. ஆமையில் இருந்து பெறப்படும் எண்ணையில் மருந்து பொருட்கள், வாசனை திரவியங்கள், சோப்புகள், ரத்தம் மூல நோய்க்கு மருந்தாகவும், ஆமைகளின் ஓடுகள் அலங்கார பொருட்கள், காலணிகள் செய்ய பயன்படுத்தபடுகிறது. கடற்கரையில் ஆமைகளின் முட்டைகளை விலங்குகள், மனிதர்கள் சேதப்படுத்துகின்றனர்.
இதனால் மன்னார் வளைகுடாவில் வாழும் ஐந்து வகை ஆமைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடல்வள பாதுகாவலனாகவும், கடல் துாய்மை காவலர்களாகவும் ஆமைகள் விளங்குகின்றன. கடலில் அரிய வகை பவளப்பாறைகள் ஆமைகளால் பாதுகாக்கப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் சமீப காலமாக பெருந்தலை, பச்சை ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகிறது.
வனத்துறை அதிகாரிகள் ஆமைகளை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும். வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ வன உயிரின பாதுகாப்பு சட்டம் அட்டவணை 1ல் ஆமைகள் உள்ளன. இவை மீன் வலைகளில் சிக்காமல் இருக்க ‘டெட்’ என்ற ஆமை தவிர்ப்பு கருவியை பொருத்த மீனவர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். ஆமைகளை பிடித்தால் 3 முதல் 7 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும். இது குறித்த கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளோம்,’ என்றார்.
நன்றி: தினமலர்
[embedit snippet=”whatsapp”]