“எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடட்டும்”-யானைகளிடம் அன்பு காட்டும் கிராமத்து விவசாயிகள்!

மேட்டூர் அருகே உள்ள பன்னவாடி பரிசல் துறையில் வயலுக்குள் மூன்று யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது’ என்ற செய்தியை நேற்று நீங்கள் படித்திருக்கக் கூடும்.

பொதுவாக யானைகள் ஊருக்குள் புகுந்தால், கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்களை நாசம் செய்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என்ன செய்வார்கள்.? வெடி வைத்தும், சத்தம் எழுப்பியும் காட்டுக்குள் விரட்டியடிப்பார்கள். அடுத்ததாக யானைகளிடமிருந்து பாதுகாப்பு கொடுங்கள் என வனத்துறையினரிடம் முறையிடுவார்கள். பயிர்களை நாசம் செய்த யானைகளை சகட்டுமேனிக்கு திட்டித்தீர்பார்கள். அத்தோடு நிற்காமல், சில இடங்களில் யானைகளை சுட்டுக் கொலை செயலும் அரங்கேறியிருக்கிறது. ஆனால், பன்னவாடி பரிசல்துறை மக்களோ, “அதுவும் வாயில்லா ஜீவன்தானே.. அதுங்க பசிக்கு என்ன பண்ணும்” என்று யானைகளின் மீது பாசமழை பொழிகிறார்கள்.

மூன்று யானைகள்

நேற்று முன்தினம் மேட்டூர் அணை அருகே உள்ள பன்னவாடி பரிசல் துறையை மூன்று யானைகள் முகாமிட்டு, அங்கு விளைவிக்கப்பட்டிருந்த சோளப் பயிர்களை சூறையாடின. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான கரடி மடுவு பள்ளம், தோணி மடுவு, மாறி மடுவு, சந்தனகுப்பு பள்ளம் ஆகிய வனப்பகுதிகளில் தண்ணீர் இல்லை.

அங்கு உலவிக்கொண்டிருந்த மூன்று யானைகள் தண்ணீருக்காக வெளியேறி பன்னவாடி பரிசல் துறையை அடைந்தன. யானைகள் இந்தப் பகுதிக்குள் நுழைவதெல்லாம் அரிதான விஷயம். ஏனெனில் இது மேட்டூர் அணையை ஒட்டியுள்ள பகுதி. வனத்தை ஒட்டியுள்ள காவிரிப்படுகையில் தாகத்தை தீர்த்துக் கொள்வதுதான் யானைகளின் வழக்கம். இந்த முறை காவிரி முழுக்க காய்ந்து, கடுமையான வறட்சி நிலவுகிறது. வனங்களும் யானைகள் வாழும் சூழலில் இல்லை. யானைகளுக்குத் தேவையான உணவுகளும், தண்ணீரும் வனங்களில் இல்லை. அதனால்தான் தர்மபுரியிலும், கிருஷ்ணகிரியிலும், கோயமுத்தூரில் இருந்து யானைகளின் இறப்புச் செய்தி வந்துகொண்டே இருக்கின்றன.

யானைகள்

பன்னவாடியைச் சேர்ந்த செல்வியிடம் பேசினோம்,

“முந்தா நேத்து ராத்திரி மூணு யானைகள் சோளக்காட்டுக்குள்ள புகுந்து முக்கால்வாசி பயிரை சாப்பிட்டுச்சு. அணையில தண்ணி இருக்கும்போது இங்க விவசாயம் பண்ண முடியாது. கோடையில் மட்டும்தான் இங்க விவசாயம் பண்ணுவோம். இது காலங்காலமா உள்ள நடைமுறை. இங்க இருக்க நாப்பது குடும்பமும் அப்படித்தான் பிழைப்பு நடத்துறோம். தண்ணி இருக்குறப்போ மீன் பிடிக்கிறதுதான் பிழைப்பு. இதுவரைக்கும் யானைகள் இந்தப் பக்கம் வந்ததே கிடையாது. இந்த வருஷம் காட்டுக்குள்ள சுத்தமா தண்ணி இல்ல. அதான் வெளியில் வந்துடுச்சிங்க. நாங்க இரண்டு ஏக்கர் சோளம் போட்டிருந்தோம். இதுவரைக்கும் முப்பதாயிரம் ரூபாய் செலவாகியிருக்கு. இன்னும் கொஞ்ச நாளில் அறுவடை பண்ணிடலாம்னு இருந்தோம்.ஆனால், அதுக்குள்ள யானைகள் புகுந்து, ஒரு ஏக்கர் சுத்தமா காலி ஆயிடுச்சு.

மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு. ஆனால், அந்த யானைகளை பார்க்கும்போது ரொம்ப பாவமா இருந்தது. எவ்ளோ பெரிய உருவம், அது தண்ணி இல்லாமல் என்ன பண்ணும் சொல்லுங்க..? சின்ன உருவமா இருக்குற நமக்கே அடிக்கிற வெயிலில் நாக்கு வறண்டு போயிடுது. நமக்காவது போர்வெல் தண்ணி, பாட்டில் தண்ணினு கிடைக்குது. பாவம் வாயில்லா ஜீவனுங்க அதுங்க எந்தப் பாட்டில் தண்ணியைப் போய் குடிக்கும்? அதை நினைக்கும்போது சோளம் போன கஷ்டத்தை பெரிசா எடுத்துக்க முடியலை. முதலில் விரட்டுறதுக்கு முயற்சி செய்தோம். ஆனா அதுங்களை பார்க்கப் பார்க்க எங்களுக்குத் துரத்த மனசு வரலை. அதுங்க மேயுறதுலயே குறியா இருந்தது. அதுங்க நிலையைப் பார்த்ததுக்கு அப்புறம் சாப்பிட்டு போகட்டும்னு விட்டுட்டோம். முடியாதவங்களுக்கு நாம உதவுறது இல்லையா? அதுபோல நினைச்சு சந்தோஷப்பட்டுகிட்டோம், அதுங்க எவ்ளோ சாப்பிடணுமோ சாப்பிட்டுட்டு போகட்டும்” என்று சொல்லும் செல்வியின் குரல் கம்மிப்போய் இருந்தது.

விவசாயிகள்

 

அடுத்ததாகப் பேசிய அரவிந்தன், “யானைகள் நுழைஞ்சிடுச்சினு ராத்திரி தகவல் வந்தப்போ எல்லாரும் கொஞ்சம் பயந்தோம். யானைகளை எப்படியாவது விரட்டி பயிர்களை காப்பாத்திடணும்னுதான் நெனைச்சோம். ஆனால், அந்த யானைங்களோட கண்ணை பார்த்தப்போ ஏதோ மாதிரி ஆகிடுச்சிங்க. எல்லாருக்கும் போட்ட முதலெல்லாம் மோசமாகிடுச்சேனு வருத்தம் இருக்கத்தான் செய்யுது. அதையும் மீறின ஒரு சந்தோஷமும் இருக்கு. ஏதோ எங்களால் முடிந்ததை அந்த யானைகளுக்கு செய்திருக்கோம்னு ஒரு திருப்தி” என்றவர், சிறு புன்னகையை சிந்தியபடி நகர்ந்தார்.

யானை வழித்தடத்தை அழித்து கட்டிடம் கட்டுபவர்கள் மத்தியில் ‘ஈரமான மனசுள்ளவங்க இன்னும் இருக்கத்தான் செய்யுறாங்க’ என்று நினைத்து கனத்த மனதுடன் அங்கிருந்து புறப்பட்டோம்.

நன்றி: ஆனந்த விகடன்

 

 

One thought on ““எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடட்டும்”-யானைகளிடம் அன்பு காட்டும் கிராமத்து விவசாயிகள்!

  1. Clawscar says:

    மிக அருமையான பதிவு. அந்த யானைகள் அங்கே இருந்த போது, நான் என் நண்பருடன் நந்தியை பார்க்க போயிருந்தேன். அங்கே வெடி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *