கட்டட கழிவை கொட்டி சென்னை நெமிலிச்சேரி ஏரி அழிப்பு

பல்லாவரம் நெமிலிச்சேரி ஏரி, மெல்ல மெல்ல மாயமாகி வருகிறது. ஏரியில் கட்டட கழிவை கொட்டி, வாகன நிறுத்தமாக மாற்றும் செயலில், சமூக விரோத கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

பல்லாவரத்தை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில், நெமிலிச்சேரி ஏரி உள்ளது. குரோம்பேட்டை பாரதிபுரம் முதல் அஸ்தினாபுரம் நேதாஜி நகர் வரை, பரந்து விரிந்து காணப்பட்ட இந்த ஏரி, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

ஒரு காலத்தில், இந்த ஏரியை நம்பி விவசாயம் நடந்தது. பின், காலப்போக்கில் குடியிருப்புகளின் அதிகரிப்பால், விவசாயம் தடைப்பட்டு, நிலத்தடி நீருக்கு மட்டுமே பயன்பட்டது. இதை சாதகமாக்கி கொண்ட அரசியல்வாதிகள், ஏரியை ஆக்கிரமித்து, ‘பிளாட்’ போட்டு விற்பனை செய்தனர்.

தற்போது, சுருங்கி குட்டை போலாகி விட்டது. மேலும், ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து, ஏரி ஒன்று இருப்பதே தெரியாத அளவிற்கு மாறிவிட்டது. கழிவு நீரும் கலப்பதால், நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதோடு, நிலத்தடி நீரும் மாசடைந்து விட்டது.

Courtesy: Dinamalar

மற்றொரு புறம், கட்டட கழிவை கொட்டி, ஏரியை ஆக்கிரமிக்கும் செயலும் அதிகரித்துள்ளது. ஜமீன் ராயப்பேட்டை பகுதியில், ஏரி கரையில், கட்டட கழிவை கொட்டி சமப்படுத்தி, வாகன நிறுத்தமாக மாற்றி வருகின்றனர். ஒரு பகுதியில், மரக்கிளைகளை கொட்டியுள்ளனர். இதற்கு எதிர்புறத்தில், கட்டடங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஜமீன் ராயப்பேட்டையில், சிறிய நீர்நிலைகளும் இருந்தன. காலப்போக்கில், அவை மாயமாகி விட்டன. தற்போது, நெமிலிச்சேரி, பொத்தேரி ஏரி மட்டுமே உள்ளன. அவையும், குட்டையாக மாறி வருவது வேதனை அளிக்கிறது. இதற்கு, உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவு தான் முக்கிய காரணம். எந்த அரசு துறை அதிகாரிகளும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதற்கு, கையூட்டு பெறுவதும், அரசியல்வாதிகள் மீதுள்ள பயமும் தான் காரணம். இந்த ஏரிகளையும் இழந்து விட்டால், எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்னையால், நம் சந்ததியினர் கஷ்டப்படுவர்.

நன்றி: தினமலர்

ஜல்லிக்கட்டுக்கு போராடிய நாம் அழிந்து வரும் நீர் நிலைகளை காப்பாற்ற போராட வேண்டாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *